வாழ்வின் மிகச்சிறந்த கொண்டாட்ட மனநிலையில் இருந்த நாட்கள்
எப்போது என யோசித்துப் பார்த்தால் அவையனைத்தும் எனது பால்யகால தீபாவளிகளை சுற்றியே
வலம் வருகின்றன. எதைப்பற்றிய கவலையும் இல்லாத வீட்டில், முழுக்க இனிப்பும்
சந்தோஷங்களுமாக நிறைந்திருந்த நாட்கள் அவை. புத்தாடைகளும் பட்டாசுகளும் அதிரசம்
சுடும் மணமும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பண்டிகையை நோக்கி நகர்த்திக் கொண்டிந்த நாட்கள்.
வருடம் முழுக்க எத்தனை ஏக்கங்கள் நிறைந்திருந்தாலும் அவையனைத்தையும்
கையில் கிடைத்த சரவெடியும் புதிதாக தைத்து வாங்கிய முழுக்கை சட்டையும்
மறக்கடிக்கச் செய்திருக்கும். குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது நமக்கான தீபாவளி
நினைவுகளை அசைபோட்டுக் கொண்டு இருந்திருப்போம்! முதல் வாரத்தில் வரப்போகும்
தீபாவளி நினைவுகளையும்; முடிந்த வாரத்தில் வந்துபோன தீபாவளி நினைவுகளையும்
பேசிப்பேசி சலித்துவிட்டுத்தான் அதற்கு அடுத்த வாரத்தினுள் நுழைந்திருப்போம்.
எத்தனை உற்சாகமாக பண்டிகைகளில் தொலைந்து போயிருந்தோம்.
கொண்டாட்டங்களில் மகிழ்ந்திருந்தோம். இப்போதெல்லாம் தீபாவளிகள் வருகின்றன?
பால்யம் தொலைத்த நாளில் இருந்து அமெரிக்கா வந்து சேர்ந்த நாள் வரையுமே
தீபாவளிகளை நினைவுகளில் மட்டுமே கொண்டாடிக்கொண்டு இருக்கிறேன். இருக்கிறோம்
என்பதுகூட ஓரளவிற்குச் சரியாகத்தான் இருக்கும் இல்லையா? தீபாவளி மறந்து போனாலும்
தீபாவளி கதைகள் மறந்து போகாமல் சுற்றி சற்றியேதான் வருகின்றன.
இனி ஒருபோதும் வாழ்க்கையில் தீபாவளியே இருக்கப் போவதில்லை என்று
முடிவு செய்த நாளில்தான் வந்து சேர்ந்தது நான் காலடி எடுத்துவைத்த புதிய நிலமும்
அந்த புதிய நிலத்தின் பாரம்பரிய வழக்கமான லாங் வீக்கென்ட் என்கிற திருவிழாவும்.
தீபாவளி என்ற வார்த்தையை நினைத்தால் எத்தனை எளிதாக ஒரு கொண்டாட்ட மனநிலையை அது
சார்ந்த நினைவுகளை உருவாக்கிக்கொள்ள முடிகிறதோ அதற்கு இணையான ஒரு வார்த்தை இந்த
லாங்-வீக்கென்ட்.
நமக்கு எந்த விதத்திலும் சம்மந்தமோ ஒட்டுதலோ இல்லாத ஓர் அந்நிய
நிலத்தில் நம்மால் வெகு எளிதாக அவர்களுடன் இணைந்து அவர்களுக்கு இணையான
சந்தோஷத்துடன் ஒரு பண்டிகையை கொண்டாட முடியும் என்றால் அது நிச்சயம் லாங் வீக்கென்ட்தான்.
லாங் வீக்கென்டின் வடிவமும் அதன் பரிமாணமும் தீபாவளியை ஒத்தே
அமைந்திருப்பது வியப்புக்குரிய ஒன்று. ஒரே வித்தியாசம் தீபாவளி முன்பைப் போல இல்லை
என்பதும் லாங் வீக்கென்ட் முன்பைப் போலவே இருக்கிறது என்பதும்.
