Showing posts with label நாடோடி எக்ஸ்பிரஸ். Show all posts
Showing posts with label நாடோடி எக்ஸ்பிரஸ். Show all posts

26 Apr 2020

நியூயார்க் – Are you Lucky? - 2

நான் கொண்ட உச்சபட்ச அதிர்ச்சியில் என் முகம் மாறுவதை கவனித்து விட்டாள் வர்ஷனா. முதல் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவில்லை. அதற்குள் இன்னொன்றா. ஒருவனால் எத்தனை அதிர்ச்சியைத்தான் தாங்க முடியும். 

“என்னாச்சு?”

“கேமரா பேக்க காணோம்?”

“என்னது காணோமோ?”, அவள் முகம் தீவிரமாவது தெரிந்தாலும் சூழ்நிலை காரணமாக அமைதியாக இருந்தாள். அடுத்து என்ன என்பதுபோல் பார்த்தாள். நல்லவேளையாக யோசிக்க நேரம் கொடுத்தாள். கேமரா தொலைந்த அதிர்ச்சியைவிட ‘எங்க இவன் இன்னொன்னு வாங்கனும்ன்னு சொல்லுவானோ’, என்ற அதிர்ச்சியும் அவளிடத்தில் இருந்திருக்க வேண்டும். நான் இன்னும் அந்தளவிற்கு யோசிக்கவில்லை. எனக்கு என் கேமரா வேண்டும். அதுவும் இதே கேமரா. கேமரா இல்லை. என் தங்கம் அது.

ரொம்ப ஆசை ஆசையாய் வாங்கிய கேமரா. பல வருடங்களாக நானும் கேமராவும் ஓருயிராக சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

அந்தக் கேமராவை வாங்கிய நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. பீனிக்ஸ் மால் கேனான் ஷோ ரூமில் ஆவி, கௌதம் மற்றும் நான் என நாங்கள் மூவருமாக சென்று வாங்கினோம். ஐம்பத்தி ஐந்தாயிரம் என்று பில் வந்தபோதுகூட அது ஒரு சுமையாய்த் தெரியவில்லை. எட்டாக்கனி ஒன்றை எட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் இருந்தேன். என் சம்பாத்தியத்தில் நான் வாங்கும் இரண்டாவது பெரிய பொருள். (முதலில் வாங்கியது பைக்). இவ்ளோ காசு செலவு பண்ணி இந்த டப்பாவ வாங்கனுமா என்பதுவே அம்மாவின் கேள்வியாய் இருந்தது. அம்மாவின் முகம் நினைவுக்கு வந்து போனது. நல்லவேளை இங்கே இல்லை.

பரப்பரப்பான அந்த சூழலுக்கு மத்தியில் யோசிப்பது கடினமாக இருந்தது. டாலஸ் விமான நிலையத்தில் ஏறியதில் இருந்து நியூயார்க் மெட்ரோ வரைக்குமாக பல இடம் மாறியாகிவிட்டது. அத்தனை லக்கேஜும் வெவ்வேறு இடங்களில் வேறு வேறு கைகளுக்கு மாற்றப்பட்டு விட்டது. எங்கே எப்படி?

“வீட்ல இருந்து எடுத்துட்டு வந்தீங்களா?”

“கடைசிய அத எங்க வச்சீங்க?”

“டாலஸ் ஏர்போர்ட்ல நாம உக்காந்த இடத்தில விட்டீங்களா?”

“ஸ்டார்பக்ஸ் போனீங்களே அங்க?”

“மெட்ரோ கார்ட் எடுக்க போகும்போது?”

நாங்கள் பயணித்த அதே காலக்கோட்டின் வழியே அவளும் பயணித்தாள். அவள் கூறிய ஒவ்வொரு இடமும் கூட்டம் நிறைந்த பகுதிகளாகக் கண்முன் தோன்றி மறைந்தன. யாரோ ஒருவர் என் தங்கத்துடன் உறவாடுவது போல் காட்சிகள் உருவெடுத்தன. எதுவும் சொல்லாமல் அமைதியாக யோசிப்பது அவளுக்கு மேலும் பதற்றத்தைக் கொடுத்தது. விட்டால் போன பயணத்தின் சம்பவங்களுக்கும் செல்லக்கூடும். அவளுக்குத் தெரிந்த ஒன்றேயொன்று அந்த கேமரா எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது. லட்சத்தைத் தொலைத்துவிட்டேன் என்பதையும் கடந்து என் தங்கத்தைத் தொலைத்துவிட்டேனே என்பதுதான் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது. 

கேமராவின் கவரைப் பிரித்து முதன்முதலில் அதனைக் கையில் சுமந்தபோது குளிர்ச்சியாக இருந்தது. கருகரு என பளபளப்பாக. கருப்புத் தங்கம் என்று பெயர் வைத்திருந்தேன். தங்கம் என்றே அழைக்கத் தொடங்கினோம். எங்கு சென்றாலும் உடன் வரத்தொடங்கியது. என்னைப் போலவே தங்கத்திற்கும் மிகப்பெரிய பயணம் கோவா.

கோவா பயணம் முடிந்து மங்களூரில் இருந்து கேரளா வழியாக சென்னை வந்து கொண்டிருந்தோம். ரயிலில் ஆரம்பத்தில் கூட்டம் இல்லை. கேரளாவின் உள்ளே நுழைய நுழைய கூட்டம் தாறுமாறாக எகிறிக்கொண்டே சென்றது. முன்பதிவு பெட்டிதான் என்றபோதிலும் தினசரி பயணிகள் அது குறித்ததெல்லாம் கவலை கொள்ளவில்லை. அப்பர் பெர்த்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை கூட எழுப்பி அந்த இடங்களில் அமர்ந்து கொண்டார்கள்.

பகல்நேரப் பயணம். எனவே அந்த மாலை வேளையில் உறங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மேலும் அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் இறங்குவோர் ஏறுவோரின் எண்ணிக்கைக் கூடிக் குறைந்துகொண்டு இருந்தது. “ஒரு பத்து டேசனுக்கு இப்டிதான் இருக்கும். அதுக்கப்றம் எல்லாம் காணாம போயிரும். டிடியும் ஒண்ணு சொல்ல மாட்டான்”, என்றார் ரெகுலர் பாசஞ்சர் ஒருவர்.

அப்பர் பெர்த்தில் எங்களுடைய லக்கேஜ் இருக்கிறது. அந்த லக்கேஜ் ஒன்றின் உள்ளே தங்கமும் இருக்கிறது. அவ்வபோது எக்கி எக்கி அதனைப் பார்த்துக் கொண்டேன். “நான் கவனிச்சிக்கிறேன் பதறாத”, என்றார் அதன் அருகில் அமர்ந்திருந்த ஒரு சேட்டன். அந்தக் கூட்டத்தில் அவ்வளவு பெரிய லக்கேஜையாரும் லவட்டிக்கொண்டு போக முடியாது என்றாலும் தங்கத்தை லவட்ட முடியும். ஒருவேளை பைக்கட்டை திறந்து எடுத்துவிட்டால்? அந்த சேட்டனின் பதிலில் மனம் சமாதானமாகவில்லை.

அவர் பேச்சை மதிக்காமல் சிறிது நேரம் கழித்து எக்கிப் பார்த்தால் - சேட்டன் என் பைக்கட்டின் மீது தலையை வைத்துப் படுத்திருந்தார். அவர் தலை வைத்திருந்த இடத்தில்தான் தங்கம் இருக்கிறது. யோவ்.... அவரைத் தட்டி எழுப்பி அந்தப் பையைப் பிடுங்கி வேறுபக்கம் வைத்துவிட்டு அமர்ந்தேன். இப்போது மீண்டும் ஏதோ ஒன்று உள்ளுக்குள் உதைக்க எக்கிப் பார்த்தால் என் பைக்கட்டின் மீது ஒய்யாரமாக கால்களை வைத்து குறட்டை விட்டுக் கொண்டிருந்தான் அந்த மாபாவி.

அதன்பின் சென்னை வரும் வரையிலும் தங்கம் என் மடியிலேயே இருந்தது. பின்வந்த எல்லா பயணங்களிலும் தங்கம் என் மடியில்தான் இருக்கும். அப்படிப்பட்ட தங்கத்தை தொலைத்துவிட்டேன் என்பது எத்தனை கொடூரமான செயல்.

கேமரா தொலைந்த அதிர்ச்சி இந்த ஒட்டுமொத்த பயணத்தையும் உருக்குலைக்கக் கூடும் என்பது அதைவிட பயமாய் இருந்தது. விமானம் ஏறும்போது கேமரா என்னிடம் இருந்த நினைவு இருக்கிறது. இறங்கும்போதும் இருந்ததா? ஒவ்வொரு இடமாக லக்கேஜ் மாற்றும் போதும் இருந்ததா போன்ற ஞாபகங்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களாக குழப்ப அதிர்வுகளாகத் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

விமானத்தினுள் நுழைந்த போது கையோடு கொண்டுவந்த லக்கேஜை தலைக்கு மேல் வைத்துவிட்டு, கேமராவை மடியில் வைத்த ஞாபகம் முதலில் வந்தது. அதன்பின் காலுக்கு அடியில் வைத்தேன். பணிப்பெண் அங்கு வைக்ககூடாது என்று சொல்லி மேலே வைக்கச் சொன்னார். இருக்கையில் இருந்து சற்று தள்ளி இருந்த பகுதியில் தங்கத்தை வைத்த ஞாபகம் வந்தது. அதனை வைக்கும்போது அங்கே ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அதில் இருக்கும் தண்ணீர் கேமராவை பதம் பார்த்துவிடக் கூடாது என அந்தப் புட்டியை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டே கேமராவை அங்கே வைத்தேன். என் ஞாபகத்தில் முதலில் அசைவு கொடுத்தது தண்ணீர் புட்டியே. அதில் இருந்தே ஒவ்வொன்றாக நினைவுக்கு முன் ஆரம்பித்தன. விமானம் தரையைத் தொட்ட அதிர்ச்சி தாங்காமல் முகில் அழத் தொடங்க, அந்த சமயத்தில் கேமராவை மறந்திருக்கிறேன்.

“எனக்கு நல்லா தெரியும், அது பிளைட்ல தான் மிஸ் ஆகிருக்கு”, என்று மொத்த கதையையும் அவளிடம் கூறினேன். விமானம் குறித்த தகவலை தேடியபோது அது மீண்டும் டாலஸ் நோக்கிப் பறந்து கொண்டிருப்பதாகக் கூறியது.

“நீங்க இப்பவே ஏர்போர்ட் போயிட்டு வாங்க”, என்றாள் வர்ஷனா. அத்தனை லக்கேஜையும் எடுத்துக்கொண்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு ஏர்போர்ட் செல்வது ஆகாத காரியும். பாவம் ஏற்கனவே நியூயார்க் நெரிசலில் நொந்து போயிருந்தார்கள்.

“அப்டில்லாம் தனியா விட்டுடுப் போக முடியாது. இன்னொன்னு அந்த கேமரா இப்போ டால்ஸ்க்கு போயிருந்தா? இல்ல வேற யாராச்சும் தூக்கிட்டுப் போயிருந்தா?”, அந்தக் கடைசிக் கேள்வியைக் கேட்கும் போது வார்த்தையில் தெம்பில்லை. நியூயார்க் திருடர்கள் நிறைந்த பகுதி என்பது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.

ரயில் அதளபாதாளத்தில் சென்று கொண்டிருந்ததால் மொபைலில் சிக்னல் விட்டுவிட்டுத் தலையாட்டியது. சாண்டிக்கு அழைத்தேன். நியூயார்க் டாலஸ் நேர வேறுபாடு அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. “யோவ் இப்போதான் எந்திக்கிறேன். பசிக்குதே”, என்றார். நிலைமையின் தீவிரத்தைக் கூறினேன்.

“சரி எப்படினாலும் பிளைட் வாறதுக்கு ரெண்டு மணிநேரம் இருக்கு. நான் சாப்டுட்டு ஏர்போர்ட் போறேன்”, என்றார்.

கேமரா விமானத்தில் இருக்க வேண்டும். சாண்டி போய் கேட்கும்போது அவரிடம் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதையாவது உறுதி செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். விமானத்தில் பொருட்கள் தொலைந்து போனால் என்னவாகும் என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன்.

பெரும்பாலான பயணிகள் தங்களுக்கு நிகழ்ந்த மிக மோசமான அனுபவத்தையே பதிவு செய்திருந்தார்கள். குறிப்பாக நான் பயணம் செய்த விமான சேவையைக் கழுவிக் கழுவி ஊற்றியிருந்தார்கள். அதை வாசித்தபோதே பாதி நம்பிக்கை கழன்றுவிட்டது.

எங்களோடு வந்தவர்கள் அனைவரையும் One World Observatoryயினைச் சுற்றிப் பார்க்கும்படி கூறிவிட்டு, சாண்டியோடும் இணையத்தோடும் போராட்டிக் கொண்டிருந்தேன். சாண்டியும் தனக்குத் தெரிந்த தகவல்களை ஒவ்வொன்றாகக் கூறத் தொடங்கினார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

தொடர்ந்த ஆராய்ச்சிக்குப் பின் கஸ்டமர் கேர் நிர்வாகத்தின் பொருட்கள் தொலைந்து போனால் புகார் அளிக்கும் எண்ணைத் தேடிக் கண்டுபிடித்தேன். இந்த எண்ணையே ஒரு புதையலைப்போல ஒளித்து வைத்திருக்கிறார்கள். தொடர்ந்த முயற்சி மற்றும் காத்திருப்புக்குப் பின் அவர்களைத் தொடர்பு கொண்டேன். ஆதியில் இருந்து அந்தம் வரைக்கும் கதை கேட்டார்கள். கூறினேன். எனக்கிருக்கும் பயம் மற்றும் அந்த பொருள் எனக்கு எத்தனை முக்கியம் என்பதைக் கூறினேன். முதல் சில ஊழியர்கள் வேண்டுமென்றே அழைப்பை துண்டித்தார்கள் அல்லது மீண்டும் அழைப்பதாக சாக்குபோக்கு சொன்னார்கள். விடாமல் மீண்டும் மீண்டும் அழைத்தேன். இப்போது ஒரு பெரியம்மா கிடைத்தார். முன்னவர்களை விட மிகக் கனிவாகப் பேசினார். ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவாகக் கூறினார்.

“விமானம் ஒரு நிலையைத்தில் இருந்து இன்னொரு நிலையம் நோக்கிப் புறப்படும் முன் அதனை சுத்தம் செய்வோம். அப்போது பயணிகள் தவறவிட்ட பொருட்கள் ஏதேனும் கிடைத்தால் அதனை அந்த விமான நிலையைத்தில் இருக்கும் எங்கள் அலுவலகத்தில் ஒப்படைத்துவிடுவோம். அப்படி ஒப்படைக்கபட்ட பொருட்களின் விபரங்களை கணினியிலும் ஏற்றிவிடுவோம். இதுபோல் யாரேனும் விசாரித்தால் தகவல்களைக் கூறுவோம். நீ தவறவிட்ட பொருள் இதுவரை கணினியில் ஏற்றப்படவில்லை. அப்படியென்றால் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதானே அர்த்தம்”, என்றார்.

என்னிடம் இருந்த நம்பிக்கை முற்றிலுமாகத் தொலைந்திருந்தது. பின் அவரே தொடர்ந்தார். “கனெக்டிங் பிளைட் என்றால் நாங்கள் சுத்தம் செய்ய மாட்டோம். அதாவது இரண்டு மூன்று நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் சமயங்களில் எது கடைசி நிறுத்தமோ அங்கு மட்டுமே இந்த சோதனை நிகழும். நீ கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, நீ பயணித்த விமானத்திற்கு நியூயார்க் கடைசி நிறுத்தம். எதற்கும் அந்த அலுவலகத்திற்கு அழைத்துப் பேசிவிட்டு உன்னை மீண்டும் அழைக்கிறேன்”, என்று கூறினார். அவர் நிச்சயமாக அழைப்பார் என்ற நம்பிக்கை வந்தது.

