14 Aug 2013

நாடோடி எக்ஸ்பிரஸ் - மாஞ்சோலை நோக்கி ஒரு த்ரிலிங் பயணம்

மாஞ்சோலை பயணம் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள் 

நாடோடி எக்ஸ்பிரஸ் - மாஞ்சோலை மலை உச்சி நோக்கி ஒரு த்ரிலிங் பயணம்


**********

பொதிகை எக்ஸ்பிரஸ் மெல்ல தென்காசிக்குள் நுழையத் தொடங்கியிருந்த நேரம்,காலுக்கு அடியில் படர்ந்து விரிந்த வயல்வெளிகள், சுதந்திரமாக சுற்றித் திரியும் மயில்கள், தூரத்தில் பொதிகை மலை என அனைத்தும் ரம்யமாய் பசுமையாய் தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தன. புட்போர்டில் அமர்ந்து இந்தக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்த போது மணிவண்ணன் என்னிடம் "சீனு அந்த மலைக்கு தான் நாம போக போறோமா? ",  "ஆமா மணி, அங்க தான் போகப் போறோம், அங்க தான மாஞ்சோலை இருக்கு".

இரண்டு நிமிட மௌனம், நம்ப முடியாமல் மீண்டும் ஒருமுறை ஆர்வமாய் கேட்டான் "அந்த மலைக்கு தான் நாம இப்ப போகப் போறோமா?" முதல் முறை மாஞ்சோலை செல்லும் பொழுது எனக்குள் இருந்த ஒரு ஆர்வம் இப்போது அவனிடமும் இருந்தது.

மணிமுத்தாறு அருவியில் தண்ணீர்வரத்து குறைந்திருந்தாலும் அதன் வேகம் குறைந்திருக்கவில்லை. மிகச்சிறிய மற்றும் உயரம் குறைவான  அருவி என்றாலும் இந்த அருவியில் இருந்து நீர் விழும் சமதளத்திற்கும், அதன் அருகில் இருக்கும் தடாகதிற்கும் இடையில் இருக்கும் இடைவெளி மிக மிகக் குறைவு, மேலும் நீர் சென்று சேரும் தடாகம் மிக ஆழமானது, குறைந்தது எண்பது அடி இருக்கும். இந்த தடாகம் முழுமையும் பாறைகளால் ஆனது. ஒருவேளை தவறி விழுந்தோம் என்றால், விழுந்த வேகத்தில் நமது கால் ஏதேனும் பாறை இடுக்கில் சிக்கிக் கொள்வதற்கான வாய்புகள் அதிகம். 

பெண்கள் பகுதியில் குளிப்பதற்கு பயமேதும் இல்லை, ஆனால் ஆண்கள் பகுதி சற்றே அபாயகரமானது. அருவியின் மேலிருந்து விழும் நீரின் வேகத்திற்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாவிட்டால் நம்மை வரவேற்பது தடாகமும் பின்பு அகாலமுமாகத் தான் இருக்கும். நீச்சல் தெரிந்திருந்தும் பாறைகளில் சிக்கி இறந்தவர்களே அதிகம். இந்த எச்சரிப்புப் பலகையை அருவியின் அருகே காணலாம்.
பயண அலுப்பு தீரும்வரை இந்த அருவியில் குளிக்க வேண்டும் போல் இருந்தாலும் பாதுகாப்பு கருதியும், இருட்டுவதற்கு முன் குதிரைவெட்டி செல்ல வேண்டும் என்பதாலும் பதினைந்து நிமிடத்தில் அருவியில் குளித்து முடித்து கிளம்பினோம்.

காய்ந்து, பசுமையற்ற, உயரம் குறைவான செடி கொடிகள் அடங்கிய மலைதொடருடன் தொடங்கும் மலைப் பயணத்தில் குதிரை வெட்டியை சென்று சேர மூன்று மலைகளைக் கடக்க வேண்டும். முதல் ஒருமணி நேரத்திற்கு வெயிலின் தாக்கம் தெரியாவிட்டாலும், காற்றும் வெயிலும் குளிர்ச்சியும் இல்லாத ஒரு வெறுமையான இடத்தில் பயணிப்பது போன்ற உணர்வையே நம்மால் உணர முடியும். 