நம்முடைய நிலத்தில் விடுமுறை என்பது பண்டிகைக் காலங்களுக்கானது. கூடு
அடைவதற்கானது. ஒருவருடத்தின் எந்தவொரு நாளில் வேண்டுமானாலும் ஊர் சுற்றத் தயாராய் இருக்கிறோம்.
ஆனால் பண்டிகை நாளை குடும்பத்தோடும் உறவுகளோடும் மட்டுமே கொண்டாட விரும்புகிறோம்.
இங்கே நிலமை அப்படியே நேரெதிர். இருக்கும் கூட்டை விட்டு - பறத்தலை பண்டிகையாக,
மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். கிடைக்கக்கூடிய விடுமுறை நாட்களை
பறத்தலுக்கான ஒன்றாக மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்.
ஆக நம் எதிரில் இருக்கும் லாங்-வீக்கென்ட்டை
நாம் எப்படி கழிக்கப் போகிறோம் என்பது நம்முடைய சாமார்த்தியத்தில் இருக்கிறது.
ஒருவேளை பயணம் என்று முடிவாகிவிட்டால் அதற்கான வேலைகளை எத்தனை துரிதமாக செயல்படுத்த
ஆரம்பிக்கிறோமோ அத்தனை நல்லது.
பயணத்தின் முதல் கேள்வி டெஸ்டினேஷன். எங்கு செல்வது என்பதை முதலில்
தீர்மானிக்க வேண்டும். யாரெல்லாம் உடன் வருகிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும்.
எத்தனை நாடகள் நமக்கு விடுமுறை. அதிகபட்சமாக எத்தனை மணித்துளிகளை அடுத்த வேலை
நாளில் இருந்து கடனாகப் பெறமுடியும் போன்ற விஷயங்கள் ஒரு பயணத்தை தீர்மானிக்கும்
முக்கிய தரவுகள்.
எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் எங்களுக்கு மொத்தமே மூன்று லாங்
வீக்கென்டுகள்தாம். மே மாதத்தில் வரக்கூடிய மெமோரியல் தினம், ஜூலை மாதத்து
சுதந்திர தினம் மற்றும் செப்டம்பர் மாதத்து தொழிலாளர்கள் தினம். நவம்பரும்
டிசம்பரும் வியாபாரத்திற்கான மிகமுக்கியமான மாதங்கள் என்பதால் அந்த மாதத்தில்
கிடைக்கக்கூடிய லாங் வீக்கென்ட் எதுவும் எங்களுக்கானதில்லை. அதுபோக இந்த விடுமுறை
நாட்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நிறுவனம் மற்றும் மாகாணங்களைப் பொறுத்தும் மாறும். எனவே
எங்கள் கைகளில் இருப்பது மூன்றே மூன்று பொன் முட்டைகள்.
அதிலும் இந்த மே மாதத்து பொன் முட்டை மிக முக்கியமானது. பொக்கிஷம்
போன்றது. ஓய்வற்ற பல வாரங்களுக்குப் பின் கிடைக்கும் முதல் லாங் வீக்கென்ட்.
அதனால்தான் இந்த தினத்தை தீபாவளி என்கிறேன். இந்த லாங் வீக்கெண்டில் எந்த ஒரு திசை
நோக்கியும் பயணிக்கவில்லை என்றாலும் கூட அது மிக முக்கியமானது. காரணம் எவ்வித
கவலையுமில்லாமல் கூட்டில் அடைந்து மூச்சுமுட்ட உறங்கித் திளைக்கலாம். இருப்பினும்
ஊர் சுற்றக் கிளபுவதே உசிதம். அதுவே நம் எதிரில் இருக்கும் லாங் வீக்கெண்டிற்கு
நாம் செய்யும் மரியாதை.
யாரெல்லாம் பயணிக்க இருக்கிறோம் என்ற பட்டியல் மிக முக்கியமானது. முதலில்
ஆம் என்று சொல்லும் கூட்டம் - செல்லக்கூடிய இடத்தைக் கேட்டதும் இரண்டாகப் பிரியும்.
