Showing posts with label எழுதப்படாத நாட்குறிப்புகள். Show all posts
Showing posts with label எழுதப்படாத நாட்குறிப்புகள். Show all posts

10 Feb 2015

டயானா கிழவி

பள்ளிக்கூடம் முடிந்து அரக்கபரக்க ஓடியாந்தால் வாசலில் ஏகப்பட்ட சைக்கிள்கள் நிற்கும், சேமியா ஐஸ், பாக்கு ஐஸ், இழந்த பழம் ஐஸ் வைத்துக் கொண்டு நிற்கும் அண்ணா, அவருக்குப் போட்டியாய் நிற்கும் இன்னொரு தாத்தா, ஊறவைத்த நெல்லிக்கா, மாங்கா, தேன் மிட்டாய் வைத்தபடி அமர்ந்திருக்கும் டயனா கிழவி. டயனா கிழவி. அவருக்கு அந்த பெயரை வைத்தது சாதாத் இல்லை முத்து. நல்ல மூப்பு. என்புதோல் போர்த்திய உடம்பு அவருக்கு. பார்க்கவே பரிதாபமாக உட்கார்ந்திருப்பார். அவ்வளவாக பார்வை கிடையாது. நாம் கொடுத்தது ஐந்து பைசாவா பத்து பைசாவா என்பதை கண்டுபிடிக்கும் முன் நெல்லிக்கா மாங்காயை கை நிறைய அள்ளிவிட்டு சிட்டாய் பறந்திருப்பர்கள் எம் பள்ளிக்கூட சிறுவர்கள். 


மாலை வெயில் அவருக்கு அதிகமாய் கண் கூசும். எப்போதும் ஒரு கையை நெத்தியின் மேல் வைத்து கண்களை சுருக்கியபடி யாவாரம் செய்து கொண்டிருப்பார். இந்நேரம் அவர் அமரர் ஆகி ஆண்டுகள் ஓடியிருக்கலாம். இப்போது நினைத்துப் பார்த்தால் எல்லாமே நேற்று பார்த்தது போல் இருக்கிறது. பள்ளிகூட சிறுவனாய், தோளில் மாட்டிய கூடையுடன் அவருக்கு அருகில் சென்று 'டயானா கிழவி' என்று கத்தி விட்டு  ஓடியது அனைத்தும் நிழலாடுகிறது. 'ஏல ஏல யாவாரம் பாக்க வுடுங்கலே' அவசரமாய் கத்துவார். குரல் நடுங்கிப் போன, வார்த்தை வார்த்தையாய் பேசும் குரல். அவருக்கு ஏன் அந்தப் பெயர் வைத்தார்கள், அவரை ஏன் அவ்வளவு தொந்தரவு செய்தோம் எதுவுமே தெரியவில்லை. ஆனால் அவர் எங்களுக்கு ஒரு பதுமை. வீட்டிலும் அவரை அப்படித்தான் நடத்தியிருக்க வேண்டும் அதான் கூடையை தூக்கிக் கொண்டு பள்ளிக்கூட வாயிலில் அமர்ந்துவிட்டார். 

நிச்சயமாகச் சொல்லலாம் அந்தத் தொண்டுக் கிழவியின்  நியாபகத்தில் நாங்கள் இருந்தோம். அவர் அருகில் சென்றாலே தன்னுடைய கைத்தடியை தூக்கிவிடுவார். 'நெல்லிக்கா வாங்கனுமா, வேணாமா' என்றால் 'வாங்கிட்டு பேசாமா போவனும்' என்பார். சிலசயங்களில் ஐஸ் விற்கும் அண்ணா, வெள்ளரி விற்கும் மீசக்காரர் கூட எங்களை திட்டியிருக்கிறார்கள். 'ஏமுல அது தொண்டதண்ணிய வைத்த வைக்கியே, ஓடுங்கலே' என்றபடி துரத்தி விடுவார்கள். 'எங்க டயானா கிழவினே' என்போம். சிரித்துவிட்டு திரும்பிக் கொள்வார்கள். எட்டு வயசில் ஆரம்பித்த பழக்கம் அது. 