இங்கிருந்து மலை உச்சி நோக்கிப் பயணிக்க பயணிக்க சமதளத்தின் அகன்ற பரப்பையும் தாமிரபரணியின் நீட்சியையும் மிகத் தெளிவாக ரசிக்கலாம். இந்தக் காட்சிகள் திடிரென்று மாறி எங்கும் பள்ளம் மற்றும் பெரும் பள்ளம் மட்டுமே நம்முடன் பயணிக்கத் தொடங்கும். காதுகள் அடைக்கும் அளவிற்கு மெல்லிய பனி  எங்கும் ஊடுருவத் தொடங்கியிருக்கும். பெரும்பாலான நேரங்களில் வேன் முதல் கியரிலேயே ஏறிக் கொண்டிருந்தது. 



மணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலை செல்வதற்கு குறைந்தது இரண்டரை மணிநேரம் ஆகும். மாஞ்சோலைக்குள் நுழையும் முன் மற்றொரு செக்போஸ்ட் நம்மை வரவேற்கும், இது தேயிலைத் தோட்டத்திற்குச் சொந்தமானது. இங்கே நம்மிடம் இருக்கும் அனுமதி விண்ணபத்தைக் காண்பித்தாலே போதுமானது.

செக்போஸ்ட் கடந்து மாஞ்சோலையினுள் நுழையும் போதே நம்மை முதலில் வரவேற்பது வனப்பேச்சி அம்மனும் சில தேவாலயங்களும். எங்கு திரும்பினாலும் தேயிலைத் தோட்டங்கள்.  அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் மற்றும் இங்கிருக்கும் அத்தனை ஊர்களிலும் தவறாமல் இருப்பது ஒரு போஸ்ட் ஆபீசும் டீக்கடையும். மாஞ்சோலை டீக்கடையில் சுடச்சுட கிடைக்கும் தேநீர் தவற விடக்கூடாத உற்சாக பானம்.

மாஞ்சோலைக்கு அடுத்ததாக மிக முக்கியமான பகுதி நாலுமுக்கு என்னும் இடம், இங்கு செல்லும் வழியில் இடைப்படும் கிராமத்தின் பெயர் காக்காச்சி. மாஞ்சோலையில் இருந்து காக்காச்சி செல்லும் வரை குறுக்கிடும் அத்தனை வளைவுகளுமே மிக பெரிய மிக அபாயமான கொண்டை ஊசி வளைவுகள், இதனை இவ்வூர் மக்கள் "காக்காச்சி ஏத்தம்" என்கின்றனர். இந்த ஏத்தங்களில் ஏறும்பொழுது எதிரே ஏதேனும் வாகனங்கள் வந்தால் நமது உயிரை சிறிது நேரத்திற்கு பரமபிதாவிடம் அடகு வைத்துவிட்டு டிரைவரை வேடிக்கைப் பார்க்க வேண்டியது தான். 

குறிப்பிடப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் அல்லது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் ஒன்று இவ்வழியில் உள்ளது, அது பிரிடிஷ் காலத்து மரப்பாலம். இன்றளவிலும் அந்த மரபாலத்தின் மேல் தான் அத்தனை வாகனப் போக்குவரத்தும் நடைபெறுகிறது. காலங்காலமாக கடும் மழை மற்றும் பனிகளுக்கு இடையேயும் தன் பணியை வேறுவழியில்லாமல் பார்த்துக் கொண்டுள்ளது இந்த மரப்பாலம். பாலத்தின் நிலை பரிதாபகரமாகஉள்ளது. ஏதேனும் ஒரு பெரிய விபத்து நிகழும் முன் அரசாங்கம் இதனை கவனித்தால் நலம். 




