அம்மன் சீரியல் பல்புகளால் விஸ்வரூபம் எடுத்திருந்த கட்டைகளின் இடைவெளி வழியாக தீபிகாவை துரத்திச் சென்ற பொழுது தான் சிவ பூஜையில் நந்தி குறுக்கிட்டது. அந்தக் கட்டைகளில் ஒன்றின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தார் ஸ்ரீ அண்ணா. திருவிழாவிற்காக வெளியூரில் இருந்து வந்தவரை 'வாங்க' என்று கேட்க வேண்டும், தீபிகாவையும் துரத்த வேண்டும். வேறு வழியில்லாமல்
"வாங்கண்ணா, எப்போ வந்தீங்க, எப்டி இருக்கீங்க? " அவளைத் துரத்தும் அவசரத்தில் கால் படபடக்க விடுவிடுவென அவர்மேல் கேள்விகளைத் தொடுத்தேன். படபடபிற்குக் காரணம் நான் அவளைத் துரத்துவதைப் பார்த்துவிட்டாரோ? வீட்டில் வத்தி வைத்து விடுவாரோ என்ற கவலை தான். இத்தனை கேள்விகள் கேட்டும் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே என்னை ஏற இறங்கப் பார்த்தார்.
அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. ஏளனச் சிரிப்பா? இந்தப் பொடியனுக்குப் போய் பதில் சொல்ல வேண்டுமா என்ற எகத்தாளச் சிரிப்பா?நான் ரூட் விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்த வில்லன் சிரிப்பா? புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரியும் முன் என்னைத் தரதரவென இழுத்துக் கொண்டு கூட்டத்திற்குள் ஓடினான் என் நண்பன் முத்து.
இவ்வளவு பெரிய கூட்டத்திற்குள் கரைந்த தீபிகாவை எப்படிக் காண்பது? கண்டுபிடிப்பது? என்ற கேள்விகளோடு முத்துவைப் பார்த்தேன். இரவு பத்து மணிக்கு தெருவில் தனியாக நடந்து வரும் பொழுது கடிக்குமா கடிக்காதா என்ற நிலையில் ஒரு நாய் நம்மைப் பார்த்தல் எப்படி இருக்குமோ! அப்படி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் இன்று மூன்றாம் திருவிழா. காலை எழுந்தவுடன் திருவிழவிற்கான பத்திரிக்கையை எடுத்து இன்று என்ன நிகழ்ச்சிகள் உள்ளன என்று நோட்டம் விட்டேன்.
108 சங்காபிசேகம் காலை ஏழு மணி தலைமை திரு கண்ணன் அக்ரஹாரம்.
இதைப் பார்த்தவுடன் மனதிற்குள் சொல்ல முடியாத அவசரம். அதே வேகத்துடன் சைக்கிளை முத்துவின் வீட்டை நோக்கி செலுத்தினேன்.
யாரவது எழுப்பினால் தான் விடிந்ததே அவனுக்குத் தெரியும். அதிலும் காலை ஏழு மணியை எல்லாம் அவன் வாழ்நாளில் பார்த்தது கூட கிடையாது. மணியோ ஆறு. அவசர அவசரமாக அவனை எழுப்பினேன். எழுப்புவது நான் என்பதால் எழுந்துவிட்டான். தூக்கம் கலைவதற்கும், கேள்வி கேட்பதற்கும் கூட அவனுக்கு நான் நேரம் கொடுக்கவில்லை.
"இந்தா, இந்த நோட்டிச பாரு. 108 சங்காபிசேகம், தலைமை தீபிகா தாத்தா, கண்டிப்பா அவளும் வருவா." சொல்லச் சொல்ல புரிந்து கொண்டான்.
"நீ வீட்டுக்குப் போய் குளிச்சு ரெடியா இரு, ஏழு மணிக்கு கோவில்ல பாப்போம்" சிரித்துக் கொண்டே எழுந்தான். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பும் பொழுது " ஒரு நிமிஷம் என்றான்".