பள்ளிக்கூடம் நான்கரைக்குத்தான் முடியும் என்றாலும் நாலு மணிக்கெல்லாம் வந்துவிடுவார். சமயங்களில் மூன்று மணிக்கே கூட வந்துவிடுவார். ஒரு நூல் சேலையை தன்னுடைய எலும்பைச் சுற்றி சுற்றியிருப்பார். ஒரு கூடை, ஒரு சட்டி, தரையில் விரிக்க ஒரு சிமின்ட் சாக்கு. அவ்வளவுதான் அவருடைய உடமைகள். காசை தன சேலையின் தலைப்பில் முடிந்து கொள்வார். அவ்வளவு சில்லறைகள் தான். நோட்டு கூட ஒரு ரூபாய் இல்லை ரெண்டு ரூபாய்த் தாள்களாகத் தான் இருக்கும்.

எங்களிடமும் எல்லாநாளும் காசு இருக்காது. ஒருவேளை  ஐந்து பைசா பத்து பைசா இருந்தால் கூட நேரே கிழவியிடம் தான் ஓடுவோம். எங்களைப் பார்த்தால் கை நிறைய நெல்லிக்காய் தருவார். கூடவே கைத்தடியையும் தூக்குவார். மதியமே நெல்லிக்காயை உப்பு மிளகாய்பொடி கலந்த நீரில் ஊற வைத்து ஒரு சட்டி நிறைய எடுத்து வருவார். வாயில் போட்டவுடன் கரைந்து விடும். அதிலிருந்து வரும் சாரை வாயிலேயே வைத்திருக்கலாம். சமயங்களில் நெல்லிக்காயின் கொட்டை கூட சுவையாய் இருக்கும். 

பெரும்பாலும் கடைசி பீரியட் கேம்ஸ் பீரியட்டாகத்தான் இருக்கும். அந்த நாட்களில் எல்லாம் நேர கிழவியிடம் சென்று விடுவோம். ஒரு ரூபாய்க்கு நெல்லிக்காய் பர்சேஸ் செய்தால் இனாமாக ஒரு மாங்காத்துண்டு கேட்போம். சில சமயங்களில் கைத்தடியை தூக்குவார். சமயங்களில் ஒன்றுக்கு இரண்டு துண்டுகள் கூடத் தருவார். அவரைப் புரிந்து கொள்ளவே முடியாது.  நண்பர்கள் யாருக்கேனும் காத்திருக்க வேண்டும் என்றால் எங்களுடைய மீட்டிங் பாயின்ட் டயனா கிழவி தான். மெளனமாக அவர் அருகில் அமர்ந்திருப்போம் எவ்வளவு அங்கு உட்கார்ந்திருந்தாலும் எதுவும் பேசமாட்டார். கண்டுகொள்ளவும் மாட்டார்.

என் வாழக்கையில் நான் பார்த்த முதல் தொண்டுக் கிழம் அவர்தான் என்றாலும் அதற்கடுத்து அவருக்கு வயது அதிகரிக்கவே இல்லை. அடுத்த ஐந்தாறு வருடங்களுக்கும் அப்படியேத்தான் இருந்தார். முகத்தில் எப்போதுமே ஒருவித சோகம் நிறைந்திருக்கும்.  சிதம்பரேஸ்வரர் கோவிலின் ஆர்ச் நிழல் அந்த சோகத்தை இன்னும் கொஞ்சம் அதிகரித்துக் காண்பிக்கும். எதையோ யோசித்துக் கொண்டே இருப்பார். அவர் சிரித்துப் பேசி நாங்கள் பார்த்தது இல்லை.யாருமே வரையாமல் விட்ட ஓவியம் அவர். 

கீழப்புலியூர் ரயில்வே ஸ்டேசன் பக்கத்தில்தான் அவர் வீடு. விடுமுறை நாட்களில் தெருவில் எங்கேனும் அவரைப் பார்க்க நேர்ந்தால் 'என்ன டயனா இன்னிக்கு லீவா' என்று கத்திவிட்டு ஓடுவோம். ஒருமுறை தற்செயலாய் என் அம்மா பள்ளிக்கு வந்து 'ம்மா டயனா கிழவிட்ட நெல்லிக்காய் வாங்கிகொடுங்க' என்று கேட்டதுதான் தாமதம். முதுகில் மொத்து மொத்து என்று அடி விழுந்தது. அதுவரையிலும் டயனா கிழவியாக இருந்தவர், அதன்பின் எனக்கு மட்டும் டயனா பாட்டியாகிவிட்டார். பெரியவங்களுக்கு பட்டப்பேர் வைக்க கூடாது, கிழவி சொல்லகூடாது என்று தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அடி. டயனா மீது கோவம் கோவமாக வந்தது. எனக்கு விழுந்த அடிக்கு அவர் தான் காரணம் என்று முழுதாக நம்பினேன்.