சாண்டி இனி டாலஸ் விமான நிலையத்திற்கு சென்றாலும் அது வீண். அதனால் அவரை அழைத்து இத்தனை நேரம் நடந்த உரையாடலைக் கூறினேன். இடைப்பட்ட நேரத்தில் அந்த பெரியம்மா அழைத்தார் “எங்கள் நிர்வாகிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை. மணி அடிக்கிறது. எடுப்பதற்கு ஆள் இல்லை. உனக்காக நான் ஒரு உதவியைச் செய்கிறேன். அப்படிச் செய்வது சரியா தெரியவில்லை. அந்த அலுவலகத்தின் நேரடி தொடர்பு எண் தருகிறேன். நீயும் தொடர்புகொள்ள முயற்சி செய்”, என்றார். அவர் கொடுத்த எண்ணிற்கு மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டதில் என்னுடைய நூறாவது அழைப்பிற்குப் பதில் கிடைத்தது.

“கேமரா பேக் போன்ற ஒன்று எங்களிடம் இருக்கிறது. ஆனால் அது உங்களுடையதா என்றெல்லாம் தெரியாது. பயணிகள் நேரில் வராமல் அது குறித்த மேலதிகத் தகவலை எங்களால் தர முடியாது”, என்ற கடுமையான பதில் கிடைத்தது. லேசான நிம்மதி அவர்களிடம் ஒரு கேமரா பேக் இருக்கிறது.

அது என்னுடைய தங்கம்தானா என்பதை உறுதி செய்வதற்காகப் போராடினேன். அந்தப் பெண் மசியவில்லை. நான் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் பொருத்தமற்ற பதிலைக் கூறினார். போதாக்குறைக்கு வேறொன்றையும் கூறினார், “இங்க ரெண்டு கேமரா பேக் இருக்கிறது. இரண்டும் பார்ப்பதற்கு ஒரேமாதிரி இருக்கு. என் தலைக்கு மேல் கேமரா இருக்கிறது. ஆக நான் உன்னிடம் இதற்குமேல் பேச முடியாது”, என்று கூறி என் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தார்.

என்னடா லேசா மூச்சு விடுறதுக்குள்ள மூச்ச நிறுத்திட்டீங்க என்று தோன்றியது. அடுத்த வேலை விமான நிலையம் செல்ல வேண்டும். தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசம். ஆனால் இங்கிருந்து ஒருமணி நேர தொலைவில் இருக்கிறது விமான நிலையம். உள்ளே சுற்றிப்பார்க்கச் சென்றவர்கள் வர நேரமாகும் போல் தெரிந்தது. சூழ்நிலை சாதகமாக அமையுமா? சந்தோஷப்படலாமா கூடாதா என்கிற ரெண்டுங்கட்டான் மனநிலை.

சிறிதுநேரத்தில் ஓர் அழைப்பு. அதே பெரியம்மா. “நியூயார்க் விமான நிலைய ஊழியரிடம் பேசிவிட்டேன். உன் கேமரா பை மிக பத்திரமாக எங்களிடம் இருக்கிறது. உன் பயணச் சீட்டு மற்றும் ஐடி இரண்டையும் காண்பித்து அவர்களிடம் சென்று வாங்கிக்கொள்ளலாம்”, என்று கூறினார். மீண்டும் மீண்டும் அவர் வாயால் அதனை உறுதி செய்வதற்காக வேறுவேறு வழிகளில் ஒரே கேள்வியைக் கேட்டேன்.

“மிக்க நன்றி”, நன்றேன். அந்த விமான நிலைய அதிகாரி என்னிடம் கூறிய இரண்டு பேக் குறித்துக் கூறினேன்.

“அது டகால்டி. உன்னைக் குழப்புவதற்காகச் சொன்ன பதில். நீ வந்த விமானத்தில் உன்னுடைய கேமரா பேக் மட்டுமே கிடைத்ததாகக் கூறினார். கணினி கோளாறு காரணமாக அதனை இன்னும் சர்வரின் ஏற்றவில்லை. இல்லையென்றால் எப்போதோ உன் பதட்டத்தைக் குறைத்திருப்பேன்”, என்றார்.

“உன் பேச்சில் மிக அதிகமான பதட்டம் தெரிந்தது. அதற்காகவே பலமுறை அவர்களைத் தொடர்புகொள்ள முயன்று, மிகத் தெளிவாக மிக நிதானமாக அத்தனை தகவல்களையும் பெற்றேன். அதன்பின்னே உன்னை அழைத்தேன்.”, என்றார். மிக அதிகமாக சிரித்தார். என்னையும் புன்னகைக்க வைத்தார். பேசும்போதே அவருக்கு மூச்சு வாங்கியது.

“உனக்கு ஒண்ணு தெரியுமா?”, என்றார்.

“இன்னிக்கு எனக்கு இங்க கடைசி நாள். அண்ட் யூ ஆர் மை லாஸ்ட் காலர்.”, என்றார்.

“Unfortunately you are a lucky caller”, என்றார்.

“நான் கிளம்பிப் போறதுக்கு முன்னாடி உன்னோட சோகத்தையும் சேர்த்து எடுத்துட்டுப்போக விரும்பல. உன் பை உனக்குக் கிடைக்கனும்ன்னு உன்னவிட அதிகமாக பதறினது நான்தான் தெரியுமா?”, என்றார்.

“Yes, you are lucky”, என்றார்.

“Yes I’m lucky because you listened me”, என்றேன்.

மிகப்பெரிதாகச் சிரித்தார். இப்போதெல்லாம் ஒவ்வொருமுறை அந்த கேமரா பையைப் பார்க்கும்போதும் பெரியம்மாவும் அவர் கூறிய சொற்களும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகின்றன. தொலைந்து கிடைத்ததற்கான இடைவெளி அசாதாரணமானது. சர்வ சாதாரணமாக்  கடக்கச் செய்தவர் அவர்.. கோடி நன்றிகள் தெய்வமே.  


-    சுபம்

நியூயார்க் – Are you Lucky? - 1


நியூயார்க் விமானநிலையத்தின் வெளிப்புறம் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது. இங்கு வருவது இரண்டாவது முறை என்பதால் முதல்முறை வந்தபோது இருந்த அந்நியத்தன்மை இம்முறை இல்லை. புது ஊரைப் பார்க்கிறோம் என்கிற பரபரப்பு இல்லை. அமெரிக்க உள்நாட்டுப் பயணங்கள் பழகிய ஒன்றாக மாறியிருக்கின்றன. முதல்முறையைப் போலவே இம்முறையும் நியூஜெர்ஸியில் தங்குவதற்கான ஏற்பாடு செய்திருந்தோம். முதல்முறை வந்தபோது விமானத்தில் இருந்து இறங்கிய நொடியில் அவரச அவரசமாக கால் டேக்ஸி புக் செய்து நியூஜெர்ஸி போனதைப்போல இம்முறை நடந்து கொள்ளவில்லை. கால் டேக்சிக்கு ஆகும் செலவில் பாதிதான் பேருந்து மற்றும் மெட்ரோவுக்கான செலவு என்பதை தெரிந்து வைத்திருந்தேன். 

நியூயார்க் போன்ற பயணங்கள் எந்த அளவிற்குச் செலவு வைக்கக் கூடியதோ அதே அளவிற்கு நேரத்தையும் எடுத்துக்கொள்ளக் கூடியது. It’s a happening city. நகர்ந்து கொண்டே இருக்ககூடியது. அதனுடைய நகர்விற்கு ஈடுகொடுக்க வேண்டுமென்றால் நாமும் சம வேகத்தில் ஓட வேண்டும். இங்கேயே தங்கி பிழைப்பு நடந்த்துபவர்களுக்கு அந்தப் பிரச்சனை இல்லை. நமக்கு இருக்கும் நேரம் மிகக்குறைவு. தெளிவான திட்டமிடல் தேவை. அதேநேரம் அரக்கபறக்கவும் ஓடமுடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு தெளிவாகத் திட்டமிடுகிறோமோ அத்தனை இடங்களைப் பார்க்கலாம். அவ்வகையில் கால் டேக்ஸி சிறந்த ஒன்று. ஆனால் பர்ஸை பதம்பார்த்துவிடும். செலவைத் தவிர்க்க வேண்டுமென்றால் கூடுதல் திட்டமிடல் அவசியம். அதனால் நேராக நியூஜெர்ஸி செல்லாமல் நியூயார்க்கின் சில இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு இரவு அறைக்குச் சென்றுவிட்டு, பின் டைம் ஸ்கொயர் வரலாம் என்று திட்டமிட்டிருந்தோம்.

முகில் தன் ஒரு வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறான் என்பதால் இதுவரைக்குமான பயணங்களில் இருந்து இது முற்றிலும் வேறுவிதமாக  இருக்கப்போகிறது என்பது முன்பே தெரிந்தது. குறிப்பாக அவனுக்கான உணவுகளும், பயணமுறைகளும் அவனுக்கும் எங்களுக்குமே புதிது. அலைச்சல் மிகுந்த ஒரு பயணத்தை எப்படி எதிர்கொள்ள இருக்கிறான் என்பதும் ஒரு கேள்வி.

அமெரிக்காவின் எந்தவொரு மாகாணத்திலும் குழந்தைகளுக்கான கார் சீட் இல்லாமல் எங்கும் பயணிக்க முடியாது. ஆக இந்தப் பயணத்திற்கான திட்டமிடலில் அதுகுறித்தும் மிக அதிகமான ஆராய்ச்சி தேவைப்பட்டது. இந்த ஊரில் குழந்தைகள் விஷயத்தில் தவறிழைத்தால் சட்டம் கண்களைப் பிடுங்காது மாறாக குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்ளும் என்று மிரட்டியிருக்கிறார்கள். ஆக அசால்ட்டாக இருக்க முடியாது.

ஊபர் போன்ற கால் டாக்ஸி நிறுவனங்கள் Infant car seat உடன் கூடிய வாகனங்களை மக்கள் நலன் கருதி வைத்திருக்கின்றன என்றாலும் அவை கிடைப்பது அரிது. காத்திருக்க வேண்டும். Yellow Cab, Infant Seat இல்லாமல் ஏற்றிக்கொள்ள சம்மதிப்பார்கள், ஆனால் ரிஸ்க். எந்த டாக்ஸியாக இருந்தாலும்  உங்களிடம் கார் சீட் இருந்தால் அனுமதிப்பார்கள் என்றும் எழுதியிருந்தார்கள் அனுபவஸ்தர்கள். ஆக நியூயார்க் நகரம் முழுக்க கார் சீட்டையும் தூக்கிக்கொண்டு திரிய வேண்டும் என்பது புது சவால். நல்லவேளையாக Infant கார் சீட்டை எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி விமானத்தில் அனுமதிக்கிறார்கள் என்ற தகவல் தெம்பைக் கொடுத்தது.

நியூயார்க், லாஸ் வேகாஸ் போன்ற நகரங்களைப் பொறுத்தவரை வாடகைக் கார் (Rental Car) எடுப்பது அநாயாவசியச் செலவு மற்றும் தேவையற்ற தலைவலி. பார்க்கிங் தேடி அலைவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். இந்த பார்க்கிங் தலைவலி அமெரிக்காவின் பெரும்பாலான டவுன் டவுனிலும் உண்டு என்பதும் மிக முக்கியமான தகவல்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் ரெண்டல் கார் என்பது நமது சொந்தக் காரைப்போல, விமானம் இறங்கி மீண்டும் ஏறும் வரைக்கும் நம்முடைய சொத்து. லக்கேஜ் மாற்றம், infant கார் சீட் மாற்றம் போன்ற தலைவலிகள் கிடையாது. நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களுக்குப் போய்வரலாம்.  இருந்தும் என்ன! நியூயார்க்கில் ரெண்டல் கார் ஓட்ட முடியாதே. இதுபோக மற்றுமொரு லக்கேஜ் முகிலுக்கான Stroller. அதுபோக நான்கு நாட்களுக்கான எங்களுடைய பெட்டி படுக்கைகள். இந்த இடத்தில் கைகொடுத்தது முகிலின் Stroller. ஒட்டுமொத்த லக்கேஜையும் அதில் வைத்துகொண்டு முகிலை கையில் வைத்துக்கொள்வது உத்தமான வழிமுறை என்பதைக் கண்டுபிடித்திருந்தோம்.

ஆச்சா...! இதுவரை நான் கூறிய தகவல்கள் அனைத்தும் இந்த பயணத்தின் முன்தேவைகளை. கட்டுமானங்களை. இப்போதுதான் திரைக்கதையின் சுவாரசியமான பகுதியின் உள் நுழைய இருக்கிறோம்.

நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து முதல் வேலையாக 9/11 நினைவிடத்தைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அறைக்குச் செல்லலாம் என்று முடிவு செய்திருந்தோம். 9/11 நினைவிடத்தின் அருகிலேயே புதிதாக முன்பிருந்ததை விட மிகப்பெரிதாக ஒரு கட்டடம் கட்டியிருக்கிறார்கள். One world Observatory அதன் பெயர். 110 மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டிடத்தின் உச்சியில் நின்று நகரத்தைப் பார்த்தால் அற்புதமாக இருக்கும். மேலும் உச்சிக்குப் பயணம் செய்யும் மின்தூக்கியில் நியூயார்க் எனும் நகரம் உருவான கதையை மூன்று நிமிட காணொளியாக ஓடவிடுவார்கள். அந்தக் காணொளியுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக நமது காதும் அடைக்கத் தொடங்கும் போது நகரின் உச்சத்தில் நிற்போம்.

விமான நிலையத்தில் இருந்து பேருந்து ஏறி, அங்கிருந்து ஒரு மெட்ரோ ரயில் மாறி இந்த இடத்திற்கு வந்து சேர்வதே திட்டம். சுமார் ஒரு மணிநேரப் பயணம். எல்லாவற்றையும் நன்கு அறிந்துகொண்ட நான் அறியாத விஷயம் பேருந்தில் எப்படி டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது குறித்து. இதற்கு முன்னான நியூயார்க் பயணத்தில் சரியான சில்லறையைக் கொடுத்தால் டிரைவரே டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்து விடுவார். ஆக இம்முறையும் அப்படித்தானே என்று நினைத்தது தவறு. அந்தப் பயணத்தின்போது ஒவ்வொருமுறையும் நியூயார்க்கில் இருந்து நியூஜெர்ஸிக்காக மட்டுமே பேருந்தை உபயோகித்தோம். நியூயார்க் உள் சுற்றுவதற்கு மெட்ரோ. ஆக நாங்கள் பயணித்த முதல் ரயில் நிலையத்தில் எங்களுக்கான மெட்ரோ அட்டையை வாங்கிக் கொண்டோம்.

இங்கு கவனிக்கத் தவறிய விஷயம் இந்த மெட்ரோ அட்டையின் பயன்பாடு குறித்து. நியூயார்க் டூ நியூஜெர்ஸி என்பது வெளியூர் பேருந்துகள். ஆக அவற்றில் அந்தந்த நிறுத்தங்களில் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். இதுவே நியூயார்க் நகரின் உள் சுற்றிவரும் உள்ளூர்ப் பேருந்துகள் என்றால் அவற்றிற்கும் மெட்ரோ அட்டை அவசியம். இதைத் தெரிந்துகொள்ளும்போது முதல் பேருந்தை தவறவிட்டிருந்தோம். அதற்கே இருபது நிமிடம் வீண் என்பது வேறுவிஷயம். மெட்ரோ அட்டையை அருகில் இருந்த இயந்திரத்தில் இருந்து பிடுங்கி எடுத்தபின் மேலும் இருபது நிமிடங்கள் கடந்திருந்தன. இரண்டு குடும்பங்களாக ஏழு பேர் வந்திருந்தோம். எங்களைச் சுற்றி லக்கேஜ் மலைபோல் இருந்தது.