அவ்வளவு உயரமான மலையில் ஓரளவிற்கு சமவெளி போன்ற அமைப்பைப் பார்க்க வேண்டுமாலும் அதனை காக்காச்சியில் மட்டுமே காணலாம். இங்கு பிரிடிஷ் காலத்தில் அவர்கள் விளையாண்ட பரந்து விரிந்த கோல்ப் மைதானம் உள்ளது. தற்போதும் இந்த மைதானம் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது என்றாலும் மைதானம் இருக்கும் நிலையைப் பார்த்தால் லெட்ஜரில் 'பராமரிப்பு' என்று கணக்கு எழுத வேண்டும் என்பதற்காக மட்டும் பராமரிக்கிறார்களோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது. 

மைதானத்தின் அருகிலேயே ஒரு  சின்ன ஓடை ஓடுகிறது என்பதால் மதிய உணவுக்காக எங்கள் கடையை இங்குதான் விரித்தோம்.

சாப்பிட  அமர்ந்த பொழுது அவ்வழியாக வந்த அவ்வூர்க்காரர்கள் சிலர் "தம்பி சாப்ட்டு முடிச்சதும் கவர் எதையும் கீழ போட்டுப் போயிராதீங்க, காட்டு மிருகம் எதுவும் சாப்பிட்டா ஒத்துக்காம செத்து போயிரும், வாயில்லா சீவங்க... பாவம்" என்று சொல்லிவிட்டுக் கடந்தார்கள். அவர்கள் கூறியது நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம்.

நம் போன்றவர்கள் அவர்களின் எல்லைக்குள் செல்லும் பொழுது இது போன்ற விசயங்களில் மிக மிக அஜாக்கிரதையாக இருக்கிறோம். (ஜெயமோகன் எழுதிய யானை டாக்டரில் இது பற்றிய விரிவான ஒரு பார்வை உள்ளது, வாழ்வில் தவறவிடக் கூடாத ஒரு குறு நாவல் யானை டாக்டர் )

ட்ரீம் வியு பாயிண்ட் என்ற ஒன்று உங்களுக்கு உண்டென்றால் அதில் இந்த இடத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பரந்து விரிந்த புல்வெளி, மெல்ல சலசலத்து ஓடும் ஓடை. கைகளை உறைய வைக்கும் ஓடை நீர், எங்கும் ஊடுருவிக் கொண்டிருக்கும் பனி, அடர்ந்த வனம். எங்கும் மௌனம். இயற்கையை அனுபவிக்க இதைத் தவிர்த்து வேறு என்ன வேண்டும்! 




மணிக்குமரன் திரைத்துறையில் இருப்பதால் அவனுடைய cannon-7D கேமெரா கொண்டு வந்திருந்தான். வாழ்நாள் முழுமைக்குமான போட்டோக்களை இங்கேயே எடுத்துத் தீர்ப்பது என்று களமிறங்கி விட்டார்கள் எனது ஆருயிர்த் தோழர்கள். 

காக்காச்சியில் இருந்து நாலுமுக்கு நோக்கிய எங்கள் பயணம் மீண்டும் தொடங்கியது, இப்போது பனியும், பனி படர்ந்த தேயிலைத் தோட்டங்களும் பழகிப் போயிருந்தன, கிட்டத்தட்ட நான்கு மணிநேரப் பயணத்திற்குப் பின் நாலுமுக்கு வந்து சேர்ந்திருந்தோம்.

வேன் வந்து சேர்ந்த இடம் நாளுமுக்கு சேட்டன் கடை. சேட்டன் கேரளாவில் இருந்து இங்கு வந்து சாயா ஆத்த ஆரம்பித்துப் பலவருடங்கள் ஆகிவிட்டாலும் இன்றளவிலும் தமிழை கடித்துத் துப்பிக் கொண்டுதான் உள்ளார். எங்களைப் பார்த்தவுடனேயே    

"ஞான் சிக்கன் ஜெஞ்சு வைக்கும், நிங்க கருக்கலுக்கு முன்னே குதிரவெட்டி போயி வந்னா ஊனு கழிஞ்சு கீழ இறங்க சரியாயிட்டு இருக்கும்"   

"ஐயோ சேட்டன் இன்னிக்கு நைட் நாங்க இங்க தான் தங்கப் போறோம்" என்றான் மணி. 