பின் மூன்றாகப் பிரியும். அப்படிப் பிரிந்தாலும் பரவாயில்லை ஆளுகொரு இடமாக
போனாலும் பரவாயில்லை எங்காவது போக வேண்டும். அதுதான் குறிக்கோள்.
பொதுவாக கூட்டங்கள் உடைவது ஒரேயொரு காரணத்திற்காக மட்டுமே. குழந்தை
குட்டி இருக்கவன்லாம் ஒரு திசைக்கு போ. இந்த பேச்சிலர்ஸ்லாம் ஒரு திசைக்கு போ.
இப்படியாகத்தான் இருக்கும்.
கணவன் மனைவிகளாக, குடும்பம் குட்டிகளாக மேற்கொள்ளும் பயணத்தில்
ரிலாக்சேஷன் அதிகம் தேவை. குழந்தை அழுதால் வண்டியை நிறுத்த வேண்டும். மனைவி
முறைத்தால் நிறுத்த வேண்டும். இது இந்த பேச்சிலர்ஸ் பசங்களுக்கு கோவத்தைக்
கிளப்பக்கூடும். ஆக முதல் புரிந்துணர்விலேயே நீங்க தனி நாங்க தனி என்று
முடிவெடுப்பது சாலச்சிறந்தது. இரண்டும் இணைந்து ஒன்றுகொன்று முட்டிக்கொண்ட பயணங்களும்
உண்டு.
இந்த நிலப்பரப்பில் ஒரு குறுகிய வட்டத்தினுள் சிறுசிறு குழுக்களாக
வசித்து வருவதால் பரஸ்பர புரிதல்களோடு காயை நகர்த்துவதே பிற்காலத்திற்கு சிறந்ததாக
இருக்கும். நாளைக்கே ஒரே டீமில் ஒரே கிளையன்ட் மீட்டிங்கில் இருவரும்
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள வேண்டுமே. பெரும்பாலும் இந்த பேச்சிலர் பையன்கள்
குடும்பத்தோடு சேர மாட்டார்கள் என்பதால் இப்படியான பிரச்சனைகளுக்கான வாய்ப்புகள்
குறைவு.
ஒரு பயணத்தில் யாரேனும் நம்முடன் இணைந்து கொள்வதாகக் கூறினால்
மறுக்காமல் அவர்களையும் இணைத்துக் கொள்வதே வழக்கம். காரணம் இது பயணத்திற்கான
பருவம். யாருடைய துணையும் இல்லாமல் பயணம் செய்வது கொடுமையான ஒன்று. சிலருக்கு
இயலாத ஒன்றும் கூட. கூட்டமாக செல்வது எல்லாவிதத்திலும் பாதுகாப்பு உணர்வை
அளிக்கக்கூடியது. குறிப்பாக இந்த நிலம் குறித்த அறிமுகமில்லாத புதியவர்களுக்கு.
இடம் குறித்து முடிவு செய்யும்போது இரண்டு விஷயங்களை கவனிக்க
வேண்டும். சாலை மார்க்கமா இல்லை ஆகாய மார்க்கமா என்று. ஆகாய மார்க்கம் எப்போதுமே
செலவு வைக்கும் ஒன்று. சாலை மார்க்கம் அதிக நேரத்தை குடிக்கக்கூடியது. அதிலும்
டெக்சாஸ் போன்ற மாகாணத்தில் டெக்சாசின் எல்லையைக் கடப்பதற்கே ஆறேழு மணி நேரங்கள்
பயணம் செய்ய வேண்டி இருக்கும்.
ஆகாய மார்க்கம் என்றால் விமான டிக்கெட் லாங் வீக்கென்ட் வாரங்களில்
அதிகமாக இருக்கும். அதற்கு நோ. ஆக சாலை பயணமே ராம்ராஜுக்கு சல்யூட்.
இருப்பதிலேயே பெரிய சிக்கல் எங்கே போகிறோம் என்பதை முடிவு செய்வது.