கொஞ்சம் வளர்ந்து ஊர் சுற்றத் தொடங்கியதும் எங்களுக்கான நெல்லிக்காய் மரங்களை நாங்களே கண்டுகொண்டோம். மதியம் சாப்பாட்டு பீரியடில் நெல்லிக்காய் பறித்து, சத்துணவுக் கூடத்தில் உப்பு வாங்கி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சம்படத்தில் போட்டு ஊறவைத்தால் மதியம் நான்கு பீரியடுக்கும் நெல்லிக்காய் வாயில் அறைந்து கொண்டிருக்கும். வகுப்பறையே நெல்லிக்காய் மணத்தில் நிறைந்து கிடக்கும்.   

ஒருமுறை நன்றாக சளி பிடித்து,  அம்மா அதற்கான காரணம் கண்டுபிடித்த போதுதான் 'அவங்கூடத்தனால உன்னையும் ஸ்கூலுக்கு அனுப்புறேன், நீ மட்டும் விதவிதமா சேட்ட செய்வியோ' என்று அடி விழுந்தது. எப்போதுமே ஒரேவிதமான சேட்டைகளுக்கு அம்மாவிடம் அடிவாங்கியதே கிடையாது. ஒவ்வொன்றும் ஒருவிதம். பின் வீட்டிலேயே நெல்லிக்காய் மரம் வளர்த்தேன் என்பதெல்லாம் வேறு கதை.

இந்நேரம் டயனா அருகில் ஒரு குண்டு கிழவி கடை விரிந்திருந்தார். வில்லி. எங்களுக்கு அவளைப் பிடிக்கவில்லை. டயானாவிடம் நெல்லிக்காய் வாங்காமல் வில்லியிடம் செல்பவர்களை முறைப்போம். நெல்லிக்காய் வாங்கினால் டயானாவிடம் என்ற கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து வந்தோம். மீசை முளைக்கத் தொடங்கி, டவுசரில் இருந்து பேண்டுக்கு மாறி, பின் பள்ளிக்கூடம் மாறி கல்லூரி சென்று என்று வாழ்க்கை எங்கெங்கோ இழுத்துச் செல்ல டயானாவை மறந்தேவிட்டோம். 

டயனா எப்போது தன் கடையைக் காலி செய்தார் என்பது நியாபத்தில் இல்லை. ஆனால் எட்டாம் வகுப்பிற்கு உள்ளாகவே அந்த இடத்தை காலி செய்துவிட்டார் என்று நினைகிறேன். எப்போது இறந்தார், எப்படி இறந்தார். அவருடைய இறப்பு எப்படிபட்டது. கடைசி நாட்கள் எப்படி இருந்தன எதுவுமே தெரியாது. அந்த வழியாகக் கடக்கும் போதெல்லாம் டயானாவை பற்றி எங்களுக்குள் பேசிக்கொள்வோம். முத்து கொண்ட இருவரையுமே டயானாவுக்கு மிக நன்றாகத் தெரியும். கொண்ட ஒருமுறை டயானவிடம் அடி கூட வாங்கி இருக்கிறான். எனக்குத்தெரிந்து டயானாவிடம் அடிவாங்கிய ஒரே ஆளும் கொண்ட தான்.


நேற்றைக்கு பார்க்-டவுன் வெளியே ஒரு அம்மாவைப் பார்த்தேன். தட்டு நிறைய ஊறவைத்த நெல்லியைப் பரப்பி விற்றுக்கொண்டிருந்தார். மிளகாய்த் தண்ணியில் மிதந்து கொண்டிருந்தது ஒவ்வொரு நெல்லியும். நெல்லி விற்றுக் கொண்டிருந்த அந்த அம்மாவிடம் இரண்டு மாங்காய்த் துண்டுகள் வாங்கிய குறுநில மன்னன் ஒருவன் 'ரெண்டு நெல்லி கொடேன்' என்று இனாமாக வாங்கி வாயில் போட்டுக் கொண்டே ரயிலைப் பிடிக்க நடந்து கொண்டிருந்தார். நெல்லிக்காய் விற்றுக் கொண்டிருந்த அந்த அம்மாவின் முகம் இப்போது நியாபகத்தில் இல்லை. ஆனால் அவர் விற்றுக் கொண்டிருந்த ஒவ்வொரு நெல்லியிலும் எங்கள் டயானாக் கிழவியின் வரையபடாத அந்த ஓவியம் நிழலாடிக் கொண்டிருந்தது என்பது மட்டும் நிஜம். 