பேருந்து வந்த நிமிடத்தில் இருந்து அடுத்த சில நிமிடங்களுக்கு லக்கேஜ் மொத்தத்தையும் ஏற்றிமுடித்த போது தாவு தீர்ந்தது. இதற்குள் மற்ற பயணிகளும், பேருந்தின் டிரைவரும் முகம் சுளிக்க ஆரம்பித்தனர். These Indian Fellas என்று யாரேனும் முனங்கி இருக்கக்கூடும்.

அடுத்த சவால் இவை மொத்தத்தையும் மெட்ரோவில் ஏற்ற வேண்டும். மெட்ரோவில் ஏற்றுவது சவால் அல்ல. மெட்ரோ இருக்கும் இடத்திற்கு நகர்வதே மிகப்பெரிய சவால்.

நியூயார்க்கின் மெட்ரோ சேவை என்பது ஒரு நூற்றாண்டிற்கு முன்பே பூமியின் பாதாளத்தைக் குடைந்து கட்டமைக்கப் பட்ட ஒன்று. ஆக நமக்கான ரயிலைப் பிடிப்பதற்காக ஒன்று சில பல தளங்கள் பூமிக்குக் கீழே இறங்க வேண்டும். அல்லது பூமிக்கு மேல்.

சென்னையில் பறக்கும் ரயிலில் போய் இருக்கிறார்களா? இப்போது வரைக்கும் எனக்குக் குழப்பக்கூடிய விஷயம் தரமணியில் இருந்து வேளச்சேரி போறதுக்கு இந்த பிளாட்பாரமாஅந்த பிளாட்பாரமா என்பது. தப்பாக ஏறினோம் தொலைந்தோம். மீண்டும் சில நூறு படிகளை ஏறி இறங்க வேண்டும். அதேபோன்ற நிலைதான் இங்கும். இத்தனைக்கும் மிகத்தெளிவான கைகாட்டிகள் இருந்தாலும் அங்கு இருக்கும் கூட்டத்திலும், பரபரப்பிலும் வேகத்திலும் வியர்த்து ஊற்றும். இவற்றிற்கு மத்தியில் லக்கேஜ் வேறு. முக்கியமாக கார் சீட். முதல் முறை நியுயார்க் மெட்ரோ மெட்ரோ ரயில் நிலையத்தைப் பார்த்தபோது ஹாரிபட்டரில் வரும் நகரும் மாடிப்படிகளைப் பார்த்ததைப் போல ஓர் உணர்வு.  

ஆக அனைத்தையும் சமாளித்து அந்த பாதாள ரயிலிலும் ஏறியாயிற்று. அத்தனை லக்கேஜ்ஜும் இருக்கிறதா என சரிபார்த்தபோது மூச்சு வாங்கியது. முகில் சமாதானமாய் இருந்தான். பெரும் பயணங்கள் அவனுக்கு இப்போதுதான் பழகத் தொடங்கி இருக்கின்றன.

அவனைத் தோளில் போட்டுக்கொண்டே மீண்டும் மீண்டும் ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தேன். உள்ளுக்குள் இருக்கும் ஆதி பயம் அனைத்தும் ஒழுங்காக நடப்பதைக் கண்டு மிரண்டது. சான்சே இல்ல. எப்டி பெல்ட்டகூட மறக்காம வந்தேன்?

முன்பொருமுறை நண்பர் ஒருவர் தீம் பார்க்கின் உள்ளிருந்து கொளுத்தும் வெயிலில் தன் காரை நோக்கி ஓடிய ஞாபகம் வந்தது. அப்போது முகில் பிறந்திருக்கவில்லை.  நாங்கள் நின்ற இடத்தில் இருந்து காருக்குச்  சென்று வர குறைந்தது ரெண்டு மைல் நடக்க வேண்டும். “ஜீ என்னாச்சு?” என்றேன். “பாப்பா டயப்பர மறந்து வச்சிட்டு வந்துட்டேன் ஸ்ரீனி” என்றார். தக்காளி என்னவானாலும் இந்த டயப்பர மட்டும் எப்பயும் மறக்ககூடாது என்று நினைவுபடுத்தும் நண்பர் அவர். அப்படி இருக்க எப்படி எல்லாம் இவ்வளவு கச்சிதமாக?

யோசித்துக் கொண்டிருக்கும்போதே வலது கையில் இருந்து இடது தொடையை நோக்கி இறங்கும் ஏதோ ஒன்று குறைவதை அப்போதுதான் கவனித்தேன். கேமெரா பேக்.

இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. அதைக் காணவில்லை. அதன் உள் இருக்கும் அத்தனை லென்சையும் கூட்டிப்பார்த்தால் ஒரு அதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம்.

ஒரு இடி விழுந்து பின் காடதிருமே அப்படி ஓர் அதிர்வு இதயம் முழுக்க...

-    To be continued


6 Jul 2019

போக்கு லாரி

போக்கு லாரி "அண்ணாச்சி பையன கொஞ்சம் மேல சருவாம வர சொல்லுறியளா, நா வண்டி ஓட்டவா வேணாமா", டிரைவரின் பேச்சில் கிண்டலும் கோபமும் கொஞ்சம் இயலாமையும் இருந்தது. "தம்பி கொஞ்சம் தூங்காம வாரியளா" என்று எத்தனையோ முறை கூறிவிட்டார், என்னால் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தகக் குளிரும், லாரியின் குலுங்களும், இளையராஜாவின் வரிகளும் போதுமானதாக இருந்தன, போதையான ஒரு தூக்கத்திற்கு. தூங்கவே கூடாது என கண்களை நன்றாக விரித்தாலும், என்னையே அறியாமல் சாமியாடுகிறேன். "எப்போதும் ஒம்போது மணிக்கெல்லாம் தூங்கிருவான், இப்ப டையம் நடுராத்திரி ஆச்சு, ஏல சீனா தூங்காம வாடே", மாமாவால் மட்டும் என்ன செய்துவிட முடியும்? தென்காசியில் இருந்து சென்னைக்குச் செல்லும் போக்கு லாரியில், வீட்டுச்சாமானை ஏற்றிக்கொண்டு திருவள்ளூருக்குப் புலம்பெயர்வதுதான் எங்கள் திட்டம். நண்பனின் அப்பாவின் மூலமாக சென்னை செல்லும் போக்கு லாரி ஒன்றைக் கண்டுபிடித்து, வாடகை கொடுத்து, தேதியும் குறித்தாயிற்று. போக்கு லாரியில் வாடகை குறைவு, சென்னை வரைக்கும் வெற்று வண்டியாகச் செல்லும் என்பதால் லாரி டிரைவரைப் பொறுத்தவரையில் அவருக்குக் கூடுதல் வருமானம். எங்களைத் தவிர வேறுயாரும் கிடையாது, எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றிக்கொள்ளலாம் என்று கூறி இருந்தார்கள். எங்களுடைய பொருள் பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு சின்ன கட்டில் ரெண்டு பீரோ, ஒரு டிவி இதர பாத்திரங்கள். பாதி லாரி கூடத்தாங்காது. இத்தனை நாட்கள் சென்னைக்குப் புலம் பெயர்வது தான் ட்விஸ்ட்டாக இருந்தது என்றால், சென்னைக்கு அழைத்துச் செல்லும் லாரியிலும் வந்து சேர்ந்தது ஒரு ட்விஸ்ட், திருச்சிக்கு இடம்பெயரும் குடும்பம் ஒன்றும் எங்களோடு வரவிருப்பதாகவும், லாரியில் ஏற்கனவே தாராளமான இடம் இருப்பதால், பாத்திர பண்டங்களோடு அவர்கள் மூவரும் பின்னாடியே இருந்துகொள்வதாக வாக்குக் கொடுத்திருந்தார்கள். எங்கள் யாருக்கும் இதில் உடன்பாடில்லை என்றாலும் நாமே போக்கு லாரியில் செல்கிறோம் என்பதால் மறுப்புத் தெரிவிக்க முடியா சூழல். சரியாக மாலை ஆறுமணிக்கு பயணம் ஆரம்பமாகியது. கிளீனர் சீட்டில் ஜம்மென்று அமர்ந்து பயணத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். தென்காசிக்கு விடை கொடுக்கும் உணர்வை விட சென்னைக்கு பயணமாகிறோம் என்ற உணர்வு அலாதியாக இருந்தது. பயணம் ஆரம்பித்து ஒரு மணிநேரத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. திடிரென லாரிக்குப் பின்புறம் இருந்து டம்டம் டம்மென பெரும் சப்தம். லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு, பின்பக்கக் கதவுகளைத் திறந்து பார்த்தால், அங்கிருந்த மூவரும் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக கீழேக் குதித்தார்கள். "இன்னும் ஒரு நிமிஷம் கூட இங்க உக்கார முடியாது, பயங்கர கொசுக்கடி, எங்கள முன்ன ஏத்திகோ" என்று வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள் அந்த மூவரும். முன்புறம் இன்னும் ஒருவரை வேண்டுமானால் ஏற்றிக்கொள்ளலாம், அவர்களோ மூன்று பேர். அந்த மூவரும் பேருந்தில் வருவதாகத் தான் கூறியிருக்கிறார்கள். இந்த டிரைவர் காசுக்கு ஆசைப்பட்டு அவர்களிடம் கணிசமான தொகையைப் பெற்றுக்கொண்டு லாரியின் பின்புறம் அமர்ந்து வரும் யோசனையைக் கொடுத்திருக்கிறார். இதெல்லாம் கொசுவுக்குத் தெரியுமா என்ன? இடுக்குப்பிடிப்பான, குறுகலான இடத்தில் நான்கு பேர் அமர்ந்திருந்தோம், கிளீனர் சீட்டில் இரண்டு பேர், இருப்பதிலேயே நான் தான் சின்னபையன் என்பதால், கியர்பாக்சுக்கு அருகில் இருக்கும் இடைவெளியில் உட்கார வைத்தார்கள். அடுத்த சில மணி நேரங்களுக்கு எதுவும் தெரியவில்லை. இரவு உணவை சாலையோரக் கடை ஒன்றில் முடித்துவிட்டு ஏறியது தான் தாமதம், தூக்கம் கண்களை சொக்க ஆரம்பித்தது. எவ்வளவோ முயன்று பார்த்துவிட்டேன் முடியவில்லை. ஏற்கனவே அன்றைய காலையில் இருந்து பயங்கரமான அலைச்சல், TANCET எழுத நெல்லை சென்றுவந்தது, வீட்டினை திருப்பிப் போட்டுக் கவிழ்த்தது என பயங்கர அலுப்பு. அத்தனையும் சேர்ந்து என்னை உருட்டி எடுத்துக் கொண்டிருந்தது. எங்கெங்கோ உடலை நெளித்து ஒருவழியாக படுத்துவிட்டேன். இருப்பதிலேயே சின்னப்பையன் என்பதால் யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. எப்போடா திருச்சி வரும் என்று இருந்தது. திருச்சி வந்து அவர்கள் பொருட்களை இறக்கி வைத்ததுதான் தாமதம், நேராக ஏறிச்சென்று க்ளீனர் சீட்டில் அமர்ந்து கொண்டேன். திருச்சியில் இருந்து ஆரம்பமான பயணம் மறக்க முடியாத ஒன்றாக மாறியிருந்தது. க்ளீனரும் மாமாவும் தூங்கியிருக்க, அதற்குப் பிறகான பயணத்தில் டிரைவரை தூங்காமல் பார்த்துக்கொண்டது நானாகத்தான் இருக்கவேண்டும். "நைட் இட்லி தோச சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும், பரோட்டா சால்னா சாப்பிடனும், அதுதான் செமிக்காமா நல்ல உள்ள கெடந்து பொறட்டிக்கிட்டு இருக்கும். அப்போதான் தூக்கம் வராது" என்றெல்லாம் இலவச டிப்ஸ் கொடுத்தார், லாரி டிரைவரான கதையில் இருந்து அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் என அவர் கடந்து வந்த பாதை அந்த இரவு மிக நீளமாக நீண்டு கொண்டிருந்தது. இருந்தும் அவருடைய கதைகள் எதுவும் உவப்பாக இல்லை. ஏதோ ஏமாற்றப்பட்டதைப் போன்ற உணர்வு. விழுப்புரம் நெருங்கும் போது நன்றாக விடிந்திருந்தது. வண்டி நகர முடியாத அளவிற்கு சாலையில் வாகனங்கள் தேங்கி நின்றன. புதிதாகப் போடப்பட்டிருக்கும் ரயில்வே கேட் ஒன்று பழுதானதால் அதை சரி செய்யும் வரைக்கும் எதுவும் நகராது என்று கூறிவிட்டார்கள். அதனை சரி செய்து, போக்குவரத்து சீராகி அங்கிருந்து கிளம்பும் போது நேரம் நண்பகலை நெருங்கி இருந்தது. "அந்த திருச்சி லோட" ஏத்தி இருக்கவே கூடாதுன்னே என்று மாமாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார். "இந்தத் தாயோளி வண்டில நாமதாம்ல ஏறி இருக்கக் கூடாது என்று மாமா என்னிடம் புலம்பிக் கொண்டிருக்கும் போது பாத்திர பண்டங்கள் அனைத்தையும் இறக்கிவிட்டு பொதிகை அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தோம்.

2 Jul 2019

கோயிந்தா கோயிந்தா


நல்ல உறக்கத்தில் நல்ல பசியில் இருப்பவனை எழுப்பி, யாரேனும் மிளகு பாலும் உப்புமாவும் கொடுத்தால் அவனை எப்படிப் பார்ப்பீர்கள். தெய்வமாக? தெய்வத்தின் தெய்வமாக? அதே தெய்வம் கோயிந்தா கோயிந்தா என உங்களையே தெய்வம் என்றழைத்தால்!

திருப்பதிக்கு வந்து சேர்ந்திருந்த போது நள்ளிரவு, அப்படி ஒன்றும் குளிரில்லை. ஏழுமலையேறும் பேருந்தைப் பிடித்து மலையேறி, மொட்டையடிக்கும் இடம் கண்டுபிடித்து மொட்டையடித்து, குளித்து, பெருமாள் தரிசனத்திற்காக நகரும் போது நேரம் அதிகாலையை நெருங்கி இருந்தது. நல்ல குளிரானது சூடான மொட்டையின் வழியாக மூளைக்குள் புகுந்து தண்டுவடத்தினுள் நுழைந்து பற்களின் வழியே தந்தியடித்துக் கொண்டிருந்தது.

"இங்கயே ரொம்ப நேரம் நிக்க வேணாம். அப்புறம் கூட்டம் ரொம்ப அதிகமாயிரும்" என்று ராகவன் எங்களை இழுத்துக்கொண்டு இலவச தரிசனத்துக்கான கூண்டுக்குள் அழைத்துச் சென்றான். காத்திருப்பு நேரம் குறைந்தது ஆறு மணி நேரம் என்று எழுதியிருந்தார்கள். தூக்கம் கண்ணை சொக்கிக் கொண்டிருந்தது.

நாங்கள் அடைபட்டிருந்த கூண்டு முழுவதும் கோவிந்தா கோஷம். திடிரென யாருள்ளேனும் ஆன்மீக ஊற்று பெருக்கெடுத்தால் 'ஏழுகுண்டலவாடா வெங்கட்ரமணா' என ஆரம்பிக்க, மொத்த கூட்டமும் கோவிந்தா கோவிந்தா என ஆர்ப்பரிக்கும். இதையெல்லாம் கேட்டுகொண்டே இருந்தவன் எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை,

சர்வமும் அமைதியாக இருக்க, திடிரென மொட்டை மண்டையில் டம் டம் டம் என்று அடி விழும் சப்தம். யாரோ காதுக்குள் ஏறி கோயிந்தா கோயிந்தா என்று கத்துவது கேட்டது. அசதி தூக்கம் பசி, எதுவும் கண்களைத் திறக்க விடவில்லை. முகத்தின் மிக அருகில் மொட்டை அடித்த ஒரு பளாபளா நபர், ஆந்திரத் திரைப்படத்தில் வரும் வில்லனைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு கப் நிறைய பாலை என்னிடம் நீட்டினார். நல்ல பெரிய கப். பாதியை குடித்துவிட்டு மீதியை ஆன்டோவிடம் கொடுத்தேன். 