"இன்னிக்கு ஸ்கூல் லீவ் போடணும் அவ்ளோதான" அவன் கேள்வி கேட்க்கும் முன்னே பதிலளித்து விட்டு எந்த இடத்தை விட்டகன்றேன்.
இவ்வளவு துடிப்போடு செயல்படுவதால் தீபிகாவை சைட் அடிப்பது நான் என்று நினைத்து விடவேண்டாம். இடுக்கண் களைவதாம் நட்பு என்று எப்போதோ படித்த குறளை சொல்லிக்காட்டி நட்பு நட்பு என்று வெருப்பேற்றுகிரானே இந்த முத்து அவனுக்காகத் தான் இவ்வளவும்.
6.45க்கு கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். என்னையே என்னால் சரியாக பார்க்க முடியாத அளவிற்குக் கூட்டம். இதில் அவளை எங்கே தேடுவது என்ற படியே பார்வையை அங்குமிங்கும் மாற்றிக் கொண்டே இருந்தேன். அப்பொழுது காலை ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.
"என்ன?" என்றேன்.
"அங்க பாரு, அவ தாத்தா பக்கத்துல உக்காந்த்ருக்கா பாரு" கண்டுபிடித்த பெருமிதத்தில் கத்த ஆரம்பித்தான். ஒட்டு மொத்த கூட்டமும் எங்களை முறைத்து விட்டு மீண்டும் அய்யரின் 'ஓம் க்ரீம் க்லீம்' க்குள் ஐக்கியமாகியது.அவளைப் பார்த்து விட்ட சந்தோசத்தடன் அவனைப் பார்த்தேன், அவன் முகமூ வாடிப் போயிருந்த்தது.
"அதான் பாத்தாசுல்ல அப்புறம் என்ன?"
"அப்போ ஸ்கூல்க்கு லீவ் போட்டது வேஸ்ட்டா!"
"படிச்சா மட்டும் கலெக்டரா ஆகப் போறோம்! நீ ஏழா ரேங்க், நா ரெண்டு அவுட்" அந்த நேரத்திலும் தத்துவம் சொல்ல ஆரம்பித்தான்.
மணி எட்டு சங்காபிசேகம் முடிந்து எல்லாரும் சாமியைப் பார்க்கச் சென்ற பொழுது நானும் அவனும் மட்டும் சைக்கிளை எடுத்துக் கொண்டு வழக்கமாகச் செல்லும் பாலத்தின் அருகே சென்றோம்.
நாங்கள் அங்கே செல்லவும், தீபிகா அவள் அப்பாவுடன் M-80 யில் அந்த இடத்தைக் கடக்கவும் சரியாக இருந்தது. எப்போது அந்த இடத்தைக் கடந்தாலும் முத்துவைப் பார்த்து சிரித்துவிட்டு, கண்ணடித்துவிட்டுத் தான் செல்வாள். அந்த போதை தரும் மயக்கதிற்காகவே இந்த பேதையிடம் இன்று காதலை வெளிப்படுத்தி விடவேண்டும் என்ற தைரியத்தில் இருந்தான். இருந்தோம்.
பள்ளி முடிந்து அவள் மீண்டும் திருவிழாவிற்கு வரும் வரை திருவிழா சுவாரசியம் இல்லாமல் தான் சென்று கொண்டிருந்ததது. எல்லாரும் பொங்கல் வைக்க ஆரம்பித்திருந்தார்கள். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. எல்.ஆர்.ஈஸ்வரி ஆயிரம் முகத்தாளைப் பற்றி எப்போதோ பாடியதை ராமு சவுண்ட் சர்வீஸ் இப்போது பாட வைத்துக் கொண்டிருந்த்தார். பத்தாம் வகுப்பு தாண்டிய பையன்கள் ராட்டினத்தில் சுற்ற அனுமதி இல்லாததால் தாவணியில் வரும் தேவதைகளை சுற்றத் தொடங்கி இருந்தார்கள்.