" அது யான் அறிஞ்சில்லா, பின்னே ரேஞ்சர் ஏதும் கேட்டா பதில் சொல்ல ஆகாது"

இரவு ஏழுமணிக்குள் மலைக்கு மேல ஏறிய அத்தனை தனியார் வாகனங்களும் கீழே இறங்க வேண்டும், மேலும் யாரேனும் தேயிலைத் தோட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் பிறர் தங்குவதற்கு இடமளித்தால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். ரேஞ்சர் சம்மதித்தால் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்வதாக சேட்டன் கூறவே மணிகுமரனின் நண்பன் ரேஞ்சருக்கு போன் செய்தான். நாலுமுக்கில் தொலைபேசி வசதி இருக்கும் ஒரே கடை சேட்டனுடையது மட்டுமே, கைபேசி என்றால் BSNL தவிர வேறு எதுவும் வேலை செய்யாது.

ஒருவழியாய் ரேஞ்சரைத் தொடர்பு கொண்டு பேசினாலும் அவரோ, தான் காரையாறு வனபகுதிக்குள் இருப்பதாகவும், கழுகுமலை ரேஞ்சர் மாஞ்சோலைக்கு இன்ஸ்பெக்சன் வந்திருப்பதாகவும், அவர் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது அதனால் இன்றைய தினம் முடியாது வேண்டுமானால் மற்றொரு தினம் தங்குவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறிவட்டு போனை கட் செய்தார். அப்படியென்றால் அன்றைய இரவு வந்தவழியே இறங்க வேண்டியது தானா?    



பயணிப்போம் 

24 comments:

  1. பயணமும் அருமையாக சொல்லிச் செல்லும் உங்கள் கைவண்ணமும் அருமை சீனு

    ReplyDelete
  2. கடைசியில் ரேஞ்சர் உங்க ஆர்வத்தை குறைச்ச்ட்டார் போல ,... அருமையான விவரிப்பு. பாராட்டுகள்..

    ReplyDelete
  3. பயணம் சென்ற இடமும் இடம் "சார்ந்த" தகவல்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது சீனு... படங்கள் சுவாரஸ்யம். திகில் பாலம்!

    ReplyDelete
  4. சூப்பர் தல..... தொடருங்க

    ReplyDelete
  5. மாஞ்சோலைக்கு தங்களோடு பயணிப்பதுபோல் உணர்வு. அருமையான பகிர்வு. தொடருங்கள்.தொடர்கிறேன்.

    ReplyDelete
  6. சுவாரசியமா எழுதியிருக்கீங்க.. பாலம் பத்தி உள்ளூர் அரசாங்கத்துக்கும், டிவி நிலைய செய்தி சேகரிப்பு அலுவகங்களுக்கும் எழுதுங்களேன்?

    ReplyDelete
  7. பரந்து விரிந்த புல்வெளி, மெல்ல சலசலத்து ஓடும் ஓடை. கைகளை உறைய வைக்கும் ஓடை நீர், எங்கும் ஊடுருவிக் கொண்டிருக்கும் பனி, அடர்ந்த வனம். எங்கும் மௌனம். இயற்கையை அனுபவிக்க இதைத் தவிர்த்து வேறு என்ன வேண்டும்!

    அருமையான பய்ணக்காட்சிகள்..!

    ReplyDelete
  8. இயற்கையை அனுபவிச்சு எழுதியிருகிங்க சீனு.

    ReplyDelete
  9. நல்ல அனுபவத்துடன் கூடிய பயணம்... தங்குவதற்கு அனுமதி இல்லாத இடங்களில் தங்காமல் இருப்பதே சிறந்தது....