"யாருப்பா அது இப்படி அடிக்கிறான். உன் மண்டைய அடிச்ச அடியில நானே எந்திச்சிட்டேன்" என்றார் ஆன்டோ. பதில் சொல்லும் மனநிலையில் இல்லை. மிளகுப்பால் இன்னும் அதிக தூக்கத்தை வரவழைத்தது. கண்ணை மூடி ஒரு நொடி கூட ஆகியிருக்காது, மீண்டும் யாரோ, அதே டம் டம் டம். முதலில் கனவு என்றுதான் நினைத்தேன். அடியின் வலி இன்னும் ஓங்கி உறைக்க, கண்களைத் திறந்தால் அதே நபர். கைகளில் தட்டு நிறைய சேமியா உப்புமாவை வைத்துக் கொண்டு, "கோயிந்தா லெய் கோயிந்தா, தீசுக்கோ கோயிந்தா" என்றார். அருகிலேயே மணிக்குமாரும், ராகவனும் ஒரு தட்டு நிறைய சேமியா உப்புமாவை வைத்துக்கொண்டு, என்னையே வெறித்துக்கொண்டிருந்தார்கள்.

மணிதான் கேட்டான், "ஏல யார் அவரு, ஆறு மணிக்கு கொண்டு வந்து பால் கொடுத்தாரு, இப்போ ஒம்போது மணிக்கு உப்புமா கொடுக்காரு, நாங்க பாரு அரை மணி நேரமா க்யுல நின்னு வாங்கிட்டு வந்திருக்கோம்" என்று கூறும்போதுதான் முழுவதுமாக முழித்திருந்தேன். அதுவரைக்கும் நடந்து முடிந்த அத்தனையும் கனவு என நினைத்துக் கொண்டிருந்தது மனம். கோயிந்தாவின் முகம் நன்றாக நினைவில் இருந்தது. அவரைத் தேடினேன். எங்கே இருக்கிறார் என கண்கள் சுற்றும் முற்றும் உருண்டன. பார்க்குமிடமெல்லாம் மொட்டை. மொட்டைகளுக்கு மத்தியில் மொட்டை. கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு சில அடி தள்ளி வெகு அருகிலேயே அமர்ந்து, தன் குழந்தைகளோடு பசியாறிக் கொண்டிருந்தார் என் கோயிந்தா. முகம் வில்லனைப் போல் எல்லாம் இல்லை. அப்பாவியான முகம், நிறைய கருணை பொங்கும் கண்கள். 

அற்புதங்கள் எதுவும் நிகழாத நாட்களில் உன்னையே நினைத்துக் கொள்கிறேன். ஆம் நீயே என் அற்புதம். நானே சாட்சி. சீனு - 7:02

3 Feb 2018

தூத்துக்குடி - ஆழி சூழ் உலகு

தூத்துக்குடி

தூத்துக்குடியைப் பற்றிய ஞாபகங்கள் என்னிடம் வெகு குறைவாகவே இருக்கின்றன. நன்றாக சுத்த வேண்டும் என நினைத்த ஓர் ஊர், ஞாபகத்தின் அடுக்குகளில் கூட தங்காமல் போனதை நினைத்தால் சற்றே வருத்தமாக இருக்கிறது. நினைவு தெரிந்த நாளை ஆதியாகக்கொண்டு யோசித்தால் மங்கா மாமா மறுவீட்டிற்காகச் சென்ற தூத்துக்குடிதான் முதலில் நிற்கிறது. மறுவீடு முடிந்து கண்காட்சி ஒன்றிற்குக் கூட்டிச்சென்றார்கள். அதுவொரு மிகப்பெரிய அறை. அந்த அறையின் மத்தியில் தூத்துக்குடியின் மாதிரியா இல்லை தூத்துக்குடியின் துறைமுக மாதிரியா எனத் தெரியவில்லை. ஒரு மிகப்பெரிய நிலத்தின் மாதிரியை முப்பரிமாணத்தில் வைத்திருந்தார்கள். கண்ணாடிக்குள் இருந்த அந்த கடலுக்குள் ஒரு சிறிய கப்பல் ஓடிக்கொண்டிருந்தது. எனக்குப் பின்னால் வரிசையில் இரண்டு கன்னியாஸ்திரிகள் நின்று கொண்டிருந்தார்கள். 'நடங்கடே நடங்கடே'. எங்கிருந்தோ எழும்பிய குரல் அந்த அறையில் இருந்து எங்களை நகர்த்தியது. அவ்வளவு தான் அதற்கு மேல் ஞாபகம் இல்லை. மறுவீட்டில் ஓடியாடித் திரிந்த கணப்பொழுதுகளை எவ்வளவு யோசித்தும் மீட்டெடுக்க முடியவில்லை. 

அடுத்ததாக நான்காம் வகுப்பு இன்பச்சுற்றுல்லா - தூத்துக்குடி. படித்தது கிறிஸ்தவப் பள்ளி என்பதால் முதல் இடமே ஒரு தேவாலயம் தான். ஆனால் அதன் ஆரம்ப சுவடுகள் எதுவும் மீண்டு வருவதாயில்லை. ஒன்று மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது. அது ஒரு நல்ல வெயில் நாள். ஆதவன் வாட்டி வதக்கிக் கொண்டிருந்தான். பேருந்தின் அத்தனை சன்னல்களும் திறந்து விடப்பட்டிருந்த போதிலும் உள்ளே புழுங்கிக் கொண்டிருந்தது. தண்ணீர் ஏகத்திற்கும் உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது. வெயிலின் வெம்மை தாங்காமல் பலரும் சுருண்டிருந்தார்கள். எனக்கு அப்படியில்லை. பயணம் வேடிக்கை நிறைந்ததாக இருக்க வேண்டும். அதுவும் சன்னலோர இருக்கையாக வேண்டும். இன்பச் சுற்றுல்லா என்றால் பெரும்பாலும் பிரபாகரன் சன்னலோர இருக்கையை எனக்கு தந்துவிடுவான். இல்லை கேட்டு வாங்கிவிடுவேன். இல்லை எவ்வித மறுப்பு கூறமாட்டான் என்பதால் என்னுடனேயே வைத்துக்கொள்வேன். 'மக்கா எனக்கு வாந்தி வந்தா மட்டும் ஜன்னல் சீட் கொடுடே' என்பான். 'உனக்கு வாந்தியே வராது. வாரமாறி இருந்தா சொல்லு எழுமிச்ச இருக்கு. மூக்குலவக்கேன்'. 

என்னதான் சன்னலோர சீட் என்றாலும் பெரும்பாலான பொழுதுகளில் பேருந்து முழுவதையும் அளந்துகொண்டே தான் இருப்பேன். 'ஏல சீனு வால பாட்டு பாடுவோம் என்று முன்னால் இருந்து குரல் வரும்'. 'டானஸ் ஆடுவோம் வாடே' பின்னால் இருந்து குரல் வரும். ;இந்த பாட்டுக்கு இன்னும் சவுண்ட் வச்சா இன்னும் நல்லா இருக்கும்லாடே' என்று எவனாது கூறினால். 'நம்ம டிரைவர்தான். இப்போ பாரு எவ்ளோ சவுண்டு வரும்ன்னு' என்று கூறிவிட்டு டிரைவரின் அருகில் நிற்பேன். 

'மக்கா சவுண்ட் போதுமா கேளு' டிரைவர் என்னிடம் கேட்க நான் உள்ளே பார்ப்பேன். 'சூப்பர்ல' என்று பின்புறம் இருந்து சவுண்ட் வரும். இப்படியொரு வாய்ப்பு கிடைத்து டிரைவர் சீட் பக்கம் வந்துவிட்டேன் என்றால் மீண்டும் உள்ளே போக மனமிருக்காது. கண்முன்னே பரந்து விரியும் ஒரு பெரும்சாலை. அதன் ரம்மியத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சன்னலோரமாகத் தெரியும் காட்சிக்கும், டிரைவருக்கு அருகே விரியும் காட்சிக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள். டிரைவர் அண்ணாச்சி சக்கரத்தை வளைத்து ஒடித்து ஓட்டுவதும் லாரிகளையும் கார்களையும் முந்துவதையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். வியர்க்கும் போதெல்லாம் கழுத்தில் கிடக்கும் துண்டை எடுத்து அவர் துடைக்கும் அழகை ஒரு கதாநாயகத் தன்மையோடு ஒப்பிட்டுப் பார்ப்பேன். 'எம்மா எனக்கு டிரைவர் ஆகணும்' என்று சொல்லியதற்கு பரிகாரமாக அம்மா அடித்த அடி இப்போதும் ஞாபகம் இருக்கிறது. 

'ஏலே மக்கா பின்னால வாடே. எம்புட்டு நேரம்தான் அங்கேயே நிப்ப' பேருந்தின் பின்னாலிருந்து குரல் வரும். 'நான் இங்க வந்தம்ன்னா டிரைவர் சத்தத்த கொறைச்சிருவாறு. அதாம்டே அங்கனயே நிக்கேன்' என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் முன்னோக்கி நகருவேன். உறங்கிக் கொண்டிருக்கும் வாத்தி யாராவது கெட்ட சொப்பனத்தில் திடுக்கிட்டு எழுந்து, டிரைவர் அருகில் வந்தால் தோளில்தட்டி உள்ளே போகச்சொல்லுவார். ஆரோக்கிய சார் என்றால் எதுவும் சொல்லமாட்டார். அதற்காக எல்லா பயணங்களிலும் ஆரோக்கிய சாரே வரமுடியுமா என்ன?

தூத்துக்குடி தேவாலயத்தில் இருந்து பேருந்து ஹார்பரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது பேருந்து. பேருந்தே மயான அமைதி. அடித்த வெயிலில் எல்லாவனும் சரக்கடித்ததைப் போல உறங்கிக் கொண்டிருந்தான். ஹார்பர் எப்படி இருக்கும். கப்பல் எப்படி இருக்கும். அம்பிகாக்கா சொன்ன கப்பல் போல் இருக்குமா இல்லை கன்னியாகுமரி பாறைக்குப் போகும் படகைப்போல் ஒன்றைக்காட்டி ஏமாற்றிவிடுவார்களா? கப்பலினுள் போகமுடியுமா. போனால் தொலைந்து போகாமல் இதே பேருந்தினுள் ஏற முடியுமா என்ற எண்ணங்களும் வெளியே தூத்துக்குடியும் நகர்ந்து கொண்டிருந்தன. 

'ஏல ஹார்பரு வரப்போவுது ஹார்பரு வரப்போவுது எந்திரிங்கல' டீச்சர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். 

'ஏல சீனிவாசன் எல்லாரையும் எழுப்புல'. முழித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்தார். பக்கத்தில் பிரபாகரனும் அவனுக்கு அருகில் முத்துச்சண்முகமும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். 

'ஏல அந்தா வாயப்பொழந்து இருக்காம் பாரு அவன் வாயில தண்ணிய ஊத்துல. கூவ எந்திக்கானா பாப்போம்' 

தண்ணிரை ஊற்றினேன் எவனும் எழுந்திருக்கும் அறிகுறியே இல்லை. இந்நேரம் பேருந்து ஹார்பரினுள் நுழைய ஆரம்பித்திருந்தது. இவனுகள எழுப்புறத விட ஹார்பர் முக்கியம். சன்னலினுள் முகத்தைப் புதைத்தேன். பெரிய பேருந்து நிலையம் ஒன்றினுள் நுழைந்ததைப் போல் இருந்தது. கழுத்தை எப்படியெல்லாமோ திருப்பிப் பார்த்தேன். கப்பல் தெரியவில்லை. சிமின்ட் மட்டும் பூசி வெள்ளை அடிக்காமல்விட்ட கட்டிடங்கள் கப்பலை மறைத்துக்கொண்டிருக்க வேண்டும். இரண்டு மூன்று தலை என் சன்னலுக்கு சண்டை போட்டன. 

'இன்னும் கப்ப வரலடே. வந்தா காமிக்கன்'. ஒரு கப்பலின் உரிமையாளனைப் போல் கூறினேன். பேருந்து ஓரிடத்தில் போய் நின்றது'

'எறங்கு எறங்கு எறங்கு ஹார்பர் வந்தாச்சு' வாத்தி சத்தம் கொடுக்கும் முன் எலியை போல கிடைத்த இடைவெளிகளில் நுழைந்து முதல் ஆளாக கீழே இறங்கி இருந்தேன். இந்த இடத்தில் என் அம்மை இருந்திருந்தால் 'பறக்காதல நில்லுல' என முதுகில் ஒன்று விழுந்திருக்கும். 

ஒருத்தன் சீனிவாசன் பின்னாடி நில்லு. இன்னொருத்தன் இங்க வா'. ரெண்டு வரிசையா நில்லு. 

கப்பல் இன்னும் கண்ணுக்குத் தெரியவில்லை. தூரத்தில் ஒரு இரும்பு கேட் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. வாத்தியார் தன்னிடம் இருந்த தாள்களை எடுத்துக்கொண்டு கேட்டை நோக்கி நடந்தார். வாத்தியாருக்கு பதில் கூறுவதற்கேன்றே கேட்டின் அருகில் நின்றவரிடம் சென்று என்னவோ பேசிக்கொண்டிருந்தார். பொறுமையிழந்த இன்னொரு வாத்தியார் அவரை நோக்கி நடந்தார். ரெண்டு பேரும் அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். வெயில் தன் வேலையை இன்னும் மும்மரப்படுத்தி இருந்தது. 'ஹார்பர்ல ஏதோ யூனியன் பிரச்சனையாம்' என்பது மட்டும் அப்போதைய அறிவுக்கு எட்டியிருந்தது. 

இரும்புக்கதவில் இருந்து தூரத்தில் மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். 'என்ன பண்ணுவோம் சார். உள்ள போவ முடியாதாம். சும்மா இங்கன ஒரு நட போவோமா. பயலுவள வர சொல்லட்டுமா' என்று கேட்டுக் கொண்டிருந்தார். 'சேரி சார் அப்டியே செய்வோம்'. என்று வாத்தியார் பேசிகொண்டிருக்கும் போது நான் வாத்தியாருக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். இரும்புக் கதவில் இருந்து தூரத்தில் மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். 

கதவின் இடுக்கு வழியாக கப்பல் தெரிகிறதாவென எட்டிப்பார்த்தேன். ஒரு பெரிய கட்டிடத்தின் உச்சி தெரிந்தது. கதவு திறந்து உள்ளே நுழைந்த சிறிது நேரத்திலெல்லாம் பெரிய பெரிய கருப்பு யானைகளைப் போல் வரிசையாக நின்று கொண்டிருந்த கப்பல்கள் கண்ணில்பட்டன. கப்பலின் பிரம்மாண்டம் அதைத் தாங்கி நிற்கும் கடலின் பிரம்மாண்டம் என தூத்துக்குடி ஒரு மிகப்பெரிய நங்கூரத்தை என்னுள் பாய்ச்சியது அன்றைக்குத்தான். 

'ஏல எவனும் கடல்ல சாடிறாதையள. இவனுவள மேய்க்கிறது பெரும்பாடு சார்' கர்சீப்பில் தன் தலையைத் துடைத்துக் கொண்டே எங்களைப் பார்த்தார் வாத்தி. துடைக்க துடைக்க வியர்வை அவர் முகத்தில் தோன்றிக்கொண்டே இருந்தது.  

அங்கிருந்து அடுத்ததாகப் புறப்பட்ட இடம் முயல் தீவு. 'நா இன்னிக்கு தான் மொதவாட்டி முயல் பாக்க போறேன்', பிரபாகரனிடம் சொன்னேன். தலையாட்டிக் கொண்டான். ரோஜாக்கூட்டம் போல அங்கே துள்ளி விளையாடும் முயல்களைப் பார்க்கப்போவதில் அப்படியொரு அலாதி. ஹார்பரில் இருந்து கிளம்பி வெகுநேரம் ஆகியும் முயல்தீவு வந்தபாடில்லை. பேருந்து ஒரு முள்ளுக்காடு வழியாக இறங்கி பீக்காட்டின் வழியாகச் சென்று ஒத்தயடிப்பாதை ஒன்றில் நின்றது. 