மாரியப்பனை கோவிலுக்கு வர விழாக் கமிட்டியார் அழைத்துக் கொண்டிருந்த வேளையில்தான், வானத்தில் இருந்த செஞ்சூரியனே தரையில் நடந்து வருவது போல சிகப்பு நிற பட்டுப் பாவாடை அணிந்து திருவிழாவிற்கு வந்து கொண்டிருந்தாள் தீபிகா.நாங்களோ ராமன் செலுத்திய அம்பு போல அவள் பின்னால் செலுத்தி விடப்பட்டோம், இடையில் நின்ற ஸ்ரீராம் அண்ணனால் தடுத்து நிறுத்தப்பட்டோம். மீண்டும் அவளை எப்படிக் காண்பது என்று தெரியாமல் இவ்வளவு பெரிய கூட்டத்திலும் தனித்து விடப்பட்டோம்.
அவள் குடும்பம் பொங்கல் வைக்குமிடம், ராட்டினம் சுற்றுமிடம், கலை நிகழ்ச்சிகள் நடக்குமிடம், பலூன் வளையல்கள் விற்குமிடம், இப்படி எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் தேடினோம். கிடைக்கவில்லை. என்னால் தான் அவளைத் தொலைத்துவிட்டோம் என்ற கோபத்திலேயே எதுவும் பேசாமல் வந்து கொண்டிருந்தான். ஒருவழியாக அவளை கண்டுபிடித்துவிட்டோம். அவள் வயதையொத்த பெண்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். இதை பார்த்ததும் முத்து அவள் நின்றதற்கு எதிர் திசையில் ஓடினான். திரும்பி வரும் பொழுது கையில் ஒரு பலூன் இருந்தது.
அவளுக்கான திருவிழாப் பரிசு அது. பார்வையாலேயே பழகி இருந்ததாலும், திருவிழா கொடுத்த தெம்பும், எங்களை தடையில்லாமல் அவளருகே அழைத்துச் சென்றது. அவளருகே சென்றதும் கொடுக்காமலேயே அவன் கையிலிருந்த பலூனைப் பறித்தாள். எனக்கு அந்த இடத்தில் நிற்பதற்கே கஷ்டமாக இருந்தது. பொறாமையாகவும் இருந்தது. இரண்டு நிமிடம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், கிளம்பலாம் என்று என் கையைப் பிடித்து இழுத்தான்.
"ஒரு நிமிஷம்" அழைத்தது அவள் தான். "உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்" என்றாள். அந்தக் கேள்வியை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. சந்தோஷத்தில் அவளையே நோக்கினோம். இதழில் புன்னகை சுமந்து மெதுவாக
"டெய்லி அந்த பாலத்துக்குப் பக்கத்துலயே நிக்ரீங்களே யாரையும் ரூட் விடறீங்களா அண்ணா" என்றாள் அப்பாவியாக. நெஞ்சின் மீது யானை ஏறியது போல, காதுக்கு மிக அருகில் இடி விழுந்தது போல இருந்தது. காரணம் அந்த வார்த்தை 'அண்ணா'.
"என்னது அண்ணனா, குட்ரீ பலூன" கோபத்துடன் அவள் கையிலிருந்த பலூனை பிடுங்கினான், பிடுங்கும் போதே பலூன் வெடித்தது. உடைந்த பலூனை ஒரு கையிலும், என்னை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு உடைந்து போன இதயத்துடன் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். இன்னது என்று சொல்ல முடியாத நிலையில் நானும் அவனைத் தொடர்ந்தேன்.
பத்து வருடம் கழித்து சென்னையிலிருந்து இன்று திருவிழாவிற்காக வந்துள்ளேன், அம்மன் விஸ்வரூபம் எடுத்திருந்த கட்டைகளுக்கு அடியில் காத்திருந்த பொழுது, ஒரு சிறுமியும் பின்னாலேயே இரண்டு சிறுவர்களும் என்னை கடந்து கொண்டிருந்த்தார்கள். அவர்களில் ஒருவன் அவசரமாக என்னிடம் கேட்டான், "வாங்கண்ணா, எப்போ வந்தீங்க, எப்டி இருக்கீங்க? " .