9 May 2014

எழுதப்படாத நாட்குறிப்புகள்

இருபத்தி ஆறு வயதுதான் ஆகிறது. திரும்பிப்பார்த்தால் எத்தனையோ வருடங்களைக் கடந்து திரும்பிப்போகவே முடியாத தூரத்திற்கு ஓடிவந்துவிட்டது போல் தோன்றுகிறது. நிதர்சனமும் அதுதான் என்றாலும் சிலநேரங்களில் ஏன் ஓடுகிறோம் எதற்கு ஓடுகிறோம் என்பதெல்லாம் தெரியாமலேயே ஓடிக்கொண்டு இருப்பது போன்ற ஒரு உணர்வு. பள்ளிக்கூடம் முடிந்து தோள்மேல்தோள் கைபோட்டு காலார நடந்து செல்லும் சிறுவர்களைக் காணும் போதும், வட்டமாய்க் கூடி நின்று ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கலாய்த்து சந்தோஷமாய் சிரித்துப் பேசுகின்ற நண்பர்களைப் பார்க்கும்போதும் தான் ஓடிவந்த தூரத்தின் தொலைவு தெரிகிறது. 

நினைத்துப்பார்த்தால் இத்தனை காலமாய் நானும் அந்த சிறுவர்களில் ஒருவனாய்த்தானே அலைந்தேன். நாலுபேர் நிற்கும் உலகத்தில் நானும் ஒருவனாய்த்தானே நின்றிருந்தேன். இப்போதோ திடிரென யாரோ ஒருவர் வலுகட்டயாமாய் என்கரம்பற்றி அந்த உலகத்திலிருந்து இந்த உலகத்திற்கு கடத்தி வந்துவிட்டது போல தோன்றுகிறது. சரி என்னைக் கடத்தி வந்தவர் யாராய் இருக்குமென யோசித்துப்பார்த்தால் அது வேறுயாரும் இல்லை, சத்தியமாய் நானேதான். 

கேட்டபொருளை கேட்ட நேரத்தில் வாங்கித்தராத போதும், நினைத்த நேரத்தில் வாடகை சைக்கிள் ஓட்ட காசு தராதபோதும் 'ச்ச சீக்கிரமா வேலைக்கு போய்ட்டா வாடக சைக்கிள் என்ன சொந்த சைக்கிளே வாங்கிக்கலாம்' என நினைக்க ஆரம்பித்த நொடியிலிருந்தெல்லாம் கடத்தத் தொடங்கியிருக்கிறேன். இப்படியாக ஒவ்வொரு சந்தர்பத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக கடத்தி கடத்தி மொத்தமாக இங்கு வந்து சேர்ந்தபின், ஏன்தான் இங்கே வர ஆசைப்பட்டேனோ என நினைக்கச் செய்துவிட்டது இந்த காலம்.

என்னை விட்டுவிடுங்கள் மீண்டும் பள்ளிகூடத்திற்கே ஓடி விடுகிறேன். மிஞ்சிப் போனால் future continuous tense-ல் ஒரு செண்டன்ஸ் எழுதச்சொல்லி அடிப்பார் பிரிட்டோ டீச்சர். பித்தகோரஸ் தியரத்தை ஐந்துமுறை ஒப்பிக்காத வரை வீட்டிற்கு விடமாட்டார் மணிடீச்சர். அவ்வளவுதானே! பரவாயில்லை. நான் தயார். தயவுசெய்து யாராவது என்னை பள்ளிக்கூடத்தில் போய் சேர்த்து விடுங்களேன். உங்களுக்குக் கோடி புண்ணியமாய்ப் போகும். 

நினைப்பதற்கு நன்றாக இருந்தாலும் அப்படியெல்லாம் நடந்துவிடாதுதான். சரி நடந்தவற்றை நினைத்துப் பார்க்கலாம் என்றாலோ, வருடங்கள் நகரநகர முந்தைய வருடங்களில் நடந்தவை மொத்தமும் கொஞ்சமாக நினைவு நாளங்களில் இருந்து அழியத் தொடங்கிவிட்டன. 'செத்தாலும் இந்த விசயத்த மட்டும் மறக்க முடியாது' என நினைத்த விசயங்களில் பல இப்போது நினைவில் இல்லை. செத்தாலும் மறக்கமுடியாத விசயங்களையே மறந்துவிட்டேன் என்னும் போது இன்னபிற விஷயங்கள் எம்மாத்திரம். கடந்த சில வருடங்கள் வரை பள்ளிக்கூட நாட்களில் நடந்த பெரும்பாலான விசயங்களை அப்படியே நியாபகம் வைத்திருந்தேன். சமீபத்தில் வலுகட்டாயமாக அவற்றை நினைவு கூற முயன்றும் ம்கும் பாதிக்கும் மேல் மறந்துவிட்டது. அதனால்தான் நினைவு நாற்காலியில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அந்த கொஞ்சநஞ்ச விசயங்களையாவது இப்போதே எழுதிவிட முடிவு செய்துள்ளேன், குறைந்தபட்சம் கடைவழி வரும் வரையிலாவது துணைக்கு வருமே என்ற நப்பாசையில்தான்.       