'அண்ணாச்சி இது முயல் தீவு போற பாத இல்லியே. அது தெக்கால போவனும்' என்று டிரைவரிடம் யாரோ கூறியதை வாத்தியாரும் கேட்டுக்கொண்டிருந்தார்.

'ஏல முயல் தீவு போவ முடியாது போல. டைம் ஆயிருச்சு. அடுத்து கப்ப கோயிலுக்கு போவோம்டே. வந்ததும் எழுப்பிவிடுறேன்' என்று கூறிவிட்டு வாத்தி தலைசாய்த்துவிட்டார். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் மயான அமைதி. கூட்டம் கூட்டமாக நகரும் மரங்களை தனியொருவனாக வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தேன். 

சென்றுசேர்ந்த இடத்தின் பெயர் உவரி. தரைதட்டி நின்ற ஒரு கப்பல் ஒன்றை நடுத்தெருவில் விட்டதைப் போல் இருந்தது அந்த இடம். பின்பு தான் தெரிந்தது நாங்கள் வந்து சேர்ந்த இடம் ஒரு தேவாலயம் என்று. அந்தக் கப்பலைச் சுற்றி பல சிறுவர்கள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். கப்பலின் மேல் தளத்தில் இருந்து தரைக்குக் குதித்தால் அடிபடவில்லை. சுற்றிலும் கடல் மணல். தூரத்தில் கடல் தெரிந்தது. நேரமாகிவிட்டதால் கடற்கரைக்குக் கூட்டிச்செல்லவில்லை. 

அதன்பின் எப்போதுமே தூத்துக்குடி சென்றதில்லை. பலமுறை திருச்செந்தூர் சென்றிருந்தாலும், திருச்செந்தூர் ஏதோ திருநெல்வேலிக்கும் பாளயங்கோட்டைக்கும் இடையில் இருப்பதைப் போன்ற நினைப்பு. மரமெடுப்பதற்காக தூத்துக்குடி செல்லும்போதெல்லாம் மாமா உடன்போக வேண்டுமென்று தோன்றும். ஆனால் போனதில்லை.. அம்பிகாக்கா ஊருக்கு வரும்போதெல்லாம் சாக்கடையை 'டிச்' என்று தான் சொல்வாள். தூத்துக்குடியில் சாக்கடைக்கு டிச்சாம். அவளிடமும் தூத்துக்குடி கதைகள் நிறைய இருந்தன. சத்யாவுக்குக் கூட தூத்துக்குடிதான். கல்லூரிக்காக தூத்துக்குடியில் சேர்ந்த குமார் கடலோரக் கதைகள் கூறுவான். 'கூட்டுப்போல' என்பேன். 'நீ வாடே, நீ தான் வர மாட்டக்க' என்பான். அதுவும் உண்மைதான். தூத்துக்குடி இன்னமும் எட்டாத தூரத்திலேயே இருக்கிறது.     

*****

ஆழி சூழ் உலகு வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆமந்துறையில் ஆரம்பிக்கும் கதை தூத்துக்குடி கடலோரக் கிராமங்களின் வழியாக வேறோர் உலகிற்கு என்னை அழைத்துச் செல்கிறது. மீண்டும் தூத்துக்குடி செல்ல வேண்டும். ஆமந்துறைக்கு செல்ல வேண்டும். ஆமந்துறை என்று புனையப்பட்ட உவரியில் இருந்து என் தூத்துக்குடிப் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற தவிப்பு, ஆர்வம் உள்ளுக்குள் ஒரு காட்டுதீயாய்ப் பரவுகிறது. வாசிப்பு என்ன செய்துவிடக்கூடும் என்று கேட்பவர்களுக்கு அந்தப்பயணத்தை சமர்ப்பிக்க வேண்டும். 

நன்றி
நாடோடி சீனு

15 May 2017

நாடோடி எக்ஸ்பிரஸ் - ந்யூயார்க் (எனும்) டாலர் நகரம்

ஒருவேளை முதல் பாகம் இன்னமும் படிக்கவில்லை என்றால் படித்து விடுங்கள். இல்லையென்றாலும் பிரச்சனை இல்லை. இதுவொரு தொடர்கதை அல்ல. :-) 

ந்யூயார்க் (எனும்) கனவுதேசம்


***

ந்யூயார்க் டைம்-ஸ்கொயர் அருகில் இருக்கும் போர்ட் அத்தாரிட்டி பேருந்து நிலையம் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பரபரப்பான பேருந்து நிலையம். கிட்டத்தட்ட நம்மூர் சென்ட்ரல் மற்றும் எக்மோர் கலந்த கலவை. இப்படியொரு பரபரப்பான பேருந்து நிலையத்தினுள் இன்னும் சில நிமிடங்களில் தலை தெறிக்க ஓடப்போகிறோம் அதனை ஒட்டுமொத்த பேருந்து நிலையமும் வேடிக்கைப் பார்க்க இருக்கிறது என்பதெல்லாம் நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று. காரணம் எங்கு எந்தப்பக்கம் திரும்பினாலும் ஒரேபோல் இருக்கும் இந்தப் பேருந்து நிலையமும் அதன் அமைப்புதான். இன்னும் சில நிமிடங்களில் ந்யூஜெர்சி செல்ல வேண்டிய கடைசிப் பேருந்தைப் பிடித்துவிட வேண்டும் என்கிற பரபரப்பு வேறு. 

முதல்தடவை இந்தப் பேருந்து நிலையத்தினுள் வந்து இறங்கியபோது வழக்கம் போல் தரைத்தளத்தில் இருக்கிறோம் என்றுதான் நினைத்தேன். அடுத்த ரயிலைப் பிடிப்பதற்காக இரண்டு தளங்கள் இறங்கி சாலையை அடைந்த போதுதான் நாங்கள் இருப்பது இரண்டடுக்கு கட்டிடத்தில் அமைந்திருக்கும் பேருந்துநிலையம் என்பதும் நாங்கள் இறங்கியது இரண்டாவது தளத்தில் என்பதும் புரிந்தது. மற்றுமோர் ஆச்சரியமான விஷயம் தரைத்தளத்தில் இருந்து இன்னும் இரண்டு தளங்கள் கீழிறங்கிக் கொண்டிருந்தன என்பது தான். முதல்முறையாக அமெரிக்காவின் பிரம்மாண்டம் மிரட்டியது. அதுவும் பேருந்து நிலையத்தில் இருந்தே. அதற்காக அமெரிக்காவிலும் ந்யூயார்க்கிலும் கருப்புப் பக்கங்கள் இல்லாமல் இல்லை. அதனைப் பின்னொரு சமயம் சொல்கிறேன். 



ந்யூயார்க் ஊர் சுற்றலுக்கான திட்டமிடலில் 'பேருந்து' என எங்குமே நாங்கள் குறித்திருக்கவில்லை. அதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று ந்யூயார்க் மிகவும் பரபரப்பான நகரம் என்பதால் சாலைப்போக்குவரத்து மிகவும் நெரிசல் மிக்க ஒன்றாக இருக்கும் அதனால் தேவையில்லாத நேர விரயமாகும். இரண்டு ந்யூயார்க் முழுமையுமே சப்வே (SUBWAY) எனப்படும் பாதாள ரயில்ப்பாதை வழியாக இணைக்கபட்டிருப்பதால் அதனை உபயோகித்துக் கொள்ளலாம். ரயில் கிடைக்காத இடங்களில் கால் டேக்சி என முடிவு செய்திருந்தோம். ஆனால் விதி வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தது. எந்த பேருந்தை உபயோகிக்கவே போவதில்லை என முடிவு செய்திருந்தோமோ அதே பேருந்தில் தான் எங்கள் நாட்கள் தொடங்கி முடிவடைந்து கொண்டிருந்தன என்பது இப்போது வரைக்கும் எங்கள் திட்டத்தில் இல்லாத ஒன்று. 

***

இந்தியாவாகட்டும் இல்லை அமெரிக்காவாகட்டும் எந்த இடம் என்றாலும் ஊர் சுற்றலுக்கான செலவை விட தங்கும் செலவுதான் மிக அதிகமானதாக இருக்கும். அதனைக் கருத்தில் கொண்டுதான் ந்யூயார்க்கில் விடுதி எடுக்காமல் அதன் பக்கத்து மாநிலமான ந்யுஜெர்சியில் அறை எடுத்திருந்தோம். பக்கத்து மாநிலம் என்றாலும் இருபது மைல் தொலைவு தான் என்பதால் பெரியதூரம் இல்லை. இதற்கு முன் ந்யூயார்க் பயணம் மேற்கொண்டிருந்த அனுபவசாலிகளும் இதையேதான் கூறியிருந்தார்கள். ஆனால் அவர்கள் சொல்லாமல் விட்ட விஷயம் ஒன்றிருக்கிறது. அதைத்தான் விதி என்கிறார்கள் அனுபவித்துப் பார்த்தவர்கள். 

ந்யூயார்க் விமான நிலையம் வந்திறங்கிய போது மணி நண்பகல் பன்னிரண்டு. பயங்கர பசி வேறு. விடுதிக்குச் சென்று எங்கள் வருகையை உறுதிசெய்த பின் ஊர்சுற்றலை ஆரம்பிக்கலாம் என்பதுதான் திட்டம். விமான நிலையத்தின் வெளியே ஒரு பெரிய கூட்டமே கால் டேக்சி பிடிப்பதற்காக வரிசை கட்டி நின்று கொண்டிருந்தது. எங்களுக்கான வாய்ப்பு வந்தபோது நாங்கள் மொத்தம் ஒன்பது பேர் என்பதால் மூன்று கால்டேக்சியாத் தான் தரமுடியும் என்று உறுதியாகக் கூறிவிட்டார்கள். லாஸ்வேகஸில் அப்படியில்லை. பதினோரு பேருக்குச் சேர்த்து ஒரு பெரிய வேன் கிடைத்தது. ஆனால் ந்யூயார்க் லாஸ்வேகஸ் இல்லையே. இங்கே கால் டேக்ஸி மொத்தமும் மஞ்சள் வண்ணத்தில் உலா வருவதால் எல்லோ டேக்ஸி (yellow taxi) என்கிறார்கள். 

டாக்சியின் உள் ஏறி அமர்ந்த அடுத்தநொடி டாக்சி ஓட்டுநர் எங்களிடம் ஹிந்தியில் பேச ஆரம்பித்தார். இந்தியர்கள் என்றாலே அவர்கள் இந்திக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும் என்கிற சிந்தனை உலகம் எங்கும் ஒரே போல் தான் இருக்கிறது. அது சிறிது எரிச்சலைக் கொடுத்தாலும் வேறுவழியில்லை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டியிருக்கிறது. அவருக்கு வயது அறுபதிற்கு மேல் இருக்க வேண்டும். எப்போதுமே சிரித்திராத உர்ர்ர்ர் இந்திய முகம். இந்தி பேசுபர்கள் என்றாலே இந்தியர்களாகத் தான் இருக்க வேண்டும் என்கிற சிந்தனையும் உலகம் முழுக்க ஒரே போல் தான் இருக்கிறது. ந்யூயார்கில் இருந்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட எட்டுமுறை கால் டேக்ஸியில் சென்றோம். அதில் ஒரேயொரு முறை தான் இந்தியர் ஓட்டுனராக வந்தார் மற்ற முறைகள் ஓட்டுனர்களாக வந்த அத்தனை பேருமே பங்களாதேஷிகள். அந்த அனுபவத்தின் மூலம் பார்க்கும் போது இப்போது எங்கள் வாகனத்தை செலுத்துபவர் இந்தியே பேசினாலும் நிச்சயம் பங்களாதேஷியாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவரிடம் பயண கட்டண விபரம் தவிர்த்து மேற்கொண்டு ஒருவார்த்தை கூட பேசமுடியவில்லை என்பதால் உறுதியாக எந்த நாட்டுக்காரர் என்று சொல்லத் தெரியவில்லை. இந்த ஒரு ஓட்டுநரைத் தவிர மற்ற அத்தனைபேரும் அட்டகாசமான அனுபவத்தைக் கொடுத்தார்கள் என்பதால் அதனைப் பின்னொருமுறை கூறுகிறேன். இப்போது இந்த ஓட்டுநர் கொடுத்த அதிர்ச்சியை உங்களிடம் கூறிவிடுகிறேன். 

'எங்க போகணும்' என்று கேட்டவரிடம் எங்கள் விடுதி இருக்கும் முகவரியைக் காட்டிய போது 'என்னது ந்யூஜெர்சியா என ஒரு நிமிடம் மிரண்டு வேக வேகமாக யாரையோத் தொடர்பு கொண்டார். அந்த யாரையோவிடம் பேசி முடித்ததும் ந்யூஜெர்சி பக்கத்து ஸ்டேட். வழில ரெண்டு டோல் வேற இருக்கு அதனால நூத்திப்பத்து டாலர் ஆகும் என்ற குண்டைத் தூக்கிப் போட்டார். அதிகபட்சம் நாற்பது டாலர் ஆகலாம் என்று நினைத்திருந்தேன். அவசர அவசரமாக ரகுவிற்கு அழைத்தால் 'ஆமா ஜீ எங்களுக்கும் அதான் சொல்றார். வேற வழியில்ல. பார்த்துக்கலாம்' என்றார். அப்படியென்றால் மூன்று கால்டாக்சிக்கு சேர்த்து முன்னூறு டாலர். டாலசில் இருந்து ந்யூயார்க் சென்று திரும்புவதற்கான விமானக் கட்டணமே நூற்றைம்பது டாலர் தான். 

இது முதல் OMG என்றால் அடுத்தது ந்யூயார்க் சாலைகளின் போக்குவரத்து நெரிசல். சென்னைப் பெருவெள்ளத்தின் போது ஏற்பட்டதே ஒரு சாலை நெரிசல் அதே போல் ஊர்ந்து ஊர்ந்து தவழ்ந்து கொண்டிருந்தன வாகனங்கள். இத்தனைக்கும் எவ்வித குறைபாடுகளும் இல்லாத மிகப்பெரிய சாலைகள். அவற்றால் கூட இப்படி ஒரு நெரிசலைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியான உண்மை. இப்படியே ஊர்ந்து ஊர்ந்து விடுதி வந்து சேர்ந்த போது ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது. அப்போது எடுத்த முடிவு தான் இனி எக்காரணத்தைக் கொண்டும் கால்டாக்ஸி பிடிக்கப் போவதில்லை எங்கு செல்வதென்றாலும் பஸ் அல்லது ரயில் மட்டும் தான் என்று. அப்புறம் எப்படி எட்டு முறை டாக்சி பயணம் என்ற கேள்விக்கு விடை அனுபவமே மிகச்சிறந்த ஆசான் என்பதே.  

லிங்கன் டனல் 

இங்கே ந்யூயார்க் மற்றும் ந்யூஜெர்சியின் பூகோள அமைப்பைச் சொல்வது அவசியமாகிறது. பொதுவாகவே அமெரிக்காவில் என்ன இருக்கிறதோ இல்லையோ தேவைக்கு அதிகமான நதிகள் இருக்கின்றன. அந்த நதிகளை அவர்கள் முறையாக பராமரிக்கவும் செய்கிறார்கள். ந்யூயார்க் மற்றும் ந்யூஜெர்சி இரண்டையும் ஹட்சன் எனும் மிகப்பெரிய நதி பிரிக்கிறது. 