அவன் கேட்ட அந்தக் கேள்விக்கு விடையாக புன்னகையை பதிலளிக்கும் பொழுது தான் புரிந்தது அன்று ஸ்ரீ அண்ணா எனக்களித்த புன்னகைக்கான பதில்.
திருவிழாக்கள் இருக்கும் வரை தீபிகாக்கள் அழிவதில்லை.
பின் குறிப்பு : இந்தக் கதையில் இடம் பெற்றுள்ள பெயர்கள் அனைத்தும் உண்மையானவையே
பின் குறிப்பில் மற்றுமொரு குறிப்பு : இது கதையே!
Tweet |
ஒரு தரமான எழுத்தாளரின் சரளமான, அழகான நடை! சிரிப்பின் வகைகளும் காதுக்கருக்கருகில் இடி விழுந்ததும் அதற்கு அழகான உதாரணங்கள்!
ReplyDeleteகடைசி வரை தீபிகா என்ன சொல்லப்போகிறாள் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள்!
முதல் ஆளாக வந்து அழகான கருத்துக்ககளை கொடுத்ததற்கு முதல் நன்றி.
Delete// ஒரு தரமான எழுத்தாளரின் சரளமான, அழகான நடை // இதற்க்கு தான் முயல்கிறேன் அதைத் தங்களை போன்ற பெரியவர்கள் சொல்லிக் கேட்கும் பொழுது நிறைவாய் உள்ளது. வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி
ஆஹா..... அருமையான நடை!!! மிகவும் ரசித்தேன்!
ReplyDeleteஆஹா அருமை என்று வாழ்த்தியதற்கு அருமையான நன்றிகள். வருகைக்கு மனம் நிறைந்த நன்றி
Deleteநல்ல பதிவு, பரபரப்பேற்றி பொசுக்கென்று இறக்கி விட்டீர்கள். தீபிகாவை மட்டுமல்ல, இந்த அண்ணன் வார்த்தையை வைத்து சதாய்க்கிற பொண்ணுங்களையெல்லாம் சுட்டேபுடனும் ஆமா.
ReplyDeleteசுட்ருவோம்... படித்து மகிழ்ந்து வாழ்த்தியதற்கு நன்றி...
Deleteஅருமையான நடை மிகவும் ரசித்து படித்தேன்!வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் வருகைக்கு நன்றி சார்.
Delete\திருவிழாக்கள் இருக்கும் வரை தீபிகாக்கள் அழிவதில்லை.\ - Nice punch
ReplyDelete//பின் குறிப்பில் மற்றுமொரு குறிப்பு : இது கதையே!//
ReplyDeleteநம்பிடோம்
நம்பித்தான் பாஸ் ஆகனும்...ஏண்ணா நாமெல்லாம் ஒரே இனம்...வந்து வாழ்த்தியதற்கு நன்றி
Deleteஏன் நெஞ்சே வெடித்து விட்டது அப்போ உங்கள் நண்பருக்கு எப்படி இருந்து இருக்கும் இந்த பொண்ணுகளே இப்படி தான் பாஸ் நம்ம பசங்களும் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டய்ங்க தீபிகா இல்லனா கோபிகா இது தான் நம் பசங்களின் தாரக மந்திரம்ஃஃஃ ரொம்ப அருமையாய் எழதி உள்ளீர்கள் நண்பா பெரிய எழதாழராய் வந்தால் கூட சந்தேகம் இல்லை நண்பாஃஃஃவாழ்ததுகள்ஃஃஃ
ReplyDeleteநல்ல சுவாரிசியமான கதை.. நீங்கள் கண்டிப்பாய் பத்திரிக்கையில் சிறுகதை எழுதலாம்.. கதையின் என்டிங் நான் ரொம்பவே ரசித்தேன். உண்மைய சொல்ல வேண்டும் என்றால் ஓரளவு ஊகித்து விட்டேன்... :)