ஏற்கனவே பயணம் செய்த இடத்திற்கு இரண்டாவது முறை பயணம் செய்வது அரிதினும் அரிது
என்பதால், நமக்கான தேவைகளை நமக்கான ஆராய்சிகளை நாம்தான் செய்ய வேண்டும். அதாவது
அனுபவஸ்தர்கள் என்று யாரும் நம்முடன் இருக்கப்போவதில்லை. ஆக முன்தயாரிப்புகள் மிக
மிக அவசியம்.
இந்த டெக்சாஸ் மாகாணத்தில் சுற்றிப் பார்க்கும் இடங்கள் மிகக் குறைவு.
காய்ந்து போன பாலைவனத்தில் பார்க்க வேண்டிய இடங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மாகாண
எல்லையைக் கடந்தே ஆக வேண்டும். அப்படிக் கடந்து குறைந்தது பத்தில் இருந்து
பன்னிரண்டு மணிநேரங்கள் பயணித்தால் மட்டுமே உருப்படியான ஒரு டெஸ்டினேஷனை அடைய
முடியும்.
ஒருவழிப் பாதையாக பன்னிரண்டு மணிநேர பயணம் என்றால் ஒரு வாகனத்திற்கு
கண்டிப்பாக இரண்டு டிரைவர்கள் தேவை. கடைசி நேரத்தில் சொதப்புவதற்கு என்றே
டிரைவர்கள் சிலர் உண்டு,
“எனக்கு திடிர்ன்னு இஸ்யூ வந்திருச்சு மாப்பு. அடுத்த டிரிப்ல ஜாயின்
பண்ணிக்கிறேன்” என்று ஜகா வாங்கிவிடுவார்கள். ஆக அதற்கு ஏற்ற வகையில் நல்ல
எண்ணிக்கையில் டிரைவர்கள் இருந்தால் பயணம் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும். ஒரு பயணம்
எப்போது வேண்டுமானாலும் சொதப்பலாம். அதன் வடிவம் தலைகீழாக மாறலாம் என்ற பரபரப்பு
கடைசி நிமிடம் வரைக்கும் இருந்துகொண்டே இருக்கும்.
“யாரெல்லாம்?”, “எங்கே?” போன்ற கேள்விகளுக்கு அடுத்ததாக எத்தனை
டிரைவர்கள் என்பதை முடிவு செய்துவிட்டால் பாதி பிரச்சனை முடிந்தது. ஆனால் இதற்கே
இரண்டில் இருந்து மூன்று வாரங்கள் மூச்சைத் தொலைக்க வேண்டி இருக்கும். ஒத்த
கருத்துள்ள கூட்டத்தை சேர்ப்பதும், அவர்களுக்குள் எழும் கருத்து வேறுபாடுகளை
சமாளித்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதிலும் பாதி நாட்கள் கழிந்திருக்கும். இதில்
யாரேனும் ஒருவர் கையில் இந்தப் பயணத்தின் கடிவாளம் இருக்க வேண்டும். அந்த கடிவாளம்
தன் இறுக்கத்தை தளர்த்துவிடாமல் கவனமாக பிடித்திருக்க வேண்டும். கழுத்தை
நெரித்தாலும் ஆபத்து கொஞ்சம் தளர்வடைந்தாலும் ஆபத்து.
அடுத்தது ஹோட்டல் புக் செய்வது. கண்டிப்பாக அது பட்ஜெட் ஹோட்டலாக
இருக்க வேண்டும். அதேநேரம் ஊரின் முக்கிய பகுதிகளின் அருகாமை ஹோட்டலாகவும் இருக்க
வேண்டும். ஹோட்டல் புக் செய்யும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது அங்கே
அந்நியர்களின் தொல்லை இருக்குமா என்பதை கவனிப்பது. கொஞ்சம் தவறினாலும் நம் உயிர்
நம் கையில் இல்லை.