ஹட்சன் நதிக்கரையில் இருக்கும் இந்த இரண்டு ஊர்களையும் இணைக்கும் விதமாக சுமார் இரண்டரை கி.மீ நீளத்தில் நீருக்கடியில் மூன்று சுரங்கவழிச் சாலைகளைக் கட்டியிருக்கிறார்கள் அதுவும் 193௦-களில். பெயர் லிங்கன் டனல். இதன் வழியாக ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன என்பது மிக முக்கியமான விஷயம். இந்த பாதையை உபயோகிக்க சுங்க வரியாக பதினைந்து டாலர் வசூலிக்கபடுகிறது. இந்த எல்லோ டாக்சிக்காரர்கள் இதன் வழியாக செல்வதற்கான கட்டணமாக முப்பது டாலர்கள் வசூலிக்கிறார்கள். இதுவே பேருந்து என்றால் வெறும் ஐந்து டாலரில் நாங்கள் தங்கியிருக்கும் அறையில் இருந்து போர்ட் அத்தாரிட்டி பேருந்து நிலையம் வரைக்கும் வந்துவிடலாம். ஒன்பது பேருக்கு வெறும் நாற்பத்தைந்து டாலர்கள். நாற்பத்தைந்து எங்கிருக்கிறது இருநூறு முன்னூறு எங்கிருக்கிறது. 

***

அன்றைய தினம் உலக வர்த்தக மைய கட்டிடத்திற்குச் சென்றுவிட்டு அங்கிருந்து 'The Grand Central Station' சென்றிருந்தோம். ந்யூயார்க் நகர மையத்தில் அமைந்திருக்கும் GCT ரயில்நிலையம் உலகிலேயே மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ரயில் நிலையம் என்றாலும் இங்கு நாங்கள் சென்றதற்கான மிக முக்கியமான காரணம் எங்கள் கையில் இருந்த பிரியாணி பொட்டலமே. ந்யூயார்க் வந்துசேர்ந்த முதல்நாள் இரவே 'துளசி' என்கிற இந்திய உணவகத்திற்குச் சென்றிருந்தோம். எத்தனை எதிர்பார்த்தோமோ அவ்வளவு கேவலமாக இருந்தது அந்த உணவகத்தின் சுவை. சிக்கன் பிரியாணி கேட்டால் சிக்கன் பிரியாணி மசாலாவை குழம்பு போல் செய்து உண்டக்கட்டி செய்து வைத்திருந்தார்கள். எங்களுக்காவது பரவாயில்லை ஜெகதீஷ் தட்டில் இருந்த தக்காளி சாதம் தான் பரிதாமாக இருந்தது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் இருக்க ரசீதில் இருந்த தொகை மட்டும் தாறுமாறாக எகிறியிருந்தது. 'ஜீ இந்த இந்திக்காரங்க ஹோட்டல்ல சாப்டவே கூடாது' என்றார் பிரகாஷ்.  

அன்றைய மாலை 9/11 நினைவிடம் அருகில் தான் இந்தியன் பிரியாணி பாயின்ட் என்ற கடையைப் பார்த்தோம். நம்மூர்க் கையேந்திபவனைப் போன்ற ரோட்டுக்கடை. பெயர் தான் இந்தியன் பிரியாணி பாயிண்டே தவிர வைத்து நடத்துபவர் பங்களாதேஷி. ஏற்கனவே துளசியை நம்பி ஏமாந்தது போதும் என்று சாம்பிளுக்கு ஒரே ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கி சுவை பார்த்தோம். ஆறு டாலருக்கு மோசமில்லை. நம்பி வாங்கலாம் என்று எங்கள் அனைவருக்கும் மொத்தமாக சொல்ல அவ்வளவு இல்லை என்றும் சிக்கன் ரைஸ் செய்து தருகிறேன் என்றும் கூறினார். மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அத்தனை பேருக்கும் பயங்கர பசி. நல்ல குளிர் வேறு. அன்றைய தினம் முழுவதும் நடந்து நடந்து கடுமையான கால்வலி. அருகில் இருந்த இடங்கள் அனைத்தும் திறந்தவெளிகளாக இருக்க அத்தனை குளிரில், கால்வலியில் நடுங்கிக் கொண்டே சாப்பிட யாருக்கும் விருப்பம் இல்லை. அதனால்தான் அங்கிருந்து கிளம்பி Grand Central Station-க்கு சென்றோம். ஆனால் அங்கேயும் விதி வேறுமாதிரி விளையாடியது. பிரியாணியில் இருந்த சூடு கொஞ்சம் கொஞ்சமாக ஆறிக் கொண்டிருந்தது.     

***

ந்யூயார்க் பயணம் குறித்து எழுத ஆரம்பித்தால் அனுமார் வால் போல் நீண்டுகொண்டே செல்கிறது. பயணக் கட்டுரையைப் பொறுத்தவரையில் இதிதை நிச்சயமாக கத்தரித்துத் தூர எறிந்து விடலாம் என்கிற மனநிலைத் தோன்றும். ஆனால் ந்யூயார்க் பயணத்தில் ஒவ்வொரு நிமிடமுமே ஒரு புதிய அனுபவமாகத் தான் இருந்தது. அமெரிக்காவின் பிரம்மாண்டத்தை அனுபவித்ததாகட்டும் இல்லை அதன் பிரம்மாண்டத்தில் சிக்கித் திணறியதாகட்டும் அத்தனையும் அவ்வளவு சுவாரசிய அனுபவங்கள். இத்தனைக்கும் மத்தியில் இப்போ எதை எழுத எதை நிராகரிக்க என்பதுதான்

#கையறுநிலை

- ஊர் சுற்றுவோம்

13 May 2017

நாடோடி எக்ஸ்பிரஸ் - ந்யூயார்க் (எனும்) கனவுதேசம்

'இப்போ போக முடியாது. பயங்கர பனிமூட்டம். ஒருவேள மேல போனாலும் ஒண்ணும் தெரியாது. எதையும் பார்க்க முடியாது. நீங்க போறதே வேஸ்ட். இன்னொரு நாளைக்கு வேணும்ன்னாலும் அனுமதிய மாத்தித்தாறோம். ஆனா பணத்த திரும்பக் கொடுக்க மாட்டோம். யோசிச்சிச் சொல்லுங்க'. 

அந்தக் கட்டிடத்தில் பணிபுரியும் ஊழியரிடம் இருந்து வந்த இந்த மிரட்டலான தகவலை சற்றும் எதிர்பார்க்கவில்லை நாங்கள். மணி மாலை ஐந்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என மிரட்டிக் கொண்டிருந்த மேகங்கள். பயங்கரமான குளிர்வேறு. இணையம் வழியாக முன்பே முன் அனுமதிச்சீட்டு வாங்கியிருந்ததாலும், எங்கள் பயணத்திட்டத்தின் படி இன்றைக்கு இந்த இடத்தைப் பார்த்தே தீர வேண்டும் என்பதாலும் என்ன செய்வதெனத் தெரியாத குழப்பம். பெரிய பெரிய பயணங்களில் இதுபோன்ற குழப்பங்களும் இடையூறுகளும் வருவது சகஜம் தான். ஆனால் ந்யூயார்க் பயணம் ஆரம்பத்தில் இருந்தே குழப்பமான ஒன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. திட்டமிடலில் ஆரம்பித்த குழப்பம் அதனை நிறைவேற்றுவது வரைக்கும் தொடர்ந்து கொண்டே இருந்தது என்பது தான் ஆகப்பெரும் சோகம். 

சனிக்கிழமை காலை டேலசில் விமானம். அங்கிருந்து மூன்றரை மணி நேரப்பயணம். நண்பகலில் ந்யூயார்க் விமானநிலையம் என நான்கு நாட்களுக்கான பயணத் திட்டத்துடன் ஆரம்பித்திருந்தோம் இந்தப் பயணத்தை. இந்தியாவைப் பொறுத்தவரை பயணத்திட்டங்களுக்கென பெரிதும் மெனக்கெட வேண்டியதில்லை. ஒரு பயணம் இப்படித்தான் இருக்குமென முன்பே வரையறுத்துவிட முடியும். குறைந்தபட்சம் அதிகபட்ச சிக்கல்களை முன்பே அனுமானித்து அதற்கான ஆயத்தங்ககளைச் செய்துவிட முடியும். அதையும் மீறி ஏதேனும் பிரச்சனை வந்தாலும் 'சரி அடுத்ததடவ பார்த்துக்கலாம்' என மனதை சமாதானம் செய்து கொள்வதற்காவது வாய்ப்பிருக்கிறது. காரணம் இந்தியா நம் தாய்நாடு. 

ஆனால் அமெரிக்கா அப்படியில்லை. ஒரு பயணத்திற்கு முன் பல விஷயங்களைக் கருத்தில் கொள்வது அவசியமாகிறது. முதலில் விடுப்பு கிடைக்க வேண்டும். விமானப் பயணம் என்றால் விமானக் கட்டணம் கையைக் கடிக்கக்கூடாது. தங்கும் அறைகள் - விலைகுறைவாக, தரத்துடன் அதேநேரம் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். இவையனைத்தையும் விட முக்கியமான விஷயம் வானிலை மாற்றம். இரண்டு வாரங்களுக்கு முன்பே தோராயமான வானிலையை அறிவித்துவிடுவர்கள் என்றாலும் துல்லியமான வானிலையை இரண்டு நாட்களுக்கு முன் தான் அறிவிப்பார்கள். காரணம் இங்கே வானிலை மாற்றம் என்பது குழப்பமான ஒன்று. நம்மால் கணிக்கவே முடியாதது. எப்போது பலத்த காற்றடிக்கும், எப்போது பனி பொழியும், எப்போது கடுமையான மழை இருக்கும் என்பதெல்லாம் கேள்விக்குறியே. இந்தக் கேள்விக்குறிகளை மனதில் வைத்தே நம் பயணத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வருடத்தின் பாதிநாள் பனிபொழிவு இருக்குமென்பதால் கோடைக்காலங்களில் தான் தங்கள் பயணத்தை மேற்கொள்வர். ஆனால் அதையும் மீறி வரக்கூடிய வானிலை மாற்றத்தை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. 

மே மாதம் கோடைக்காலம் என்பதால் தான் துணிந்து எங்கள் பயண நாளை மே என்று குறித்தோம். இருந்தும் கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் தெரிந்தது எங்கள் பயண நாட்கள் முழுவதும் மழை பொழிவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமென. அதிலும் சரியாக நயாகராவில் ஞாயிறு அன்று கடுமையான பனிப்பொழிவு என்று காட்டியது வானிலை அறிக்கை. நாங்கள் குறித்த தினமும் ஞாயிறுவாக இருக்க போட்ட திட்டம் மொத்தத்தையும் அழித்து ஞாயிறில் இருந்த நயாகராவைத் தூக்கிச் செவ்வாயில் போட்டோம். எது எது பார்த்தே தீர வேண்டிய இடங்கள். எது எதை தியாகம் செய்யலாம் என இரண்டடுக்கு திட்டம் ஒன்றைப் போட்டோம். அதே நேரம் இந்தத் திட்டங்களில் ஒரு ராணுவ ஒழுங்கைக் கடைபிடித்தாக வேண்டும். இல்லை என்றால் இத்தனை சவால்களுக்கிடையில் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்ததே வீணாகிவிடும். எத்தனை அலைச்சல் மேற்கொண்டாலும், எவ்வளவு சோர்வானாலும் தூக்கத்தைத் தூர எறிந்தே ஆகவேண்டும். 

கோடைக்காலம் என்றாலும் குளிர் இருந்து கொண்டே இருக்கும். இங்கே மிகப்பெரிய எதிரி காற்று தான். காற்றடிக்கும் போதெல்லாம் குளிரும். பயங்கரமாக நடுங்கும். எத்தனை கனமான ஆடை அணிந்திருந்தாலும் போதாது. நம்மை சோர்வடையச் செய்யும் முதல் எதிரி காற்றும் குளிரும் என்றால் அடுத்த எதிரி சாப்பாடு. வாய்க்கு ருசியாக நன்றாக சாப்பிட்டு வளர்ந்தவர்களுக்கு இங்கே கிடைக்கக்கூடிய பண்ணும் ரொட்டியும் வேகாத சிக்கனும் அடுத்த எதிரி. ஓரளவுக்கு தெம்பு வேண்டும் என்பதால் கிடைத்ததை உண்டே ஆக வேண்டும். இங்கே நிகழும் அத்தனை பயணங்களுக்கும் இதே விதிமுறைகள் தான் என்பதால் இந்த சவால்கள் பழகிவிட்டன. அதையும் மீறி புதிது புதிதாக தோன்றும் சவால்களை, நம் அனுமானத்திலேயே இல்லாத ஒன்றை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அப்படியொரு சவால் தான் இப்போது எங்களுக்கு முன் நின்று கொண்டிருந்தது தி ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர் என்ற வடிவில்.

தி ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர்




கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு அடி உயரம். உலகின் மூன்றாவது மிகப்பெரிய கட்டிடம். தி ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர். செப்டம்பர் பதினொன்று துயர சம்பவம் மூலம் நிர்மூலமாக்கப்பட்ட இரட்டைக் கோபுரங்களுக்குப் பதிலாக இந்த ஒற்றைக் கோபுரத்தை எழுப்பியுள்ளார்கள். இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடங்களில் இரண்டு நினைவிடங்களை எழுப்பியுள்ளார்கள். இரண்டும் மிகப்பெரிய மிக ஆழமான குளம் வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத் தாக்குதலின் மூலம் உயிரிழந்தவர்கள் அத்தனை பேரின் பெயரையும் பதித்திருக்கிறார்கள். 9/11 அருங்காட்சியம் புதுபித்தலுக்காக மூடப்பட்டிருப்பதால் அதனைப் பார்வையிட அனுமதியில்லை. யாரும் சொல்லாமலேயே மிகப்பெரிய அமைதியை அங்கிருந்த அத்தனை பேரும் கடைபிடிக்கிறார்கள். பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது தொலைக்காட்சி வழியாகப் பார்த்து மிரண்ட ஓர் இடத்தை இன்றைக்கு அதே இடத்தில் நின்று பார்க்கிறேன் என்பது எத்தனை வியப்பாய் இருக்கிறது. காலம் தன் பக்கங்களை வேகவேகமாக புரட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதில் இன்னும் எத்தனை ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறது என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. 

புதிதாக கட்டி முடிக்கப்பட்டிருக்கும் தி ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டரின் பிரமாண்டத்தைப் பார்க்கும் போது தெரிகிறது இரட்டைக் கோபுரங்கள் இன்னும் எத்தனை பிரம்மாண்டமாக இருந்திருக்கும் என்று. நகரின் முக்கியமான பகுதியில் இருக்கும் இந்த கட்டிடத்தின் நூற்றி இரண்டாவது தளத்தில் அதாவது ஆயிரத்து எழுநூறு அடி உயரத்தில் இருந்து பார்த்தால் ந்யூயார்க் நகரம் எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். நகரின் மிக முக்கியமான சுற்றுல்லாத் தலம் என்பதால் எப்போதும் அதிக கூட்டம் இருக்கும். இணையம் மூலமாக முன்பே அனுமதி பெறுவது நலம் என அறிவுறுத்தப்பட்டிருந்ததால் ஞாயிறு மாலைக்கான அனுமதியைப் பெற்றிருந்தோம். எங்கள் நேரம். வானிலை சதி செய்ததால் ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் கடுமையான பனி மூட்டம் என்ற தகவல் தான் வந்து சேர்ந்தது. 

'ஜீ இப்போ என்ன பண்ணலாம்' கலவரமான முகத்துடன் ரகுதான் அடுத்தகட்ட நகர்வுக்கு ஆயத்தமானார். 

'நாளைக்கு எப்படி இருக்கும்ன்னு கேட்டு பாரு ரகு என்ன சொல்றாங்க பார்க்கலாம்' என்றார் பிரகாஷ். எங்கள் அத்தனை பேர் முகத்திலும் ஒருவித சோகம் பரவிக் கொண்டிருந்தது. அதே நேரம் இங்கு இது இல்லை என்றால் அடுத்து எங்கு எது என்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் உருமாறிக் கொண்டிருந்தன. 

'ஜீ நாளைக்கும் இப்படி இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்ன்னு சொல்றாங்க. இப்போ நாம தான் முடிவெடுக்கணும்' என்றார் ரகு. எங்கள் பயணத்தின் தவறவிடக் கூடாத இடம் இது என்பதால் இங்கிருந்து நகர யாருக்கும் மனமில்லை. அதே நேரம் அத்தனை உயரமான இடத்திற்குச் சென்றபின் வெறும் வெள்ளை வெளேர் பனியை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்புவதில் யாருக்கும் உடன்பாடும் இல்லை. இப்போது இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றினால் ஆகும் இழப்பும் அதிகம்.    