ReplyDeleteஉங்கள் ஊக்கம் தரும் வரத்தை ஒன்றே பத்திரிக்கையில் எழுதிய சுகத்தைத் தருகிறது. முயற்சிக்கிறேன். மெல்ல மெல்ல நடை பழகும் குழந்தை நான். என்னை வழிநடத்துபவர்கள் நீங்கள். கண்டிப்பாக உங்கள் எண்ணம் நிறைவேற நான் உழைக்கிறேன் (எழுதுகிறேன்)....எப்படி அணுக வேண்டுமென்று தெரியாது. அந்த வலைகளை முதலில் தெரிந்து கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி ராஜ்
தலயைப் பற்றிய பதிவென்றால் தலதெறிக்க ஓடி வந்து படிப்பேன். என் முதல் பின்னோட்டம் இருக்கும். அருமையான பதிவு
ReplyDeleteஅட... கதையை சரளமான நடையில கொண்டுபோய் ரசிகக வெச்ச நீங்க, அந்த கடைசி வரி பன்ச்ல அசத்திட்டீங்க. திருவிழாக்கள் இருக்கும் வரை ‘தீபிகாக்கள் அழிவதில்லை’ இந்த ஒரு வரியிலயே கதை நிமிர்ந்து நின்னு, மனசுல ஜம்னு உக்காந்துடுச்சு. ஒண்ணு புரிஞ்சுது... நிரூவுக்கு இன்னும்... Miles to Go!
ReplyDeleteஐயோ நிரு அப்படி மட்டும் நினைச்சிர வேண்டாம். ஹுயுமர் உங்கள் கதைகளில் சரளமாக வருகிறது. அந்த அளவிற்கு எனக்கு வருமா தெரியவில்லை. உங்கள் நடையும் எழுதும் வேகமும் என்னில் இருந்தும் அதிகம் ஈர்க்கக் கூடியது.
Deleteசரி நம் கதைக்கு வருவோம்.
// மனசுல ஜம்னு உக்காந்துடுச்சு.// இதற்காகத் தானே நாம் ஒவ்வொருவரும் போராடுகிறோம்(எழுதுகிறோம்) இந்த வார்த்தைகளுக்கு மனப்பூர்வ நன்றிகள்.
// "என்னது அண்ணனா, குட்ரீ பலூன" கோபத்துடன் அவள் கையிலிருந்த பலூனை பிடுங்கினான், பிடுங்கும் போதே பலூன் வெடித்தது. உடைந்த பலூனை ஒரு கையிலும், என்னை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு உடைந்து போன இதயத்துடன் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். //
ReplyDeleteஅருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.
மிக்க நன்றி அய்யா. அருமை என்னும் வார்த்தை நீங்கள் கூற நான் மகிழ்ந்தேன்.
Deleteதிருவிழாக்கள் இருக்கும் வரை ‘தீபிகாக்கள் அழிவதில்லை’
ReplyDeleteஅழகான திருவிழாவும் , செஞ்சிவப்பு சூரியனும் , நடையும் அருமை ..
நன்றி அம்மா, உங்களுக்குப் பிடித்த அந்த பகுதிகள் நான் ரசித்து எழுதியது.
DeleteSUPER AND VERY NICE STORY...
ReplyDeleteநன்றி சின்னமலை
Deleteமுதல்ல இயல்பான, உறுத்தல் இல்லாத எழுத்து நடைக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்களைப் பிடியுங்கள் சீனு! சுவாரஸ்யமாய் கதை சொல்லும் வித்தை கைவரப் பெற்றிருககிறீர்கள். அதற்கு இன்னொரு அழுத்தமான கைக்குலுக்கல்!
ReplyDeleteஆனா ஆசிரியர்ன்னு நம்மளை மதிச்சுச் சொல்லிட்டீங்களே... அதனால குறை சொல்லாட்டா எப்புடி?
