வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா - கர்ணாவஞ்சகன் கண்ணனடா
தலைப்பு கர்ணன் படத்திற்கான விமர்சனம் என்று நினைத்து விட வேண்டாம். கர்ணன் படத்திற்கு நான் எப்படி சென்றேன் என்பதற்கான விமர்சனம். மகாபாரதக் கதை பரிச்சியமானவர்களுக்கு கர்ணனின் கதாப்பாத்திரம் மிகப் பத்திரமாக நினைவில் இருக்கும். கதை தெரியாதவர்களுக்கு நான் பரிந்துரைப்பது மகாபாரதக் கதையல்ல. மணிரத்னத்தின் தளபதி உருவான கதை .
வெள்ளி இரவு சென்னை டூ தென்காசி சென்ற பயணக் களைப்பு, சனி பகல் தென்காசி செங்கோட்டை கேரளா என்று ஊர் சுற்றிய பயணக் கொழுப்பு எல்லாமே என்னை வாட்டியது. இருந்தும் இரவு எங்கு செல்வது என்ற விவாததிற்கு வந்தோம். முந்தின நாள் பேருந்துப் பயணத்திலேயே உறுதியாகக் கூறிவிட்டேன் " என்ன நடந்தாலும் சரி நாளை இரவுக் காட்சி கர்ணன்" என்று. சரி என்று தலையாட்டிய அத்தனை தலைகளும் வேண்டாம் என்று மறுக்கத் தொடங்கியது.காரணம் கர்ணன் திரையிடப்பட்டிருந்த திரையரங்கு கர்ண கொடுரமான, மொக்கையோ மொக்கையான திரையரங்கு.
நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தென்காசியிலேயே உருப்படியான திரையரங்கு பத்மம் மட்டுமே. திருட்டு டி வி டி கலாச்சாரத்தினாலும், அதிகமான பணம் வசூல் செய்யும் பேராசையினாலும் கூட்டம் குறைந்து, திரையரங்கையும் திரைப்படத்தையும் கவனிப்பாரற்று என்னால் மொக்கையிலும் மொக்கை என்ற பெயர்தாங்கி நிற்கின்றது.
புதிதாக வந்த படங்கள் கழுகு மாசி. கழுகு திரையிடப்பட்ட திரையரங்கோ மொக்கையிலும் மொக்கை ( புதியதாக வந்த தகவல் படமும் மொக்கை என்று). மாசி திரையிடப்பட்ட திரையரங்கு தென்காசியின் சத்யம் என்று வர்ணிக்கப்ட்டாலும் மாசி பார்க்கும் ராசி எங்களுக்கு இல்லை. இல்லை, என்னால் இல்லாமல் செய்யப்பட்டது என்று கூட சொல்லலாம். மாட்சிமை தாங்கிய anto எவ்வளவோ வற்புறுத்தியும் கூட பங்குனி மாதத்தில் மாசிக்கு என்ன வேலை என்று மாசிக்கு செல்லும் திட்டம் எங்களால் ஒத்தியோ ஒதுக்கியோ வைக்கப்பட்டது.
இவ்வளவுக்குப் பின்னாலும் கர்ணன் பார்த்தே ஆக வேண்டுமா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். கெளதம் உறுதியாக இருந்தான், இரவுக் காட்சி. படம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. வீட்டிலும் அனுமதி கிடைத்துவிட்டது! ( ஆச்சரியக்குறியை கவனித்துவிட்டுப் பின் தொடரவும் )
மாமாவுக்கு தொலைபேசினேன். ஒரு பிரச்சனையும் இல்லை இன்னும் பத்து நிமிடத்தில் ஆஜராவேன் என்றார். சூர்யா உடன் வர மாமாவும் ஆஜர். பலநூறு முறை கர்ணன் பார்த்துவிட்டேன் என்று கையில் அடித்து சத்தியம் செய்த குமாரை தலையிலடித்து இழுத்துச் சென்றேன் என்பது வேறு கதை.