இந்த நிலம் எத்தனைக்கு எத்தனை நம்மை பாதுகாப்பாக உணரச் செய்யுமோ
அத்தனைக்கு அத்தனை பாதுகாப்பு இன்மையையும் உணரச் செய்யும். ஆக நம் இரவு நம் கையில்
இருக்க வேண்டும் என்றால் நம் பாதுகாப்பு மிக முக்கியம்.
எங்கள் கூட்டத்திலேயே துப்பாக்கி முனையில் சிக்கி உயிர்
பிழைத்தவர்களின் கதைகள் கண்ணுக்கு எதிரில் உலாவுவதால் It’s a serious
business. No matter what,
you should be more careful என்பது
தாரக மந்திரம். குறிப்பாக பயணங்களின் போது. குழு மனநிலை இயல்பாகவே அந்த பாதுகாப்பு
வளையத்தை நமக்கு ஏற்படுத்தி விடும் என்றாலும் எங்கே தங்க இருக்கிறோம் என்பது
முக்கியமானது. இதையும் முடிவு செய்துவிட்டால் அடுத்த பெரிய வேலை முடிந்தது.
அடுத்தது நாம் பயணிக்க இருக்கும் புதிய நிலத்தில் எங்கெல்லாம் சுற்ற
இருக்கிறோம் என்று முடிவெடுப்பது. வெயிட் வெயிட் வெயிட்...
கொஞ்சம் முன்னர்... அந்நிய நிலத்தில் அந்நியர் போல என்றேன் இல்லையா
அது ஓரளவுக்கு உண்மை; ஓரளவுக்குப் பொய். ஊர் சுற்றுவதில் இந்த நிலத்துக்காரர்கள் காட்டும்
அதே ஆர்வத்தை நாமும் காட்டுவோம் என்றாலும் அவர்கள் காட்டும் பொறுமை நம்மிடம் கிடையாது.
ஊர்சுற்றலைப் பொறுத்தவரையில் இவர்கள் மிக நிதானமானவர்கள். ஒரு வாரம்
முழுவதையும்கூட ஒரு கடற்கரையிலோ அல்லது ஒரு மலைச்சரிவிலோ அல்லது ஆளற்ற
புல்வெளியில் டென்ட் அடித்தோ கூட தங்கி விடுவார்கள். ஆனால் நம் மனநிலை அப்படி
இல்லை. தேவைக்கு அதிகமாக நாம் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் அடுத்த இடத்திற்கானது.
இதிலே நமக்கான நியாய தர்மங்கள் எப்போதும் ஒன்றுதான். அடுத்தவாட்டி
இவ்ளோ காசு செலவழிச்சு இங்க வரவா போறோம். அதுனால எவ்ளோ பார்க்க முடியுமோ அவ்ளோ
பார்ப்போம். (ஒருவேளை அதே இடத்திற்கு மீண்டும் ஒருமுறை செல்லும் வாய்ப்பு
கிடைத்தாலும் அதே மனநிலையில்தான் செல்வோம் என்பது வேறுவிஷயம்...)
இங்கிருக்கும் அமெரிக்க நிறுவனங்களில் நேரடி ஊழியர்களாக
பணிபுரிபவர்களுக்கும், எங்களைப் போன்ற ஒப்பந்த ஊதியர்களாக பணிபுரிபவர்களுக்குமான
சலுகைகள் மிகப்பெரிய வேறுபாடுகளை கொண்டவை. நமக்கான பயண திட்டமிடல் அதன் உச்ச
கட்டத்தை எட்டி, மிக தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களில்
பெரும்பாலானவர்கள் தாங்கள் பயணிக்க வேண்டிய இடத்திற்கே சென்று
சேர்ந்திருப்பார்கள். காரணம் அவர்களுக்கான விடுப்பு நாட்கள் அதிகம்.