1) ஒரு நாய் நம்மைப் பார்த்தல் எப்படி இருக்குமோ! அப்படி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். -இந்த இடத்துக்கப்புறம் ப்ளாஷ் பேக்ல போயிட்டு மறுபடி கதைக்கு வர்றீங்க. இதை எங்களுக்குப் புரியவைக்க (அதாவது சீன் மாறுகிறது என்பதால்) முதலெழுத்து போல்டாகவோ வேறு கலரிலோ தந்திருந்தால் நலம்.
2) தீபிகா, முத்து போன்றோர் எப்படியிருப்பார்கள் என்று போகிற போக்கில் ஒரு வர்ணனை தந்திருந்தால் கதையில் இன்னும் பிடிப்பு கூடும். உதா: தீபிகா மாநிறம்தான். பெரிய அழகி இல்லையென்றாலும் அந்தக் கண்கள்... பார்ப்பவரை அப்படியே ஈர்த்து விழுங்கிவிடக் கூடியவை. அதி்லதான் விழுந்தான் முத்து.
-இதெல்லாம் குறையாகச் சொல்லவில்லை. உங்களை இம்ப்ரூவ் பண்ணிக் கொள்ள உதவும் என்ற நல்லெண்ணத்தில்தான் சொன்னேன். கோவிச்சுககாதீங்கப்பா..!
கணேஷிடமிருந்து கிடைக்கும் வரங்களை யாரவது வேண்டாம் என்று சொல்வார்களா. நீங்கள் கூறிய அத்தனை கருத்துகளும் என் கதையில் இல்லை.
Deleteநீங்கள் சொன்னதன் பின்புதான் உணர்ந்து கொண்டேன் எவ்வளவு பெரிய வெறுமையை செய்திருக்கிறேன் என்று. இனி வரும் கதைகளில் அது போல் உணர்வூட்டமாக எழுதுகிறேன்.
உங்கள் கைகுலுக்கலுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதுவே பெரிய பாக்கியம். உங்கள் நல்லெண்ணத்தில் நான் என்றும் இருப்பேன்.
நன்றி ஆசிரியர் அவர்களே
நல்ல கதை.... திருவிழாக்கள் இருக்கும்வரை தீபிகாக்கள் இருப்பார்கள்... உண்மை நண்பரே.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி சார்
Deleteஉண்மையிலே இது கதைதானா எனக்கு சந்தேகமா இருக்கு
ReplyDeletekathai endrum kollalam. varugaikku nandri nanba
Deleteஇப்படி பழசையெல்லாம் கிளறி விட்டிடீன்களே....இது மாதிரி தீபிகாக்கள் இருந்தால் தான் திருவிழாவே களைகட்டும்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மணிமாறன்
Deleteகதை முடிவு நல்லா இருக்கு..எப்பவும் போல கதை சொல்லும் விதம் ரொம்ப அருமை ...
ReplyDeleteரொம்ப ஸாரி. கதை ஒரு கடமைப்புக்குள் வரவில்லை. வார்த்தைகள் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. சின்ன வயசு பழக்கத்தை இன்னும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கலாம். மனசுக்குள் ஒரு விஷயத்தை சொல்லவந்து அது முடியாமல் போய், பிறகு வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்தித்து ஒரு மன அமைதிக்காக மீண்டும் கிராமம் வரும்போது அவள் நினைவுகள் வந்து, இந்த மாதிரி விஷயங்களில்தான் கதை இருக்கிறது. தாத்தா, 108 சங்காபிஷேகம், அப்பா சைக்கிள் இதெல்லாம் என்னை இம்ப்ரெஸ் செய்யவில்லையே. சொல்லும் விஷயம் நச்சென்று மனசில் தைக்க வேண்டும். விண்ணை தாண்டி வருவாயா மீண்டும் ஒரு முறை பாருங்கள். காதலை அப்படி சொல்ல வேண்டும். ஒரு சிறுமி இரண்டு சிறுவர்கள் - அப்படியானால் அதில் ஒரு க்ளாஷ் இருக்க வேண்டும். அதுவும் இல்லை. நான் இன்னும் பெரிசாக எதிர்ப்பார்க்கிறேன்.