நான் கெளதம் குமார் மாமா சூர்யா என்று ஒரு படையையே திரட்டிவிட்டேன். மக்கர் செய்தது anto மட்டுமே. இருந்தும் அவரை சம்மதிக்க வைத்த தமிழக அரசுக்கும், மின்சாரவாரியதிக்கும் என் நன்றியை சொல்லிக்கொள்ள கடமை பட்டிருக்கிறேன் . காரணம் மிகவும் பவர்புல்லானது என்பதை விட பவர்கட்டானது என்றும் சொல்லலாம். இருட்டைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட இருட்டில் படம் பார்ப்பது எவ்வளவோ மேல் என்று படையின் பலத்தை அதிகரிக்க எங்களோடு சேர்ந்துகொண்டார்.
திரையரங்கினுள் நுழைந்தோம். மொத்தத்தில் ஆறு பேர் இருந்தார்கள். எங்கள் வருகையினால் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. ஐந்து நிமிடம் தான் ஆகியிருக்கும் ஏறக்குறைய அரங்கமே நிறைந்துவிட்டது. கடைசியாக நான் பார்த்த எந்த புதிய திரைப் படத்திலும் இவ்வளவு கூட்டத்தைப் பார்த்தது இல்லை.
ஒருமுறை கூட கர்ணன் பார்த்து இல்லை என்பதால் என் எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. படம் ஆரம்பமாகியது முதலே பத்து நிமிடத்திற்கு ஒரு பாடல் வந்தது கொடுமை என்றால் ஒவ்வொரு பாடலும் பத்து நிமிடத்திற்கு நீடித்தது கொடுமையிலும் கொடுமை. இருந்தும் பெரும்பாலான நேரங்களில் மொத்த திரையரங்கமும் இருக்கையின் நுனியில் உட்கார்ந்துதான் படத்தை ரசித்துக் கொண்டிருந்தது. சிம்மம் போன்ற நடை, கர்ஜனை, தமிழை தமிழாக வெளிபடுத்திய வசன உச்சரிப்பு, நொடிகொரு முறை மாற்றிக் கொண்டே இருந்த முக பாவனை உண்மையிலேயே அவர் நடிகர் திலகம் தான்.
படத்தில் சிவாஜியும் என் டி ஆரும் மட்டுமே பாத்திரத்துடன் ஒன்றி நடித்திருந்தனர். மற்றவர்கள் அனைவரும் நடிக்க வேண்டுமே என்ற கட்டாயத்தின் பேரில் நடித்தது போல் இருந்தது. கிருஷ்ணனாக வந்த என் டி ஆர் சிவாஜிக்கு இணையாக நடித்து இருந்தார். பாரதப் போர் தொடங்கும் போது கிருஷ்ணன் பாடும் பாடலும், ' உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது ' பாடலும் இன்றளவும் நம் மனதில் உறங்காது ஒலித்துக் கொண்டுள்ளது.
Tweet |
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...Unmai..unmai...!
ReplyDeleteகர்ணன் திரையிடப்பட்டிருந்த திரையரங்கு கர்ண கொடுரமான திரையரங்கு... very nice
ReplyDeleteNantri nanba
ReplyDeleteகர்ணனின் பலம் பாடல்களிலும்தான்... தளபதி மட்டுமில்லை இதே கர்ணனுக்கு அப்புறம் 79 இல் வெளிவந்த சிவாஜியின் பட்டாக்கத்தி பைரவன் படமும் இதே கதைதான். பாரதத்தில் கிடைக்காத கதைக்களன்களா....!
ReplyDeleteகர்ணன் அரங்குநிரைக் காட்சிகளாக ஓடுகிறது என்று ஆங்காங்கே படிக்கும்போது 'சந்தோஷம் பொங்குதே...சந்தோஷம் பொங்குதே....'
கர்ணன் அரங்கம் நிறைந்த காட்சியாக பார்த்தது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. கூடுதல் தகவல்களுக்கு நன்றி
Delete