'ஜீ மேல போவோம், தெரிஞ்சது தெரியட்டும். அதான் எப்படியும் நாளைக்கு எம்பயர் ஸ்டேட் போறோம் இல்ல, அங்கயும் ஆயிரம் அடிக்கு மேல போவோம். இங்க விட்டத அங்க பார்த்துக்கலாம்' என்றேன். 'ஆனா அங்கயும் இதே மாறி இருந்தா' என்ற கேள்வியும் வந்து விழுந்தது. இப்போ இங்க நாம கட்டிடத்தோட உச்சிக்குப் போறோம் - அத்தனை பெரும் ஒருமனதாக முடிவெடுத்தோம். செப்டம்பர் பதினொன்று என்ற கொடுமையான துயர சம்பவத்திற்குப் பிறகு ந்யூயார்க்கில் இருக்கும் ஒவ்வொரு இடங்களிலும் விமான நிலையங்களில் செய்வதைப் போன்ற கடுமையான பரிசோதனைகளுக்குப் பின்னே உள்ளே அனுமதிக்கின்றனர்.   

சோதனைகள் அனைத்தும் முடிந்து மின்தூக்கியின் அருகில் சென்றோம். அத்தனை பேரின் மனதினுள்ளும் ஒருவித எதிர்பார்ப்பு அதேநேரம் 'எங்க மொக்க வாங்கிருவோமோ' என்கிற கலவர மனநிலை. ஒருவரை ஒருவர் பார்த்து பார்வையிலேயே சமாதானம் செய்துகொண்டோம். நூறாவது தளத்திற்கு அழைத்துச் செல்வதற்கான கதவுகள் திறந்தன. உள்ளே நுழைந்து மின்தூக்கியின் கதவுகள் மூடிய அடுத்தநொடி வேறோர் உலகின் உள் நுழைந்திருந்தோம். மின்தூக்கியின் மூன்று புறங்களிலும் பொருத்தபட்டிருந்த மின் திரைகள் ஒளிர்ந்து காட்சிகள் விரிந்தன. சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பிருந்து இப்போது வரைக்கும் படிப்படியாக வளர்ந்த ந்யூயார்க் நகரின் வளர்ச்சிகள் மாற்றங்கள் அந்தத் திரையில் விரிந்து அதேநேரம் மின்தூக்கி ஒவ்வொரு தளமாக மேலே ஏறிக்கொண்டிருந்தது. வெறும் கட்டாந்தரையாக இருந்த பாலை பின்பு சோலையாக மாறி, உயிரனங்கள் தோன்றி நாகரிகம் வளர்ந்து இரண்டாயிரத்து ஒன்றில் இரட்டை கோபுரம் மறைந்து அதற்குப் பின்னான நாட்களில் இந்தப் புதிய கட்டிடம் கட்டப்படும் கட்டுமான பணிகளின் வழியாக மேல ஏறி இன்றைய தினத்திற்கு வந்து சேரும்போது நூறாவது தளத்தின் கதவுகள் திறக்கபடுகின்றன. 



அங்கிருந்து நம்மை அழைத்துச்சென்று ஒரு பிரம்மாண்டமான திரையின் முன்னே நிறுத்துகிறார்கள். ந்யூயார்க் நகரின் அழகான பக்கங்கள் காட்சியாக்கப்பட்டு அந்த நகரின் பெருமையை பறைசாற்றிக் காணொளி ஓடிக் கொண்டிருக்கும் அதே வேளையில் திரை மெள்ள மேலே எழும்புகிறது. திரை மெள்ள மேல எழும்ப எழும்ப ந்யூயார்க் நகரின் மிகப்பிரம்மாண்டக் காட்சி நம் கண்முன்னே காலடியில் விரிகிறது. அடுக்கடுக்கான உயரஉயரமான கட்டிடங்களும், நதிகளும் என அந்த நகரின் பிரம்மாண்டம் மிகத்துல்லியமாகத் ஒரு கனவு காட்சியாக கண்முன்னே விரிகிறது. அங்கிருந்த அத்தனை பேரின் கண்களும் அந்த பிரம்மாண்டத்தின் பின் அலைந்து திரிகின்றன. கட்டிடத்தின் நூற்றி இரண்டாவது மாடியில் இருந்து நகரின் அழகை முன்னூத்தி அறுபது கோணத்திலும் பார்க்கும் வசதி செய்துதரப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் போது தான் அண்ணனுக்கு மகள் பிறந்திருப்பதாக அம்மா அழைத்துக் கூறியது மற்றோர் மறக்க முடியாத மகிழ்வான நிகழ்வு. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அங்கிருந்தபின் கீழிறங்கினோம். 

பசி வயிற்றை பிராண்டிக் கொண்டிருந்தது. கூடவே நல்ல குளிர். பரபரப்பான மற்றுமோர் இரவு. என்ன இருந்து என்ன வாய்க்கு ருசியாக சிக்கன் பிரியாணி கிடைத்தும் அதனைச் சாப்பிட முடியாமல் சுமார் மூன்று மணிநேரம் கைகளிலேயே வைத்துத் திரிந்த கதையை அடுத்த பாகத்தில் கூறுகிறேன். அதுவரைக்கும் அதே தான் ஸ்டே ட்யுண்ட்.


- ஊர் சுற்றுவோம்

6 Oct 2015

சொர்க்கம் அருகிலே @ பாண்டிச்சேரி

ஒரு கனவு

விரக்தியின் உச்சத்தில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த நேரம், அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன். எளிதில் முடியக்கூடிய வேலை என்று இந்த உலகில் எதுவுமே இல்லை போலும். ஒன்றை முடித்தால் மற்றொன்று. அதை முடித்தால் அதைத் தொடர்ந்த வேறோன்று என ஒரு பூதம் போல பெரிதாகிக் கொண்டிருந்தது வேலை. உழைத்து களைத்து இதற்கு மேல் முடியவே முடியாது என்ற நிலை வந்தபோது வந்தது ஒரு அழைப்பு. 'எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது. கஸ்டமர்ஸ் ஆர் வெயிட்டிங்' என்று சீறியது. 'வில் ரெஸ்பாண்ட் இன் ஃபியு மினிட்' என்று கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க தலை கொஞ்சம் கொஞ்சமாக பாரமாவதைப் போல் உணர்ந்தேன். நிச்சயமாக இது பூதத்தின் வேலை தான்.

எவ்வளவு வேலை கொடுத்தாலும் செய்யும் அற்புத பூதம் பற்றிய கதை ஒன்று உண்டு. இதுவோ எவ்வளவு வேலையை முடித்தாலும் மேலும் மேலும் வேலை கொடுக்கும் பூதம். தப்பிக்கும் வழி தெரியவில்லை. எழுந்து ஓடலாம் என்றால் உட்கார்ந்த இடத்தில் இருந்து நகரவும் முடியவில்லை. எங்கு திரும்பினாலும் எண்கள் எண்கள் எண்கள். எண்களின் மத்தியில் சிக்கிக்கொண்டு மூச்சுவிட இடமில்லாமல் நெருக்கியடிக்கும்  எண்கள். திடிரென கொடிய உருவம் பெற்ற எண்கள் கொலைவெறியுடன் துரத்த ஆரம்பித்தன. தப்பிக்கும் வழி தெரியாமல் ஓடத் தொடங்குகிறேன். எங்கே நிற்க வேண்டும் என்ற கட்டளையற்ற ஓட்டம். ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஓட முடியாமல் மூச்சு வாங்க ஒரு மலைச்சரிவில் இருந்து கீழே விழும்போது முழிப்பு வந்தது. நல்லவேளை கனவென ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். கனவின் தாக்கம் மட்டும் குறையவில்லை. 

இரண்டு தேவதை

அலுவலகம் முடித்து படுக்கைக்குள் நுழைந்தபோது இருந்த உறக்கம் எங்கே போனதெனத் தெரியவில்லை. எவ்வளவோ முயன்றும் தூக்கம் வரவில்லை. கண்களை மூட நினைக்கும் போதெல்லாம் மேலிருந்து கீழாக இடமிருந்து வலமாக ஓடத் தொடங்கும் எண்களின் ஓட்டம் மிரட்சியாக இருந்தது. எவ்வளவு நேரம் தான் முழித்துக் கொண்டே இருப்பது. மணி ஒன்றைக் கடந்து வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். இருள் கண்களுக்குப் பழகியிருக்க, விட்டதையே வெறித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த அதிசியம் நிகழ்ந்தது. திடிரென அறையினுள் நுழைந்த தேவதை என்னோடு பேசத் தொடங்கியது. 'உன்ன பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. என்ன வேணும் கேளு' என்றது அந்தத் தேவதை. சோ இது வரம் கொடுக்க வந்த தேவதை. வெள்ளை உடை, முதுகுக்குப் பின்னால் வளர்ந்த சிறகுகள் எல்லாம் இல்லை. திடிரென அறையினுள் நுழைந்து உனக்கென்ன பிரச்சனை எனக்கேட்டால் யாரால் தான் நம்பாமல் இருக்க முடியும். ஆக வந்திருப்பது தேவதையே தான். நம்பி என் கதையைக் கூறலாம். கூறினேன். 

'உன் பிரச்சன பெரிய பிரச்சனையா இருக்கு. உனக்கு என்னால மட்டும் உதவ முடியாது. என்னோட பிரண்டு தேவதை ஒண்ணு இருக்கு. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா அசால்ட்டு பண்ணுவோம் கொஞ்சம் பொறு' என்று கூறி மறைந்துவிட்டது. மறைந்த சிறிது நேரத்தில் இரண்டு பேருமாக அறைக்குள் நுழைய 'சரி இப்ப சொல்லு உன் பிரச்சனை என்ன' என்று கேட்க, 'அதான் சொன்னனேன. நீங்க என்ன என் கிளையன்ட் மாதிரி கேட்ட கேள்வியவே திரும்பத் திரும்ப கேட்கிறீங்க' என்றேன் கடுப்பில். 'ஓ இது தான் உன் பிரச்சனையா, சரி உனக்கு ரெண்டு நாள் லீவ் கிடைக்குமா என்றது இரண்டாவதாக வந்த தேவதை'. 'கிடைக்கும், ஆனா நான் வொர்க் பண்றது சப்போர்ட் ப்ராஜாக்ட். இப்படி திடிர்ன்னு கேட்டா கிடைக்காது. முன்னாடியே சொல்லணும். இல்ல பாஸ் கோச்சுப்பார்' என்றேன். 'சரி ரெண்டு நாள் லீவ் அப்ளை பண்ணு நான் பார்த்துகிறேன். ஆனா இதேமாதிரி அவதிக்குள்ளான வேறு சில நண்பர்களும் உன்கூட வருவாங்க பரவாயில்லையா' என்றது முதல் தேவதை. 'நண்பர்கள்ன்னா ஓகே, எதிரிகள் நாட் அலவுட். எனக்கு அவங்களை சமாளிக்கத் தெரியாது' என்றேன் சிரித்துக்கொண்டே. 'ஷட்' என்றது அந்த தேவதை. ஷட்டினேன் என்று எழுதிய என்னை சுஜாதா மன்னிப்பாராக!

மூன்று பேர் ஒரு பயணம்

வெள்ளிக்கிழமை. அதிகாலை மணி ஒன்பது இருக்கும். வேகாத வெயிலில் பாண்டிச்சேரி பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். திருவான்மியூரில் பேருந்து ஏறியதும் அழைப்பதாக கூறியிருந்தார் டின். எங்களுடைய நேரமோ என்னவோ அதுவரைக்கும் காலியாக சென்று கொண்டிருந்த பேருந்துகள் அனைத்தும் நிற்கக் கூட இடம் இல்லாமல் விரைந்து கொண்டிருந்தன. 'சீனு இன்னும் பஸ் கிடைக்கல. கூப்பிடுறேன்' என்பதை மட்டும் அரைமணி நேரமாக கூறிக் கொண்டிருந்தார். நான் வாத்தியார் ஆவி செல்வின் டின் எல்லாரும் சேர்ந்து செல்வதுதான் முதல்கட்ட திட்டம். நான் கொஞ்சம் சொதப்பியதால் ஆவியும் வாத்தியாரும் முன்னே செல்ல, நானும் செல்வினும் டின்னும் ஒன்றாகச் செல்வதென முடிவானது. சொதப்பியதற்கு காரணம் நான் இல்லை, இந்த பத்தியின் இரண்டாவது வார்த்தைதான். 


அஞ்சாசிங்கம் செல்வின்
விபரம் தெரிந்தபின் இதுதான் என்னுடைய இரண்டாவது பாண்டிச்சேரி பயணம். கூட்டம் நிரம்பித்ததும்ப முண்டியடித்துக் கொண்டு ஏறிய கூட்டத்தை சமாளிக்க முடியாத எனக்கு உட்காருவதற்கு இடம் கிடைக்கவில்லை. செல்வினுக்கும் டின்னும் திருவான்மியூரில் ஏறியதால் பிழைத்தார்கள். பேருந்து நகர நகர, செல்வின், வரலாறு தொடங்கி சங்க இலக்கியம் புகுந்து அறிவியல் வழியாக அனுபவக் கதைகளை பேச ஆரம்பித்தார். அவர் மடை திறந்த காட்டாறு. பேச ஆரம்பித்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பேச்சும் சுவாரசியமாக இருந்ததால் நின்று கொண்டே பயணித்த சில மணி நேரங்கள் பாரமாய் தெரியவில்லை. 

எங்கே போகிறோம், என்ன விசயமாக போகிறோம் என்பதெல்லாம் தெரியாது. பாண்டி வந்ததும், அங்கிருந்து பதினைந்து கிமீ தொலைவில் இருக்கும் சாகர் லாட்ஜ் செல்ல வேண்டும். மீண்டும் அழைப்பு வரும். இதுதான் எங்களுக்குக் கிடைத்த உத்தரவு. நல்ல வெயிலில் சாகர் லாட்ஜ் வந்து சேர்ந்த நேரம் டான் விஸ்வாவிடம் இருந்து ஒரு அழைப்பு 'அந்த ரிசப்ஷன்ல இருக்குற லேடி லீவ்ல போயிருக்காங்க, அங்க ஒரு வயசானவர் தான் இருப்பாரு. அவர் மொகத்த இருபது நிமிஷம் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் பரவாயில்ல பார்த்துட்டு இருங்க வாரேன்' என்றார். அவர் எப்பயுமே அப்படித்தான் பாஸ் என்றார் டின். 

அனந்தகோடி சொர்க்கவாசல் - 1

கடலின் அருகாமையில் அமையப்பெற்ற எந்தவொரு இடமும் வசீகரமானது. தூரத்தில் தெரியும் சலனமில்லாத கடல் கொள்ளை அழகு என்றால் நெருங்கி முத்தமிடும் கடல் பேரழகு. அந்தப் பேரழகியின் காலடியில் நின்று கொண்டிருந்தோம். கிழக்குக் கடற்கரை சாலை முழுவதுமே கடற்கரையின் ஓரத்தில் அமைந்த ரிசார்ட்டின் எண்ணிக்கைகள் மிக அதிகம். இதுவரைக்கும் மொத்தமே இரண்டுமுறை தான் ரிசார்ட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒன்று சிறியது இன்னொன்று அதைவிட சிறியது. கடற்கரை. நிறைய நண்பர்கள். கொஞ்சம் கிரிகெட், கொஞ்சம் வாலிபால் கொஞ்சம் நீச்சல் கொஞ்சம் சாப்பாடு இந்தளவில் முடிந்து போன அனுபவங்கள் அவை. ஆனால் இம்முறை சென்றது முந்தைய அனுபவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. வாழ்வில் மறக்கவே முடியாத அனுபவம் என்றால் நிச்சயம் ஒத்துக்கொள்வார்கள் வரலாற்று ஆசிரியர்கள். 