லாங் வீக்கென்ட்டை நெருங்க நெருங்க நம்மை நெருக்கும் பணி அழுத்தம்
ஒப்பீட்டளவில் குறைவு என்பதும் லாங் வீக்கென்ட் குறித்தான கொண்டாட்ட மனநிலைக்கு
மிக முக்கிய காரணம். ஒருவாரத்திற்கு முன்பிருந்தே பெரும்பாலான கிளையன்ட்டுகள்
அவர்களது டெஸ்க்கில் இருந்து பறந்திருப்பார்கள் என்பது எத்தனை ஆசுவாசமான தகவல் 😊 (
நான் கூறும் அத்தனை தகவல்களிலும் விதிவிலக்குகள் உண்டு என்பதை சேர்த்துக்
கொள்ளுங்கள்.)
ஆக நாம் தேர்வு செய்யும் இடம் பனிமலையாக இல்லாத பட்சத்தில் அந்த
பிரதேசங்களில் சுற்றுவதற்கு குறைந்தது பத்து இடங்களையேனும் தேர்வு செய்ய வேண்டும்.
அதில் எட்டையேனும் பார்த்துவிட வேண்டும். மேற்சொன்ன அத்தனை விஷயங்களும் முடிவான
பின், ஒவ்வொரு நாள் மாலையும் ஒவ்வொருவர் வீட்டில் கூட்டம் நடக்கும்.
அந்தக் கூட்டங்களில் லேப்டாப் ஒன்று தொலைக்காட்சியோடு இணைக்கப்பட்டு
நாம் செல்லும் இடங்களுக்கு கூகுள் மேப் வழியாக பயணிக்க வேண்டும். அந்த மேப்
நார்மல் டிராபிக்கில் எத்தனை காலத்தை குடிக்கும் அதிகபட்ச பீக் டிராபிக்கில்
எத்தனை நேரத்தைக் குடிக்கும் போன்ற ஆராய்சிகள் மிக முக்கியம். ஒரு இடத்தில்
இருந்து மற்றொரு இடத்திற்கான நகர்வில் buffer டைமும் அடக்கம் என்றாலும் ஒருவேளை தவிர்க்க இயலா
காரணத்தால் buffer டைமை
இழந்துவிட்டோம் என்றால் Buffer இடம்
ஒன்றையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அதை இழப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.
அமெரிக்கா மாகாணங்கள் அனைத்துமே சிலந்தி வலையைப் போன்ற
நெடுஞ்சாலைகளின் மூலம் இணைக்கப்பட்ட ஒன்று என்பதால் இடையில் குறுக்கிடும் எந்த
பெரிய ஊரில் இரவு தங்கல் என்பதையும் அந்த இடத்தில் கருத்தில்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நகர்விலும் ஒவ்வொரு ஆலோசனை மிக நீண்ட நேரம் பரிசீலிக்கப்படும். இதன்
இறுதிகட்டமாக நம் பயணத்தின் வடிவம் கூகுள் மேப் துணையோடு விர்ச்சுவலாக தயாராகி
இருக்கும். இப்போதே ஒரு டிரிப் சென்று வந்த மனநிலை நம்முள் ஏற்பட்டிருக்கும்.
உப்ப்ப்ப் எத்தனை ஆசுவாசம்.
ஒரு தீபாவளிக்குத் தயாராவதை போல் தயாராகியாயிற்று இல்லையா. புதுத்துணி
எடுத்தாயிற்று, சீடை அதிரசம் முறுக்கு சுட்டாயிற்று. பட்டாசு வாங்கியாயிற்று
அடுத்து? புத்தாடை உடுத்தி புதுபலகாரம் உண்டு வெடி வெடிக்க வேண்டும் இல்லையா?
மூச்சை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள். விஷயத்திற்கு வருகிறேன். சரியாக
பட்டாசு வெடிக்கும் போது மழை வந்துவிட்டால்?
பொதுவாக லாங் வீக்கென்ட் என்பது வெள்ளிகிழமையோ அல்லது திங்கட் கிழமையோ
வரக்கூடிய ஒன்று. பெரும்பாலும் திங்கட்கிழமைகளில் வருவது என்பதால் அதற்குக்
முந்தைய வெள்ளிக்கிழமை மதியத்தில் இருந்தே புறப்பாட்டிற்கான வேலைகளை துவக்கிவிட
வேண்டும்.