    ReplyDelete
  10. பயண அனுபவத்தை அழகிய வர்ணனையோடு விவரித்தது அழகு அந்த எழில்மிகு மலையில் மீண்டும் பயணித்த சிலிர்ப்பை தந்தது சீனு

    ReplyDelete
  11. கடைசி படத்தில் இருப்பவர்கள் யார்ன்னு தெரியா விட்டாலும் படமெடுத்த விதம் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  12. இந்தக் கதையிலும் வச்சான் பாருய்யா ட்விஸ்டு!! சேட்டனின் தமிழை விவரித்த உமது சேட்டையை ரசித்தோம்..

    ReplyDelete
  13. //மிக பெரிய மிக அபாயமான கொண்டை ஊசி வளைவுகள், இதனை இவ்வூர் மக்கள் "காக்காச்சி ஏத்தம்" என்கின்றனர்.
    //


    புதிய செய்தி நன்றி

    ReplyDelete
  14. கடைசி படத்தில் எட்டாவதாக ஒரு ஹீரோ இருக்காரே யாரு அது ?

    // சீனு நீங்க சொன்னா போல சொல்லிட்டேன் . அமொண்டை அனுப்பிடுங்க .

    ReplyDelete
  15. காக்காச்சி ஏத்தம்- புதிய செய்தி...

    தங்கள் பயணம் அழகாக விரிகிறது... அந்த எட்டாவது ஹீரோ.....!!!

    ReplyDelete
  16. பெண்கள் பகுதியில் குளிப்பதற்கு பயமேதும் இல்லை...
    ///////////////////////////////////
    குளிச்சிதான் பார்க்கலாமே! அப்புறம் தெரியும்....!

    ReplyDelete
  17. பாலத்தின் நிலை பரிதாபகரமாகஉள்ளது. ஏதேனும் ஒரு பெரிய விபத்து நிகழும் முன் அரசாங்கம் இதனை கவனித்தால் நலம்....

    இத்தனை குஷியிலும், உங்கள் பொது நலன் வியக்க வைக்கிறது...

    ReplyDelete
  18. ஒரு டவுட் தலிவரே...

    பிளாக் எழுதவே சுற்றுலா போனீங்களா என்ன!!! நல்லாருக்கு...!

    ReplyDelete
  19. அந்த இயற்கைச் சூழலில் இரவு தங்கினீர்களா இல்லையா!
    ராஜபாட்டைக்கு அனுப்பவேண்டியதை அனுப்பியாச்சா?

    ReplyDelete
  20. ஏன்யா இப்படி... இந்தமாதிரி ஏதாவது ஒரு வித்யாசமான ஊருக்கு போய், ஒரு பதிவ எழுதி, சும்மா இருக்கற என் மனசுக்குள்ள ஆசைய தூண்டி விடுறதே உங்க வேலையா போச்சு

    ReplyDelete
  21. படங்கள் பார்க்கும்போதே இந்த இடத்திற்குப் போகணும்னு ஆசை வந்துடுச்சு சீனு.....

    உங்க ஊரு பக்கம் என்னை எப்ப அழைச்சிட்டு போறீங்க!

    ReplyDelete
  22. அருமையான பயணக் காட்சி.... படங்கள் அழகு.

    ReplyDelete
  23. எழுத்துக்கலை கைகூடி வந்து விட்டால் எழுதியவன் கண்ட காணும் காட்சிகளைப் பற்றி எழுதும் போது வாசிப்பவர்களை அந்த இடத்திலேயே வாழ்ந்தது போல மாற்றி விட முடியும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்.

    ReplyDelete
  24. ரொம்ப பயமா இருக்கு ஒவ்வொன்னையும் படிக்க படிக்க அவ்வ்வ்வ்வ் நான் வீட்டுக்கு ஒரே பிள்ள ..... திகில் ல நான் என்ன ஆவேனோ படிக்கவே பயமா இருக்குப்பா .

    ReplyDelete