பாண்டியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது கிளப் மகேந்திரா க்ரூப் ஃஆப் ரிசார்ட்ஸ். பன்னிரண்டு பேர் கொண்ட குழு சரியாக இரண்டு மணிக்கெல்லாம் ஒன்று கூடியிருந்தோம். நான், வாத்தியார், ஆவி, கிங் விஸ்வா, செல்வின் என நன்கு பரிட்சியாமான நண்பர்கள் இருக்க, சில வாரங்களுக்கு முன்புதான் தினேஷை (டின்னை) சந்தித்திருந்தேன். பிரபல பதிவர், ட்விட்டர், பேஸ்புக்கர், வாட்ஸப்பர் பரிசல்காரன் கிருஷ்ணகுமார் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் டான் விஸ்வாதான் பரிசலை அறிமுகம் செய்துவைத்தது. பரிசல் தன் குடும்பத்துடன் வந்திருந்தார். கௌதம் சார் ஒரு எடிட்டர் என்று எப்போதோ விஸ்வா கூறியது ஞாபகமிருக்க, திரைப்பட எடிட்டர் என்று தான் பாண்டிச்சேரி வரும் வரையிலும் நினைத்திருந்தேன். அங்கு சென்றபின் தான் தெரிந்தது அவர் விகடனில் பணியாற்றி பின் குங்குமத்தில் எடிட்டராக இருந்தவர் என்று. அவர் வகித்த பதவிகளின் உயரம் இன்னுமின்னும் அதிகம். இவரை சந்திப்பேன் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. கௌதம் சாரும் அவருடைய குடும்பசகிதம் வந்திருந்தார். மெதுவாக எங்களின் கரம் பற்றி அழைத்துச் சென்றன அந்தத் தேவதைகள். இதுவரை கண்டிராத உலகம் மெல்ல கண்முன் விரிந்து கொண்டிருந்தது. 

மகேந்திரா க்ரூப் ஃஆப் ரிசார்ட்ஸ்

ஒரு ரிசார்ட் எப்படி இருக்கவேண்டும் என்பதை இங்கு தான் பார்த்தேன். யானையைப் பார்க்கும் மனநிலை. அந்த ரிசார்ட்டின் ஒவ்வொரு பகுதியையும் அங்குலம் அங்குலமாக பதிவு செய்து கொண்டிருந்தது மனம். பரந்த புல்வெளி, அதன் நடுவில் கட்டப்பட்டிருக்கும் அறைகள் என அத்தனை வசதிகளும் கொண்ட மிகமிக உயர்தரமான உட்கட்டமைப்பு ஆசம் அட்டகாசம். இந்த இடம் உயர் இல்லை, உயர் உயர் குடிமக்களுக்கான இடம் என்பது அங்கு சென்ற சில நிமிடங்களிலேயே புரிந்துவிட்டது. அங்கிருந்த மக்களும் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களுக்கும் எனக்குமான  தூரம் எவ்வளவு அதிகம் என்பது இதுபோன்ற இடங்களுக்குச் வந்தால்தான் தெரிகிறது. அதேநேரத்தில் இதுபோன்ற இடங்களுக்கு வருவதற்கான வாய்ப்பு கிடைத்ததையே பெரும்பாக்கியமாக கருதி உள்ளூர மகிழ்ந்து கொண்டிருந்தேன். 


பரிசல்காரன் கிருஷ்ணகுமார்

ஒரு சிறிய கடற்கரை விசிட்டிற்குப் பின் மதிய உணவருந்தச் சென்றோம். ஃபபே சிஸ்டம். கடுமையான பசி. பசிக்கு தீனிக்கு போடும் சுவை. எதை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற வசதி. வேறென்ன வேணும் இது போதுமே. உணவருந்திவிட்டு ஒரு சிறிய ஓய்விற்குப் பின் நீச்சல் குளத்தைத் தேடிச்சென்றோம். அட்டகாசமான இரண்டு மணிநேரக் குளியல். 

காந்தி ஜெயந்தி லாங் வீகென்ட் என்பதால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உயர்குடியும் இங்குதான் வருவேன் என்பது போல் அடம்பிடிருத்திருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
கிடைத்த ஒரே ஒரு அறையையும் மகளிர் அணிக்குக் கொடுத்துவிட்டு இரவு வேட்டைக்காக ஹோட்டல் சாகருக்குச் சென்றுவிட்டோம்.   

அனந்தகோடி சொர்க்கவாசல் - 2

ஒரு பயணம் தன்னால் எவ்வளவு அனுபவங்களைத் தரமுடியுமோ அவ்வளவையும் கொடுத்துக் கொண்டிருந்தது. உடன் இருப்பவர்கள் அத்தனை பேரும் வயதிலும் அனுபவத்திலும் திறமையிலும் பெரிய பெரிய ஆட்கள். நான் இங்கு வெறும் பார்வையாளன் மட்டுமே. அவர்களுடைய அனுபத்தில் இருந்து எனக்கான உலகை கட்டமைத்துக் கொண்டிருந்தேன். எனக்கான உலகில் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என வழிகாட்டிக் கொண்டிருந்தவர்களை நலம் விசாரித்துக் கொண்டிருந்தேன். இங்கே வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஆகச்சிறந்த உதாரணங்கள். உலகம் ஒரு சமயம் சிறியது, ஒரு சமயம் மிகப்பெரியது. இவர்களை எல்லாம் சந்திக்கச் செய்த நிகழ்வில் தன்னைச் சுருக்கிக்கொண்ட உலகம், அவர்களுடைய அனுபவவெளியில் எல்லையில்லாது விரித்துக்கொண்டது. 

சுருங்கி விரியும் இந்த உலகில் கனவு ஒரு பூமராங். என்றோ தூக்கி எறிந்த கனவுகள் மீண்டும் கைகெட்டலாம். அப்படியான ஒன்றாகத்தான் இந்த அனுபவத்தைப் பார்க்கிறேன். ஆவலுடன் அதனோடு கை குலுக்கிறேன். ஏக்கப் பெருமூச்சோடு சென்னைக்குள் நுழைந்த முதல் நாளுக்கும் இந்த நாளுக்குமான இடையில் எத்தனையோ கனவுகளை தூர வீசி எறிந்திருக்கிறேன். என்றேனும் ஒருநாள் அவையனைத்தும் என்னை வந்து சேரக்கூடும். ஏனென்றால் கனவு ஒரு பூமராங். 

இரண்டாம் நாள். ஆவி தான் இயக்கிய, நடித்த குறும்படங்களுடன் அந்த நாளை துவக்கி வைத்தார். எல்லாருமே செம எனர்ஜிடிக். விடியவிடிய பேசிக் கொண்டிருந்தாலும் விடியும் முன் எழுந்துவிட்டார்கள். மீண்டும் ரிசார்ட். அட்டகாசமான காலை உணவு. உண்மையச் சொல்வதென்றால் இப்படி ஒரு காலை உணவை இதுவரைக்கும் உண்டதில்லை. ஏன் பார்த்தது ம்ம்கும் கேள்விபட்டது கூட இல்லை. இட்லி தோசை பூரி பொங்கல் மிஞ்சிப்போனால் புட்டு இடியாப்பம், ஆனால் இங்கே அது இது என்றில்லை எல்லாமும் கிடைத்து. பழவகைகள், பிரட் வகைகள், தென்னிந்தய உணவு, பிறநாட்டு உணவுவகைகள் என அடுக்கியிருந்தார்கள். முடிந்த மட்டும் வயிற்றை நிரப்பிக் கொண்டேன்(டோம்). 


டின் @ தினேஷ்
மேக்கப் கலையாமல் நடந்து கொண்டிருந்த முந்தைய தினத்து அழகிகள் அனைவரும் காலை சோம்பல் முறித்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் கையில் பிரட் இருந்தது. வயதானவர்கள் கைகளில் பாலும் பழமும் இருக்க, குழந்தைகள் எதையும் சாப்பிடுவதில்லை என அடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் மட்டும் பியர் புட்டியை தூக்கிக்கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள். பரபரப்பான தங்கள் உலகிலிருந்து வெளிவந்து அமைதியாக உணவருந்திக் கொண்டிருந்தார்கள். காலை சாப்பாடு முடிந்ததும் நிரம்பிய வயிறை சுமந்துகொண்டு நீச்சல்குளத்தை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தோம். 

இங்கே சில பகுதிகள் சென்சார் செய்யப்பட்டுள்ளன

'நீச்சல்குள பராமரிப்பில் கிளப் மகேந்திராவை மிஞ்ச ஆள் கிடையாது' கௌதம் சார் கூறினார். அவர் கூறியது உண்மையே. பொதுவாகவே நீச்சல் குளங்களில் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ சரிபாதி க்ளோரின் கலந்த கெமிக்கல் இருக்கும். இங்கே அப்படி இல்லை. க்ளோரின் கலக்கபட்டிருந்தும் அதன் சுவை தொந்தரவாக இல்லை. முந்தைய தினம் நீச்சல்குளத்தில் இறங்கிய போதே எதையாவது விளையாடலாம் என்று யோசித்து அந்த யோசனையை கைவிட்டிருந்தோம். இன்றைக்கு கையில் ஒரு பந்து சிக்கியிருந்தது. வயது வித்தியாசம் பாராமல் விளையாடும் குணம் அமைவது மிகஅரிது. இந்தக் குழுவில் வயது ஒரு தடை இல்லை. மங்கி விளையாடலாம் என்று அழைத்தபோது தயங்காமல் அத்தனை பேரும் ஒத்துக்கொண்டார்கள். 

மங்கி விளையாடி இருந்தீர்கள் என்றால் தெரியும் அது எந்தளவிற்கு நம்முடைய ஈகோவைச் சீண்டும் விளையாட்டு என்று. மங்கியாக நிற்பவர்களை எளிதில் சீண்ட முடியும். 'நீ என்னடா வெண்ண' என்ற மனநிலையில் இருப்பவர்கள் மங்கியாக சிக்கினால் சும்மா வச்சி செய்யலாம். அவர்களின் கோவத்தை எளிதாகக் கிளறலாம். போங்கடா நீங்களும் உங்க விளையாட்டும் என்று பந்தை தூக்கி எறிந்துவிட்டுப் போன எத்தனையோ மங்கி நண்பர்களை எனக்குத் தெரியும். இங்கே ஒருவர் கூட மறுப்பு தெரிவிக்கவில்லை. குதுகலமாக ஆரம்பித்த விளையாட்ட்டு போகப்போக சூடுபிடிக்க ஒருகட்டத்தில் 'நான் தான் மங்கியாக நிற்பேன்' 'நான் தான் மங்கியாக நிற்பேன்' என்று அத்தனைபேரும் ஆசைப்படும் அளவுக்கு அளவுக்கு ஒரு சம்பவம் நடந்தது. அந்தப்பகுதிகளை சென்சார் செய்வதைத் தவிர வேறுவழியில்லை என்று டான் கேட்டதால் ஜலக்கிரீடை நடத்திய அந்த கும்பலை வெட்டிவிடுகிறேன். சொல்ல மறந்துவிட்டேன் டைனிங் ஹாலும் சரி, ஸ்விம்மிங்பூலும் சரி அட்டாச்ட் பார் வசதி கொண்டது. 

இது நீச்சல் குளத்து ஆவி. நீச்சலடிக்கும் ஆவி  

கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் நீச்சல் குளத்திலேயே இருந்தோம். இருந்தோம் என்பதை விட கிடந்தோம் என்பது தான் சரி. எங்களுக்குள்ளான முறையான அறிமுகமே அங்கு தான் நடத்தது. கௌதம், பரிசல், விஸ்வா இவர்களின் எழுத்து முயற்சிகளை, அவர்கள் கூறிய அனுபவங்களை கவனித்துக் கொண்டிருந்தேன். சோஷியல் மீடியாவுக்கு முந்தைய தலைமுறை மீடியாவை நன்றாக உள்வாங்கியிருந்த அவர்களின் அனுபவம் எங்கு தேடினாலும் கிடைக்காத வரம். இன்னுமின்னும் பேசமாட்டார்களா என்ற ஆர்வத்தில் ஒவ்வொருவரின் கதைகளையும் கேட்டுக்கொண்டிருந்தேன். காலம் அதன் போக்கில் ஓடிக் கொண்டிருந்தது. மூன்று மணியுடன் மதிய உணவு வழங்குவதை நிறுத்திவிடுவார்கள் என்பதால் வேறுவழியே இல்லாமல் நீச்சல் குளத்தைவிட்டு வெளியே வந்தோம். மதிய உணவு, பின் ஒரு சிறிய ஓய்வுக்குப் பின் பயணம் தனது முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது. 

பயணத்தின் பயணம்

அமைதியாக ஆர்பாட்டமில்லாமல் ஆரம்பிக்கும் ஒவ்வொரு பயணங்களும் முடியும் தருவாயில் பெருத்த சோகத்தினுள் தள்ளிவிடுகிறது. மீண்டும் இயந்திர வாழ்க்கைக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தை விட எதைபற்றியும் சிந்திக்காமல் இவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருந்தோமே அந்த சந்தோசத்திற்கு பங்கம் வரப்போகிறதே என்ற உணர்வு தான் பெரும் பாரமாய் இருக்கிறது. திடிரென ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது. இருந்தும் இந்த வெற்றிடம் மிகவும் அவசியம் என்பேன். இல்லையென்றால் ஒரே ஒரு பயணத்திலேயே நமது மொத்த ஆசைகளையும் தீர்த்துக்கொண்டு அடுத்த பயணத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டோம். இந்த வெற்றிடம் அடுத்த பயணத்தின் தேவையை உடனே உருவாக்கிறது. எப்போதுமே நாடோடியாய் வைத்திருக்க உதவுகிறது.


கௌதம் சார்
எவ்வித யோசனையுமில்லாமல் பல அருமையான நட்புகளை அடையாளம் காட்டிவிடுகிறது காலம். பொதுவாகவே நான் புதிதாக சந்திப்பவர்களிடம் பழகுவதற்கு கொஞ்சம் கூச்சப்படுவேன். எவ்வளவோ முயன்றும் அதை மட்டும் என்னால் விரட்டி அடிக்கமுடியவில்லை. ஆனால் இங்கே, சின்னப் பையன்தானே என எவ்வித ஈகோவும் இல்லாமல் பழகிய அத்தனை பேரையும் வெகுவாகப் பிடித்துவிட்டது. நெடுநாள் பழகியவர்களிடம் இருந்து பிரியும் அந்தப் பிரிவு லேசான வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அவரவர் நிமித்தம் அவரவர் பாதையை திறந்து வழிவிட்டதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். பாண்டியில் இருந்து சென்னை நோக்கி விரைந்த பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டு நடந்த மொத்த நிகழ்வுகளையும் ஒருமுறை ஓட்டிப்பார்த்தேன். மனம் லேசாகி இருந்தது. கரம் பற்றி அழைத்துச்சென்ற அந்த இரண்டு தேவதைகளுக்கும் என்னால் முடிந்தமட்டும் நன்றி கூறிக்கொண்டேன். அவர்கள் இல்லையென்றால் நிச்சயம் இந்தப் பயணம் இல்லை. அவர்களை உங்களுக்கும் அறிமுகம் செய்ய வேண்டும் இல்லையா! அந்த தேவதைகளின் பெயர் கிங் விஸ்வா மற்றும் கெளதம். 

***


பதிவுலகில் நான் வியந்து பார்க்கும் மனிதர்களில் ஒருவர் அப்பா சார். அவர் எழுத்துக்கு இணை அவரே. அவருடைய அறிமுகமும் நட்பும் கிடைத்தது முன் ஜென்மத்து புண்ணியம் என்று கூறினால் கிளிஷேவாக இருக்கும். சமயங்களில் குட்டவும், தோளில் தட்டவும் செய்யும் இவர் என்னுடைய மிகப்பெரிய ஆதர்சம். தான் எழுதி வரும் பாடல் பெற்ற பதிவர் என்ற பதிவில் என்னைப் பற்றி எழுதி இருக்கும் சொற்கள் - நிச்சயம் என்னை உயிர்ப்புடனும்  உற்சாகத்துடனும் எழுதச் செய்யும்! நன்றி அப்பா சார்.