ReplyDeleteநன்றி நடராஜன் சார், கதை கடமைப்புக்குள் வரவில்லை என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் எந்த பகுதி எல்லாம் உங்கள் மனதில் ஒட்டவில்லை என்றும் சொல்லியுள்ளீர்கள் அதற்கும் நன்றி.
Deleteகாரணம் என்னால் இன்னும் அருமையாக எழுத முடியும் என்ற நம்பிக்கையில் தான் இவ்வளவும் சொல்கிறீர்கள். கண்டிப்பாக குறைகளை கருத்தில் கொண்டு இன்னும் இன்னும் என்னை மேற்கேற்றிக் கொள்கிறேன்.
வருகைக்கும் ஆழமான கருத்துக்களுக்கும் நன்றி
கதைக் கருவும் கதைக் களத்தை விவரித்துச் சொன்னவிதமும்
ReplyDeleteமுடிவும் மிக மிக அருமை
சிறப்பாகக் கதை சொல்கிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
என்னை உற்சாகப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி அய்யா
Deleteகதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்
ReplyDeleteகதை ரொம்ப நல்லா இருக்கு ,,,வாழ்த்துக்கள் கலக்குங்க
ReplyDeleteto say truly
ReplyDeleteகதை முடிஞ்சதும் மனசுல நின்னது எல்லாம் சீரியல் பல்பு அம்மன், தெரு நாய் பார்வை எடுத்துகாட்டு, சங்காபிசேகம், திருவிழா மட்டும் தான்.
ஏன் தெரியல ஸ்ரீ அண்ணா, தீபிகா, முத்து யாருமே ஆழமா மனசுல பதியல...
கதை களம் நல்ல இருந்துச்சு...
பின் குறிப்பு பஞ்ச்... :)
தீபிக்க முத்து மனசுலையே நிக்கல என்ன பண்றது ஜனனி. ஹா ஹா ஹா சும்மா சொன்னேன், கண்டிப்பாக அதை அடுத்து வரும் கதையில் நிவர்த்தி செய்கிறேன்.
Deleteவழிகாட்டும் கருத்துக்கள் தான் நம்மக்கு நல்ல வழியை காண்பிக்கின்றன
என்னப்பா நீ ராமேஸ்வர்த்துல உக்காந்துட்டு இருந்தா நீ பாட்டுக்கு தீபிகா பின்னாடி சுத்துற? ஆனாலும் கூடவே சுத்தியிருக்கலாம் போல தோணுது.நல்லா இருக்குப்பா..அந்த முத்துக்கு...ரூட்டு விடு மச்சி.
ReplyDeleteமிக அருமையான விறுவிறுப்பான நடை மூலம் திருவிழாவுக்கே என்னைப் பயனிக்க வைத்துவிட்டீர்கள்! ஸ்வாரஸ்யம்!
ReplyDeleteபலூன் மட்டுமா வெடித்தது...
ReplyDeleteசீனு... உங்களுக்கு வார்த்தைகள் நன்றாக வசப்படுகிறது... தொடர்ந்து திடங்கொண்டு போராடினால் சுஜாதா விருது நிச்சயம்...
// இரவு பத்து மணிக்கு தெருவில் தனியாக நடந்து வரும் பொழுது கடிக்குமா கடிக்காதா என்ற நிலையில் ஒரு நாய் நம்மைப் பார்த்தல் எப்படி இருக்குமோ! அப்படி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். //
// எல்.ஆர்.ஈஸ்வரி ஆயிரம் முகத்தாளைப் பற்றி எப்போதோ பாடியதை ராமு சவுண்ட் சர்வீஸ் இப்போது பாட வைத்துக் கொண்டிருந்த்தார். //
ரசித்தேன்...