பயணத்திற்கான திட்டமிடலில் ஒவ்வொரு நாளும் ஒரு சிக்கல் என்றால்
உச்சபட்ச சிக்கல்கள் அனைத்தும் சரியாக இந்த வெள்ளிக்கிழமைகளில் வந்து நிற்கும்.
என்றைக்குமே வராத அத்தனை இஸ்யூவும் அன்றைக்கு வரும். இதயம் அன்றைக்கு மட்டும் இருமடங்கு
வேகத்தில் துடிக்கும்.
சாலைவழிப் பயணம் என்பதால் ரெண்டல் கார் எடுக்கும் சம்பிரதாயம் மிக
முக்கியமான ஒன்று. பல ரெண்டல் கார் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள்
வாகனங்களை வாடகைக்கு விடுவதால் மிகத்தீவிரமாக களப்பணி செய்தால் நல்ல வாகனம்
அடிமாட்டு விலைக்கு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.
இந்த ரெண்டல் கார் எடுப்பதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நாம்
வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் எடுப்பதைவிட அருகில் இருக்கும் விமான நிலைய
ரெண்டல் கார் சென்டரில் எடுத்தால் விலை சல்லிசாக இருக்கும். தரமாகவும் இருக்கும்.
ஒரே விஷயம் தூரம் மற்றும் சென்றுவர ஆகும் நேரம். இவையனைத்தும் நம்
பயணத்திட்டத்தின் குறிப்பிட்ட அம்சங்கள். எங்கே சொதப்பினாலும் ஒட்டுமொத்த
திட்டமும் அடிவாங்கிவிடும்.
இந்த ரெண்டல் கார் எடுக்கப்போகும் சமயங்களில் கூட குளறுபடிகள்
நேர்வதுண்டு. சரியாக அந்த நிமிடத்தில் யாருக்கேனும் வேலை வந்துவிட, நீங்க
எடுத்துட்டு வாங்க நான் ட்ரிப்ல ஜாயின் பண்ணிக்கிறேன் என்று சொல்லக்கூடும். இப்படி
சொல்வதில் சிக்கல் இல்லை. சிக்கல் எல்லாம் அந்த நபரை அடிஷனல் டிரைவராக சேர்ப்பதில்
வந்து சேரும்.
ரெண்டல் வாகனத்தை எடுப்பதற்கு நம்முடைய ஓட்டுநர் உரிமம் அந்த
வாகனத்துடன் இணைக்கபட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி குற்றம். இப்போது
அப்படி ஒரு டிரைவர் வரமாட்டேன் என்று சூழ்நிலை காரணமாக அடம்பிடித்தால் அந்த சூழலை
உங்களுக்கு சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அது உங்கள் சாமார்த்தியம்.
வெளிபட்டையாகச் சொன்னால் ஆள்மாறாட்டக் கேஸில் என்னை உள்ளே தள்ளிவிடுவார்கள் 😉 ஆகவே
நீங்களாக புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொண்டீர்கள்தானே?
ஆன்சைட் வந்த முதல் வருட முதல் லாங் வீக்கென்ட்டிற்கு கார் எடுக்க
சென்றிருந்தபோது என் மானேஜரிடம் இருந்து ஒரு கால் வந்தது “எங்க இருக்க, நம்ம
கிளையண்ட் ஒரு எஸ்டிமேட் கேக்கிறாங்க உடனே கொடுக்கணும். தர முடியுமா?” என்று.
நல்லவேளையாக டிரிப்பிற்கு கிளம்பியிருக்கவில்லை. கிளம்பியிருந்தால்?
ஊரைவிட்டு வெளியே செல்கிறோம் என்று முடிவாகிவிட்டால் லேப்டாப்பை
மடியில் கட்டிக்கொண்டேதான் அலைய வேண்டும். வேறுவழியே இல்லை. வேறுசில
சந்தர்ப்பங்களில் பயணம் முழுக்க லேப்டாப்பும் கையுமாக வந்த நண்பர்களும் உண்டு.