என்னதான் என் நியாபகசக்தியின் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைத்தாலும் சிலவிஷயங்கள் நேற்று நடந்தது போல் நன்றாக நினைவில் உள்ளது. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகாமைக்கும் அவற்றை நெருங்கிச்சென்று பார்க்கமுடிகிறது. அப்படிப்பட்ட நினைவுகளில் ஒன்று பதினோரு வருடங்கள் என்னை வளர்த்தெடுத்த ஆர்.சி.ஸ்கூலினுள் நான் நுழைந்த முதல்நாள்.     

அட்மிஷன் முடிந்து பேபிகிளாஸில் என்னைத் தள்ளிவிடுவதற்காக அழைத்துச் செல்கையில், எங்கே நான் ஓடிவிடுவேனோ என்ற பயத்திலும் 'அப்படியெல்லாம் உன்னை ஓடவிட மாட்டேன்' என்ற ஜாக்கிரதையிலும் கரம்பற்றி அம்மா அழைத்துச்சென்ற அந்த முதல்நாள் நன்றாக நியாபகம் உள்ளது. பேபி கிளாஸின் முதல்தினத்தில் நிச்சயம் கலர்டிரஸ்தான் அணிவித்திருப்பார்கள். இருப்பதிலேயே கொஞ்சம் புதிய காற்சட்டையும், மிக்கிமவுஸோ அல்லது பூ படமோ வரைந்த செருப்பும் அணிந்திருந்திருக்கலாம்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பிறக்கும் இக்காலத்துக் குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்களின் ஒவ்வொரு தருணங்களையும் புகைப்படமாக்க, ஆவணபடுத்த அவர்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமே காத்துக்கிடகிறது. தற்போதைய நாட்களில் 'blessed with a baby girl/boy' என்று டெலிவரி முடிந்த அடுத்த நொடி புகைப்படத்துடன் ஸ்டேடஸ் போடும் அளவிற்குப் பரிணாம வளர்ச்சிஅடைந்த தினத்திற்குள் நுழைந்துவிட்டோம். ஆனால் நம்முடைய காலத்திலோ வருடத்திற்கு ஒருபுகைபடமேனும் எடுக்கப்பட்டவர்கள் பாக்கியசாலிகள். 

என்னோடு சேர்ந்து நானும் வளர்ந்துவிட்டதால் சிறுவயதில் நான் எப்படி இருந்தேன் என்பதை எப்போதோ எடுத்த சில புகைப்படங்கள் தான் அடையாளபடுத்துகின்றன. ஒருவேளை அவையும் இல்லாது போயிருந்தால் சத்தியாமாய் நான் எப்படி இருந்திருப்பேன் என்பது தெரியாமலேயே போயிருக்கும். புகைப்படம் எடுத்த அந்த நாலு பேருக்கு நன்றி. 

அம்மா விட்டுச்சென்ற சிறிது நேரத்திலேயே எனக்கு இருப்பு கொள்ளவில்லை, மெல்ல எழுந்து சுண்டு விரலை நீட்டினேன். 'ரீசஸ் போணுமா' என்றார் டீச்சர். 'ம்ம்ம்' என்றேன்.  புதுஇடம். புதுபள்ளி. பாத்ரூம் எங்கிருக்கிறதென எனக்குத் தெரியாதென்பதால் துணைக்கு என்னுடன் சேர்ந்திருந்த ஒரு சூட்டிப்பான மாணவியையும் அனுப்பிவைத்தார் ஆகச்சிறந்த என் ஆசிரியர். எந்த நேரத்தில் அப்படியொரு முடிவேடுத்தாரோ தெரியவில்லை இப்போவரைக்கும் நானும் அந்த மாணவியும் காதலித்தோம் என்றே நினைத்துக் கொண்டுள்ளான் கார்த்திக். 

வேறவழியே இல்ல தொடரும்...