நல்ல கதை நண்பா.. எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு சம்பவம் தான் என்றாலும் அதை கிண்டி நோண்டி எல்லோரையும் ஒரு ஃப்ளாஷ் பேக்குக்கு அழைத்து சென்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.. கதை அன்றைய நாள் இரவில் இருந்து காலைக்கு ஃப்ளாஷ்பேக்காக செல்லும் போது, அதை நாங்கள் ஃப்லேஷ்பேக் என புரிந்துகொள்ளும் வகையில் சொல்லியிருக்கலாம்.. நான் பாதி கதை கடந்ததும் தான் ஃப்ளாஷ்பேக் என்றே உணர்ந்தேன்.. நகைச்சுவை கதை என்று ஆன பின் இன்னும் கொஞ்சம் இறங்கி விளாசியிருக்கலாம்.. சில இடங்களில் உங்களின் எழுத்து மிகவும் வசீகரிக்கும் வகையில் இருந்தது.. //எல்.ஆர்.ஈஸ்வரி ஆயிரம் முகத்தாளைப் பற்றி எப்போதோ பாடியதை ராமு சவுண்ட் சர்வீஸ் இப்போது பாட வைத்துக் கொண்டிருந்த்தார். பத்தாம் வகுப்பு தாண்டிய பையன்கள் ராட்டினத்தில் சுற்ற அனுமதி இல்லாததால் தாவணியில் வரும் தேவதைகளை சுற்றத் தொடங்கி இருந்தார்கள்.// இது ஒரு உதாரணம்.. அருமையான நினைவுகளை கதையாக தந்ததில் மனதில் மகிழ்ச்சி குடி கொண்டுவிட்டது..
ReplyDeleteநல்ல கதை நண்பா.. எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு சம்பவம் தான் என்றாலும் அதை கிண்டி நோண்டி எல்லோரையும் ஒரு ஃப்ளாஷ் பேக்குக்கு அழைத்து சென்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.. கதை அன்றைய நாள் இரவில் இருந்து காலைக்கு ஃப்ளாஷ்பேக்காக செல்லும் போது, அதை நாங்கள் ஃப்லேஷ்பேக் என புரிந்துகொள்ளும் வகையில் சொல்லியிருக்கலாம்.. நான் பாதி கதை கடந்ததும் தான் ஃப்ளாஷ்பேக் என்றே உணர்ந்தேன்.. நகைச்சுவை கதை என்று ஆன பின் இன்னும் கொஞ்சம் இறங்கி விளாசியிருக்கலாம்.. சில இடங்களில் உங்களின் எழுத்து மிகவும் வசீகரிக்கும் வகையில் இருந்தது.. //எல்.ஆர்.ஈஸ்வரி ஆயிரம் முகத்தாளைப் பற்றி எப்போதோ பாடியதை ராமு சவுண்ட் சர்வீஸ் இப்போது பாட வைத்துக் கொண்டிருந்த்தார். பத்தாம் வகுப்பு தாண்டிய பையன்கள் ராட்டினத்தில் சுற்ற அனுமதி இல்லாததால் தாவணியில் வரும் தேவதைகளை சுற்றத் தொடங்கி இருந்தார்கள்.// இது ஒரு உதாரணம்.. அருமையான நினைவுகளை கதையாக தந்ததில் மனதில் மகிழ்ச்சி குடி கொண்டுவிட்டது..
ReplyDelete//திருவிழாக்கள் இருக்கும் வரை தீபிகாக்கள் அழிவதில்லை.//
ReplyDeleteயம்ம யம்மா!!
//Philosophy Prabhakaran8 September 2012 01:01
ReplyDeleteசீனு... உங்களுக்கு வார்த்தைகள் நன்றாக வசப்படுகிறது... தொடர்ந்து திடங்கொண்டு போராடினால் சுஜாதா விருது நிச்சயம்..//
யோவ் கஷ்டப்பட்டு எனக்கு ஒரு தளபதியை செலக்ட் செஞ்சி வச்சிருக்கேன். வேற ஸ்டாப்புக்கு போய்யா!!
அழகான கதை.. அருமையான நடை..!! செம்மை..!!
ReplyDelete//திருவிழாக்கள் இருக்கும் வரை தீபிகாக்கள் இருப்பார்கள்// கலக்கல்!!
ReplyDeleteபின் குறிப்பு - நம்பிட்டேன்
அடுத்தது- நம்பவில்லை :-)))