ஒரேயொரு நல்லவிஷயம் எதிர்படும் அத்தனை உணவகங்களிலும் free wifi
இருக்கும். எவ்வளவு நேரம்
வேண்டுமானாலும் அங்கு அமர்ந்து ஒரு ஜாபை ரீஸ்டார்ட் செய்யவோ ஒரு இஸ்யூவிற்கு
சொல்யூசன் கொடுக்கவோ முடியும். கெட்ட விஷயம் என்னவென்றால்... அதுதான் கெட்ட
விஷயமும்.
ஒரு கூட்டம் ரெண்டல் கார் எடுக்கச் செல்லும் சம நேரத்தில் இன்னொரு
கூட்டம் வால்மார்ட்டை நோக்கி ஓடியிருக்கும். பயணத்திற்கான நொறுக்குத் தீனிகள்,
தண்ணீர் புட்டிகள் என எதுவெல்லாம் தேவையோ அதையெல்லாம் வாங்கி நிரப்ப வேண்டியிருக்கும்.
அடுத்த மூன்று நாட்களுக்கு விடுதலை என்ற உணர்வே அலாதியாக இல்லை. அத்தனையும் தயார்
என்று நம்மை தயார் செய்யும் மனநிலை காரை ஸ்டார்ட் செய்யும் வரையிலும்
வந்திருக்காது.
காலம் கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்து மதியம் மூன்று மணிக்கு ஊரைவிட்டு
கிளம்பலாம் என்று முடிவு செய்து, மாலை ஆறு மணிக்கு “இன்னும் எவ்ளோ நேரம்”, என்று
யாரேனும் ஒருவர் நெருப்பைக் கிள்ளி எறிந்து இரவு எட்டு மணிக்கு மிகப்பெரிய
வெற்றிக்குறியோடு காரை ஸ்டார்ட் செய்தோம் என்றால்
இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர்காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அடடா
நானே நானாய் இருப்பேன்
நாளில் போராய் வசிப்பேன்...
என்று வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது அத்தனை நேரம் பட்ட
கஷ்டமெல்லாம் மறைந்து
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்ன்னு மனசு நிறைய ஒரு சந்தோசம். ப்ளோனோ கடந்து
டாலஸ் கடந்து யூ எஸ் செவண்டி பைவில் ஏறி டேக் நெக்ஸ்ட் ரைட் ஆப்டர் டூ ஹன்டர்ன்ட்
மைல்ஸ் என்று கூகுள் சொல்லும்போது
இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர்காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அடடா
லாங் வீக்கென்ட்டிற்கு சென்று வருவது அல்ல வெற்றி. செல்வதற்காக அந்த
காரை ஸ்டார்ட் செய்வதே வெற்றி. 😊
*****
வெயிட் வெயிட் வெயிட் இவை அனைத்தும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் லாங் வீக்கென்ட் என்ற ஒன்று இருந்திருந்தால் இதெல்லாம்
நடந்திருக்கும். போனவாரத்தில் தற்செயலாக காலண்டர் பார்க்கும்போது தான் கவனித்தேன் வருகிற
மே இருபத்தி ஐஞ்சு லாங் வீக்கென்ட் என்று. அப்டியிருக்க எங்க மேல சொன்னது அனைத்தையும்
எப்படி நடத்திப் பார்ப்பது?
இந்த வருஷம்
தீபாவளி இருக்கு கொண்டாட்டம் இல்லன்னு கம்முன்னு வீட்டிலேயே உக்கார வேண்டியதுதான்.
வேறுவழி.
ஒருவேள எல்லாம்
ஒழுங்கா இருந்திருந்தா இந்நேரம் இந்த வெள்ளிக்கிழம சாயங்கலாம் புது டிரஸ்ஸு புதுப்
பலகாரம் எல்லாம் சாப்பிட்டுட்டு பட்டாசா பட்டாசு வெடிக்க போயிருக்கலாம். ஹ்ம்ம்ம்.
Go Corona Go…
Go Corona Go…